(Source: ECI/ABP News/ABP Majha)
‛இந்தியா ஜெயிக்கும்... ஆனால் ஜொலிக்குமானு தெரியல’ -சுனில் கவாஸ்கர்
வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா போன்று இந்திய அணி ஆதிக்கம் செலுத்த முடியாது என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு தயாராகி வருகிறது. இதற்காக இந்திய அணி இங்கிலாந்து சென்றுள்ளது. வரும் 18ஆம் தேதி இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையே சவுதாம்டன் நகரில் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. இந்தச் சூழலில் கடந்த வாரம் ஐசிசியின் இறுதி டெஸ்ட் தரவரிசைப்பட்டியலில் இந்திய அணி தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக முதலிடம் பிடித்து சாதனைப் படைத்தது. இந்திய கிரிக்கெட் அணி 2017 ஆம் ஆண்டு முதல் ஆண்டிற்கான இறுதிடெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தில் இருந்து வருகிறது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலிய அணிகளை போல் ஆதிக்கம் செலுத்த முடியாது என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, " தற்போது உள்ள இந்திய கிரிக்கெட் அணி மிகவும் திறமை வாய்ந்த கிரிக்கெட் அணி. ஆனால் அதில் சில குறைகள் உள்ளன. 70 மற்றும் 80களின் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடினால் அனைத்திலும் வெற்றி பெறும். அதேபோல் ஆதிக்கம் செலுத்திய ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5ல் 4 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெறும். அந்த மாதிரி தற்போதைய இந்திய அணியால் வெல்ல முடியாது. ஏனென்றால் இந்திய அணியில் தொடர்ச்சியாக நல்ல ஃபார்மை வெளிப்படுத்தவில்லை. ஒரு போட்டியில் மோசமான தோல்வி அடைகிறது. அடுத்தப் போட்டியில் சிறப்பான வெற்றியை பெறுகிறது.
11 பேர் கொண்ட கிரிக்கெட் அணியில் எப்போதும் அனைவரும் சிறப்பான ஃபார்மில் இருக்க முடியாது. அதில் 4 பேர் சிறப்பாக விளையாடினால் அணி வெற்றி பெற முடியும். அதாவது ஒரு அணியில் 2 பந்துவீச்சாளர்கள் மற்றும் 2 பேட்ஸ்மேன்கள் நன்றாக விளையாடினார் வெற்றி பெற முடியும். இந்த மாதிரி அணி தான் இந்திய அணி. ஏனென்றால் இந்திய அணியில் இருக்கும் வீரர்கள் அவ்வளவு திறமை வாய்ந்த வீரர்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆதிக்கம்:
1970 மற்றும் 1980கள் வரை கிரிக்கெட் விளையாட்டில் வெஸ்ட் இண்டீஸ் கொடி கட்டி பறந்தது. குறிப்பாக கிளைவ் லாய்ட், மல்கம் மார்ஷல், வால்ஷ், கர்ட்லி ஆம்ப்ரோஷ், விவியன் ரிச்சர்ட்ஸ் என பெரிய வெற்றிக் கூட்டத்தை அந்த அணி பெற்று இருந்தது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணியை பார்த்து மற்ற அணிகள் பயந்து நடங்கும் சூழல் இருந்து வந்தது. முதல் இரண்டு உலகக் கோப்பை தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி வென்று அசத்தியது. 1975 மற்றும் 1979 உலகக் கோப்பையை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி 1983ஆம் ஆண்டிலும் இறுதிப் போட்டிக்கு வந்தது. எனினும் அப்போது இந்திய அணியிடம் தோல்வி அடைந்து கோப்பையை பறிக் கொடுத்தது. அதன்பின்னர் 1980களின் பிற்பாதியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆதிக்கம் குறைய தொடங்கியது.
ஆஸ்திரேலிய அணியின்ஆதிக்கம்:
1990களின் பிற்பாதியில் கிரிக்கெட் விளையாட்டில் ஆஸ்திரேலியா அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்தது. குறிப்பாக 1999 உலகக் கோப்பை தொடர் முதல் தொடர்ச்சியாக மூன்று உலகக் கோப்பைகளை வென்று அசத்தியது. அதேபோல் அக்டோபர் 1999 முதல் நவம்பர் 2007 வரை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. அதில் 72 போட்டிகளில் வெற்றியும், 11 போட்டிகளில் டிராவும் செய்தது. ஒருநாள் போட்டிகளில் உலகக் கோப்பை மட்டுமல்லாமல் இரண்டு முறை(2006,2009) சாம்பியன்ஸ் கோப்பை தொடரையும் வென்று அசத்தியது. அந்த அணியில் மேத்யூ ஹெய்டன், கில்கிறிஸ்ட், சைமண்ட்ஸ், மைக்கேல் பெவன், ரிக்கி பாண்டிங், டெமியன் மார்ட்டின், ஸ்டீவ் வாக், மெக்ராத், வார்ன், கிலேஸ்பி போன்ற ஜாம்பவான் கூட்டணி இடம் பெற்று இருந்தது. அத்துடன் இந்த அணி 2002ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக 7 ஆண்டுகள் டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் வகித்து சாதனைப் படைத்தது.
2010ஆம் ஆண்டு முதல் முறையாக இந்திய கிரிக்கெட் அணி ஆண்டின் இறுதி டெஸ்ட் தரவரிசைப்பட்டியலில் முதலிடம் பிடித்து ஐசிசி மேஸ் பட்டத்தை பெற்றது. அதன்பின்னர் இந்திய அணி சற்று பின்னடவை சந்தித்தது. பின்னர் மீண்டும் 2017ஆம் ஆண்டு முதல் வெற்றிகளை குவிக்க ஆரம்பித்து வருகிறது. அதேபோல் தற்போது நடைபெற உள்ள முதல் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரையும் வெல்லும் என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
மேலும் படிக்க:தோனியின் ஹெலிகாப்டர் ஷாட் அடிக்கும் சிறுவன்- வைரல் வீடியோ !