World Test Championship Final 2021: கனவை எட்டி பிடித்த நியூசிலாந்து - முதல் ஐசிசி கோப்பை...
144 ஆண்டு கால டெஸ்ட் வரலாற்றில், முதல் முறையாக நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது நியூசிலாந்து அணி.
கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி தனது முதல் ஐசிசி கோப்பையை வென்று தனது நீண்ட கால தாகத்தை தீர்த்துக்கொண்டுள்ளது. சவுதாம்ப்டன் மைதானத்தில் நடைபெற்ற இறுதி போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.
கிரிக்கெட் உலகில் ஒரு அணியிடம் தோல்வியுற்றதற்கு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சற்றே குறைந்து வருத்தப்படுவார்கள் என்றால், அது நிச்சயம் நியூசிலாந்து அணியாக தான் இருக்க முடியும். கிரிக்கெட் ஒரு ஜென்டில் மேன் கேம் என்றால், அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு நியூசிலாந்தே. பெரிய கொண்டாட்டங்கள், ஆக்கிரோஷம் நிறைந்த வார்த்தைகள், மைண்ட் கேம்ஸ் எதுவுமே இருக்காது, களத்தில் பேட் மற்றும் பால் ஆகியவை மட்டுமே பேசும். இன்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வென்ற பின் களத்தில் இருந்த நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் & ராஸ் டைலர் இருவரும் கைகளை லேசாக முட்டிக்கொண்டனர். அவர்களின் செலிப்ரேஷன் முடிந்தது.
தொடரும் விராட் கோஹ்லியின் கனவு
கேப்டனாக ஐசிசி கோப்பையை வெல்ல வேண்டும் என்ற விராட் கோலியின் கனவு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 2007 19-வயதிற்குற்பட்டோர் உலகக்கோப்பை, 2011 உலகக்கோப்பை, 2013 சாம்பியன் ட்ராபி இது அனைத்தையுமே ஒரு சக இந்திய வீரராக விராட் கோஹ்லி கையில் ஏந்தியுள்ளார். ஆனால் உலகின் மிக சிறந்த பேட்ஸ்மேனாக கருதப்படும் விராட் கோஹ்லியால், அணியை வழிநடத்தும் தலைவனாக கோப்பைகளை இன்று வரை கையில் ஏந்த முடியவில்லை. 2017 சாம்பியன்ஸ் ட்ராபி இறுதி போட்டி, 2019 உலகக்கோப்பை அரையிறுதி, 2021 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி என விராட் கோஹ்லியின் தேடல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
6வது நாள் ஆட்டம் - டிராவில் முடிவடையும் என்று கணிக்கப்பட்டது
டெஸ்ட் போட்டியின் வரலாற்றில் 1979 பிறகு 6வது நாள் ஆட்டம் நடைபெற்றது, 5வது நாள் ஆட்டத்தை 64/2 என நிறைவு செய்திருந்த இந்திய அணி, நம்பிக்கையுடன் இன்றைய நாள் ஆட்டத்தை தொடங்கியது. களத்தில் விராட் கோஹ்லி 8 ரன்களுடனும், புஜாரா 12ரன்களுடனும் தொடங்கினர். மேற்கொண்டு 5 ரன் அடித்து கேப்டன் விராட் கோஹ்லியும், 3 ரன் அடித்து புஜாராவும் ஆட்டமிழந்தனர். சில ஓவர்களில் இந்திய அணியின் நிலை 72/4 என மாறியது. ரஹானே 15, ஜடேஜா 16, அஸ்வின் 7 என ஆட்டமிழக்க ரிஷப் பந்த் மட்டுமே ஓரளவு விளையாடி 41 ரன்கள் அடித்தார். இந்நிலையில் இன்று வெறும் 106 ரன்கள் அடித்து 8 விக்கெட்டை பறிகொடுத்து, 170 ரன்களில் சுருண்டது இந்திய அணி. இதில் மற்றொரு மோசமான விஷயம் என்னவென்றால் இந்திய அணி 2 இன்னிங்ஸ் விளையாடி, அதில் ஒரு வீரர் கூட அரைசதம் அடிக்கவில்லை.
139 ரன்கள் வெற்றி இலக்கு
இந்த டெஸ்ட் போட்டியின் பெரும்பாலான நேரத்தை வானிலை விளையாடி விட, மீதமுள்ள சொற்ப காலகட்டத்தில் முடிவு ஏற்படுவது சாத்தியமற்றது என பலர் எண்ணினர். ஆனால் இந்திய அணியின் பேட்டிங் சொதப்பல், 6வது நாள் ஆட்டத்தில் சாம்பியன் உருவாவதை நிச்சயமாகியது. 53 ஓவர்களில் 139 ரன்கள் அடித்தால் சாம்பியன் என்ற ஓரளவு எளிதாக எட்டக்கூடிய இலக்கை துரத்திய நியூசிலாந்து அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர் டாம் லாதம் 9, டேவான் கான்வே 19 என துவக்க ஆட்டக்காரர்கள் இருவரும் வெளியேற இந்திய அணிக்கு லேசான ஒளி தெரிந்தது. ஆனால் நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் அரை சதம் அடித்து 52 ரன்களுடனும், அனுபவ வீரர் ராஸ் டைலர் 47 ரன்களுடனும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்து நியூசிலாந்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர். மேலும் நியூசிலாந்து அணி 84 ரன் அடித்திருந்த போது, ராஸ் டைலர் கொடுத்த எளிய கேட்சை கோட்டை விட்டார் புஜாரா. 2015 உலகக்கோப்பை இறுதி, 2019 உலகக்கோப்பை இறுதி, 2011 உலகக்கோப்பை அரையிறுதி என தள்ளி போன நியூசிலாந்து அணியின் சாம்பியன்ஷிப் கனவு, இறுதியாக 2021 உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் நிறைவேறியது.