IPL 2021 : 500 பவுண்டரிகள் அடித்து சுரேஷ் ரெய்னா சாதனை..
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சுரேஷ் ரெய்னா 500 பவுண்டரிகளை அடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு பிறகு, முக்கியமான வீரராக வலம் வருபவர் சுரேஷ் ரெய்னா. `சின்ன தல’ என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் ரெய்னா ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடியவர். பல போட்டிகளில் சென்னை அணிக்கு தனி ஆளாக வெற்றியைத் தேடித்தந்துள்ளார்.
ஐ.பி.எல். தொடரில் இதுவரை 199 ஆட்டங்களில் ஆடியுள்ள ரெய்னா மொத்தம் 5 ஆயிரத்து 489 ரன்களை குவித்துள்ளார். ஒரு போட்டியில் மட்டும் தனது அதிகபட்சமாக 100 ரன்களை குவித்துள்ளார். இதுவரை மொத்தமாக 39 அரைசதங்கள் , 1 சதத்தை குவித்துள்ள சுரேஷ் ரெய்னா கடந்த போட்டியில் இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணிக்காக களமிறங்கி 3 பவுண்டரிகளுடன் 17 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்த ஆட்டத்திற்கு முன்னதாக, ஐ.பி.எல். தொடரில் மட்டும் ரெய்னா 499 பவுண்டரிகளை அடித்திருந்தார். இந்த போட்டியில் 3 பவுண்டரிகள் அடித்தது மூலம் ரெய்னா, ஒட்டுமொத்த ஐ.பி.எல். போட்டிகளிலும் 502 பவுண்டரிகளை அடித்துள்ளார். ஒட்டுமொத்தமாக பவுண்டரிகள் அடித்தவர்கள் பட்டியலில் சுரேஷ் ரெய்னா 4-வது இடத்தில் உள்ளார். 181 ஆட்டங்களில் ஆடியுள்ள ஷிகர் தவான் 624 பவுண்டரிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.