IND vs ENG: இந்திய அணி பயிற்சி ரத்து... சிக்கலில் கடைசி டெஸ்ட் போட்டி
சரியாக 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஓவல் மைதானத்தில் கோலி தலைமையிலான இந்திய அணி போட்டியை வென்று அசத்தியது. இதனால், ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-1 என முன்னிலை பெற்றுள்ளது.
இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடரில், செப்டம்பர் 10-ம் தேதி தொடங்க இருக்கும் கடைசி டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இந்திய அணி இன்று பயிற்சி மேற்கொள்ள இருந்தது. இந்நிலையில், இந்திய அணியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், இன்று நடைபெற இருந்த பயிற்சி ரத்து செய்யப்பட்டது.
ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில், 157 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி போட்டியை வென்றது. இதுவரை, ஓவல் மைதானத்தில் இந்திய அணி விளையாடியுள்ள 13 டெஸ்ட் போட்டிகளில் ஒரே ஒரு போட்டியில் மட்டும்தான் வெற்றி பெற்றுள்ளது. 1971-ம் ஆண்டுக்குப் பிறகு, சரியாக 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஓவல் மைதானத்தில் கோலி தலைமையிலான இந்திய அணி போட்டியை வென்று அசத்தியது. இதனால், ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-1 என முன்னிலை பெற்றுள்ளது.
#ENGvIND, 5th Test - Team India's training cancelled as a support staff member tests positive for #COVID19: BCCI sources
— ANI (@ANI) September 9, 2021
அடுத்து, மேன்செஸ்டரில் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. இந்நிலையில், மீண்டும் அணிக்குள் கொரோனா தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளதால், நாளை போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், இந்திய வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட உள்ளனர். அதுமட்டுமின்றி, இன்று காலை இந்திய அணி வீரர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகளைப் பொருத்து, நாளை போட்டி நடைபெறுவது பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு, ஆர்.டி பிசிஆர் பரிசோதனை முடிவிலும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் 10 நாட்களுக்கு அவர் தனிமைப்படுத்தப்பட உள்ளதாக பிசிசிஐ அறிவித்தது. இதனால், செப்டம்பர் 10-ம் தேதி இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி விளையாட இருக்கும் கடைசி டெஸ்ட் போட்டியின்போது அவர் அணியுடன் இருக்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டது.
ரவி சாஸ்திரி எழுதிய புத்தக வெளியீடு நிகழ்ச்சி சமீபத்தில் லண்டனில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வெளி ஆட்கள் பலர் கலந்து கொண்டனர். அப்போது அவருக்கு கொரோனா பாதிப்பு பரவி இருக்கலாம் என தகவல் வெளியானது.
ரவி சாஸ்திரிக்கு கொரோனாவுக்கான அறிகுறிகள் தென்பட்ட நிலையில் அவருக்கு நேற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. லேட்ரல் ஃப்ளோ பரிசோதனையைத் தொடர்ந்து ஆர்.டி பிசிஆர் பரிசோதனையிலும் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால், அவருடன் தொடர்பில் இருந்த அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர், பிசியோதெரபி நிபுணர் நிதின் படேல் மற்றும் பவுலிங் பயிற்சியாளர் அருண் ஆகியோருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மற்ற பயிற்சியாளர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டதால், அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.