Sumit Nagal: ஆண்டு செலவு ரூ.1 கோடி, வருமானம் ரூ.65 லட்சம் மட்டுமே.. காசு இல்லாமல் தவிக்கும் நம்பர் 1 இந்திய டென்னிஸ் வீரர்!
உலக தரவரிசையில் 159 வது இடத்திலும், இந்திய தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் உள்ள சுமித் நாகல் தற்போது கடுமையான நிதி நெருக்கடியில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரராக வலம் வருபவர் சுமித் நாகல். இவர் ஆண்டுதோறும் உலகம் முழுவதும் நடக்கும் ஏடிபி போட்டிகளில் பங்கேற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்து வருகிறார். விளையாட்டு உலகின் ஜொலிக்கும் பெரும்பாலான வீரர்கள் பொதுவாக நல்ல வசதி படைத்தவர்களாக இருப்பார்கள் என்றும், சொகுசான வாழ்க்கையை வாழ்வார்கள் என்றே நாம் நினைக்கிறோம். ஆனால், இந்திய டென்னிஸின் உண்மையான நிலைமையே வேறு.
உலக தரவரிசையில் 159 வது இடத்திலும், இந்திய தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் உள்ள சுமித் நாகல் தற்போது கடுமையான நிதி நெருக்கடியில் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், “ தற்போது எனது வங்கி கணக்கில் வெறும் 80 ஆயிரம் மட்டுமே உள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் என்ன பணம் இருந்ததோ அதே அளவு பணம் தற்போதும் எனது வங்கிக் கணக்கில் உள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் என் நண்பர்களான சோம்தேவ் தேவ்வர்மன் மற்றும் கிறிஸ்டோபர் மார்க்விஸ் நிதி உதவி அளித்தனர். எனக்கு பெரிய ஸ்பான்ஸர் யாரும் இல்லை. நான் ஐஓசிஎல்லில் இருந்து மாதச் சம்பளம் வாங்குகிறேன், ஆனால் அதுவும் இப்போது போதவில்லை.
கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவின் நம்பர் ஒன் வீரராக இருந்தும், எனக்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை. கிராண்ட்ஸ்லாம் போட்டிக்கு தகுதி பெற்ற ஒரே இந்திய ஒற்றையர் வீரர் நான்தான், கடந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டியிலும் வெற்றி பெற்றேன். இருந்த போதிலும், அரசு என்னை டாப்ஸ் பட்டியலில் சேர்க்கவில்லை. காயம் மற்றும் இரண்டுமுறை எனக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்ட காரணத்தினால் எனது தரவரிசை வீழ்ச்சியடைந்தபோது, எனக்கு உதவ யாரும் முன்வரவில்லை என்று நான் நினைக்கிறேஎன். நான் மீண்டும் வருவேன் என்று யாரும் நம்பவில்லை. நான் என்ன செய்தாலும், எவ்வளவு முயற்சி மேற்கொண்டாலும் யாரும் எனக்கு உதவ முன்வராததால் வெறுப்பாக இருக்கிறது. இந்தியாவில் நிதி உதவி பெறுவது மிகவும் கடினம். சத்தியமாக, எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. பணம் இல்லாமல் நான் பெரும்பாலான போட்டிகளில் விளையாடுவதை விட்டுக்கொடுத்தேன்.” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “சேமிப்பு என்ற பெயரில் என்னிடம் எதுவும் இல்லை, நான் உடைந்து போகிறேன்.கடந்த இரண்டு வருடங்களாக நான் அதிகம் சம்பாதிக்கவில்லை.” என்று தெரிவித்தார்.
ஆண்டு செலவு ரூ.1 கோடி, வருமானம் ரூ.65 லட்சம் மட்டுமே
தனது சம்பாத்தியம் மற்றும் செலவுகள் குறித்து சுமித் நாகல் கூறுகையில், ”நான் எதைச் சம்பாதிக்கிறேனோ அதை என் விளையாட்டுக்காக செலவு செய்கிறேன். எனது ஆண்டு செலவு சுமார் 1 கோடி ரூபாய். என்னிடம் 1 பயிற்சியாளர் மட்டுமே உள்ளார். எங்கே பிசியோ வைத்துகொண்டால் கூட அதிக செலவு ஆகிவிடுமோ என்ற பயத்தில் அவரை வேண்டாம் என்று மறுத்து விட்டேன்” என்றார்.
இந்தாண்டு ஜனவரி முதல் சுமித் நாகல் இதுவரை 24 டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்று ரூ.65 லட்சம் சம்பாதித்துள்ளார். இதில், அதிகபட்சமாக யுஎஸ் ஓபனில் மிகப்பெரிய பரிசுத் தொகையைப் பெற்றார். யுஎஸ் ஓபன் தகுதிச் சுற்றின் முதல் சுற்றில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதில் நாகலுக்கு சுமார் ரூ.18 லட்சம் பரிசுத் தொகை கிடைத்தது. சுமித் நாகல் கடந்த சில ஆண்டுகளாக ஜெர்மனியில் உள்ள நான்செல் டென்னிஸ் அகாடமியில் டென்னிஸ் பயிற்சி செய்து வந்தார். பண நெருக்கடி காரணமாக அவரால் இங்கு பயிற்சி செய்ய முடியவில்லை.