Ind Vs SL: சூப்பர் 4, இறுதிப்போட்டிக்கு முன்னேற இந்தியா தீவிரம்..! - ஆசியக்கோப்பையில் இலங்கையுடன் இன்று பலப்பரீட்சை
ஆசியக்கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா - இலங்கை அணிகள் இன்று மோத உள்ளன.
ஆசியக்கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா - இலங்கை அணிகள் மோதும் போட்டி, கொழும்புவில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.
ஆசியக்கோப்பை தொடர்:
6 நாடுகள் பங்கேற்ற ஆசியக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றின் முடிவில் ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் அணிகள் வெளியேறிய நிலையில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகள் சூப்பர் 4 சுற்றில் விளையாடி வருகின்றன. இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி, மழையால் பாதிக்கப்பட்டு பின்பு ரிசர்வ் டே அடிப்படையில் நேற்று நடைபெற்றது. அதில் இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா - இலங்கை பலப்பரீட்சை:
இந்நிலையில் சூப்பர் 4 சுற்றில் இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. கொழும்புவில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டி, இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்க உள்ளது. போட்டியின் நேரலையை ரசிகர்கள் தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஹாட் ஸ்டார் செயலியிலும் கண்டு களிக்கலாம். சூப்பர் 4 சுற்றில் இதுவரை இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. எனவே, இன்றைய போட்டியிலும் வென்று இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்த முனைப்பு காட்டுகின்றன. இதனால், இந்தியா - இலங்கை அணிகள் இடையேயான போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மைதானம் எப்படி? & மழைக்கு வாய்ப்பு:
பிரேமதாசா மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமானது என்பதால் முதலில் விளையாடும் அணி, மிகப்பெரிய இலக்கை நிர்ணயிக்க வேண்டியது அவசியம். டெத் ஓவர்களில் மைதானம் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக அமையக்கூடும். இன்றைய போட்டியின் போதும் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கைகள் எச்சரிக்கின்றன.
இந்திய அணி நிலவரம்:
ஆசியக்கோப்பை தொடரில் இந்திய அணி விளையாடிய அனைத்து போட்டிகளுமே, மழையால் பாதிக்கப்பட்டு பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் தான் நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் உடனான முதல் லீக் போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பினாலும், அடுத்தடுத்த போட்டிகளில் சுதாரித்து தங்களது திறமையை வெளிப்படுத்தியுள்ளனர். ரோகித் சர்மா, சுப்மன் கில், கோலி மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் பாகிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி போட்டியில் சிறப்பாக செயல்பட்டு நம்பிக்கை அளித்துள்ளனர். இந்த தொடரில் கடந்த போட்டியில் தான் இந்திய அணி முழுமையாக பந்துவீசும் வாய்ப்பே கிடைத்தது. ஆனால், 32 ஓவர்களுக்கு எல்லாம் பாகிஸ்தானை ஆல்-அவுட் செய்து அதகளம் செய்தனர். குறிப்பாக அபாரமாக பந்துவீசிய குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த செயல்பாட்டை இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் வெளிப்படுத்தினால் இந்திய அணி வெற்றி பெறுவது உறுதி. அதேநேரம், தொடர்ச்சியாக 13 ஒரு நாள் போட்டிகளில் வெற்றிகளை குவித்து வீறுநடை போடும் இலங்கை அணி, வெற்றிப்பயணத்தை தொடர தீவிரம் காட்டும். போட்டி உள்ளூர் மைதானத்தில் நடைபெறுவது அந்த அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.
இந்தியா உத்தேச அணி:
ரோஹித் சர்மா, சுப்மான் கில், விராட் கோலி, கே.எல். ராகுல், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா
இலங்கை உத்தேச அணி:
பதும் நிஸ்ஸங்க, திமுத் கருணாரத்ன, குசல் மெண்டிஸ் , சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, தசுன் ஷனகா, துனித் வெல்லலகே, மஹீஷ் தீக்ஷன, கசுன் ராஜித, மதீஷ பத்திரன