FIH Hockey Olympic Qualifiers: இத்தாலியை துவைத்து அரையிறுதிக்குள் நுழைந்த இந்திய மகளிர் ஹாக்கி அணி! 5-0 என்ற கணக்கில் வெற்றி!
ஆட்டத்தின் முதல் நிமிடத்திலேயே இந்தியா பெனால்டி கார்னர் வாய்ப்பை பெற்ற நிலையில், உதிதா அதை கோலாக மாற்றி இந்திய அணிக்கு முதல் கோலை பெற்று தந்தார்.
பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான மகளிர் ஹாக்கி தகுதி சுற்று ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதியது. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழைந்துள்ளது. இந்த போட்டியில் டாப்-3 இடங்களை பிடிக்கும் அணிகள் வருகின்ற பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும்.
ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி தகுதிச்சுற்று:
ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடந்து வரும் எஃப்.ஐ.எச் மகளிர் ஹாக்கி தகுதிச் சுற்றில் இந்திய அணி 5-0 என்ற கோல் கணக்கில் இத்தாலி அணியை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது. இதையடுத்து, இந்திய மகளிர் அணி வருகின்ற வியாழக்கிழமை அரையிறுதியில் ஜெர்மனியை எதிர்கொள்கிறது.
ஆட்டத்தின் முதல் நிமிடத்திலேயே இந்தியா பெனால்டி கார்னர் வாய்ப்பை பெற்ற நிலையில், உதிதா அதை கோலாக மாற்றி இந்திய அணிக்கு முதல் கோலை பெற்று தந்தார். அதன்பிறகு தொடர்ந்து எழுச்சியுற்ற இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அதிக நேரம் பந்தை தங்கள் வசம் வைத்திருந்தனர். ஒரு பெனால்டி கார்னரில் கூட கோல் அடிக்க இத்தாலி அணிக்கு இந்திய அணி வாய்ப்பளிக்கவில்லை.
தொடர்ச்சியாக 41வது நிமிடத்தில் தீபிகா இரண்டாவது கோலை அடித்து இந்திய அணியின் கோல் எண்ணிக்கையை உயர்த்தினார். இது பெனால்டி ஷூட் அவுட் ஆகும். ஆட்டத்தின் 45வது நிமிடத்தில் சொந்த மண்ணில் களமிறங்கிய சலிமா டெட்டே சிறப்பாக ஃபீல்டு கோல் அடித்து அடிக்க, கடைசி காலிறுதியில் இந்தியாவுக்கான நான்காவது கோலை அடித்தார் நவ்நீத் கவுர். 53வது நிமிடத்தில் இந்திய அணி, மேலும் ஒரு அடிக்க, போட்டியின் பார்வையாளர்கள் ஸ்டேடியத்தில் ஆரவாரம் செய்தனர்.
முதல் போட்டியில் அமெரிக்காவிடம் இந்திய அணி தோல்வி:
முதல் ஆட்டத்தில் அமெரிக்காவிடம் 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்த இந்திய அணி, அடுத்த போட்டியில் தன்னை விட பலம் வாய்ந்த அணியான நியூசிலாந்தை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. நேற்றைய போட்டியில் இத்தாலியை வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது. நேற்று நடைபெற்ற நான்கு போட்டிகளில் நான்கு அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றன. இந்தியா வருகின்ற வியாழக்கிழமை ஜெர்மனியையும், ஜப்பான் அமெரிக்காவை எதிர்கொள்கிறது.
அரையிறுதிக்கு சென்ற அணிகளின் விவரம்:
எஞ்சிய மற்ற ஆட்டங்களில் ஜெர்மனி 10-0 என்ற கோல் கணக்கில் செக் குடியரசை வீழ்த்தி முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது. ஜெர்மனி அபாரமாக விளையாடி செக் வீராங்கனைகளை ஒரு பெனால்டி கார்னர் கூட எடுக்க விடவில்லை. ஜெர்மனி சார்பில் சோன்ஜா ஜிம்மர்மேன் ஹாட்ரிக் கோல் அடித்தனர். 42வது நிமிடத்தில் பீல்டு கோல் அடித்த பிறகு, 46வது மற்றும் 52வது நிமிடங்களில் பெனால்டி ஸ்ட்ரோக்கில் கோல் அடித்தார். Jette Fleischutz (22வது மற்றும் 44வது நிமிடம்), Charlotte Stoppenhorst (19வது மற்றும் 43வது நிமிடம்) ஆகியோர் தலா இரண்டு கோல்களை அடித்தனர். இவர்கள் தவிர, நைக் லோரன்ஸ் (39வது), பாலின் ஹெய்ன்ஸ் (54வது), செலின் ஒருஸ் (55வது) ஆகியோர் கோல் அடித்தனர்.
இரண்டாவது ஆட்டத்தில் ஜப்பான் 2-0 என்ற கோல் கணக்கில் சிலினியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. முதல் நிமிடத்திலேயே கனா உராடா ஜப்பான் அணிக்காக முதல் கோலை அடித்தார். ஆட்டத்தின் 23வது வினாடியில் அவர் இந்த ஃபீல்டு கோலை அடித்தார். இதன்பின், 23வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை கோலாக மாற்றிய மியு ஹசேகாவா அணிக்கு பங்களிப்பை தந்தார். இப்போது அரையிறுதியில் அமெரிக்காவை எதிர்கொள்கிறது
நியூசிலாந்தை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, அமெரிக்கா அரையிறுதிக்கு முன்னேறியது. பலவீனமான அணியாக கருதப்பட்ட அமெரிக்கா, மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. தோல்விக்கு பிறகு நியூசிலாந்து வீரர்கள் கதறி அழுதனர். இரண்டு அரையிறுதிப் போட்டிகளும் ஜனவரி 18ஆம் தேதி அதாவது நாளை நடைபெறுகிறது.