(Source: ECI/ABP News/ABP Majha)
WTC Final Preview : நிறைவடைந்த கவுண்டவுன் - இன்று தொடங்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் யுத்தம்!
144 ஆண்டு கால டெஸ்ட் வரலாற்றில் டெஸ்ட் உலகக்கோப்பை சாம்பியன்ஷிப் நடப்பது இதுவே முதல் முறை!
முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் இன்று இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் மைதானத்தில் மத்தியம் மூன்று மணிக்கு துவங்குகிறது. இதில் நீயா நானா என வரிந்து கட்டுகின்றன இந்தியாவும் நியூசிலாந்தும். 144 ஆண்டு கால டெஸ்ட் வரலாற்றில் டெஸ்ட் உலகக்கோப்பை சாம்பியன்ஷிப் நடப்பது இதுவே முதல் முறை.
ஒருபக்கம் விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி இன்னொரு பக்கம் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி. ஆக்ரோஷமாக களத்தில் செயல்படக்கூடியவர் விராட் கோஹ்லி, அதே நேரம் கூலாக அணியை வழி நடத்துபவர் கேன் வில்லியம்சன். அதனால் இந்த இவருக்கும் இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை எதிர்பார்த்து காத்துள்ள பலர் ஃபையர் vs கூல் என்று இந்த போட்டியை வர்ணிக்கின்றனர்.
இந்தியா, நியூசிலாந்து கடந்து வந்த பாதை
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் முதலிடத்தை பிடித்த இந்திய அணி,17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி - அதில் 12 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று, 4 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை சந்தித்து, ஒரு டெஸ்ட் போட்டியை டிரா செய்து 520 புள்ளிகளுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை எட்டியது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் 2வது இடத்தை பிடித்த நியூசிலாந்து அணி 7 டெஸ்ட் போட்டிகளை வென்று 420 புள்ளிகளுடன் இறுதிப் போட்டிக்கு வந்தது.
விராட் கோஹ்லியின் முதல் ஐசிசி கோப்பை கனவு
2008ம் ஆண்டு 19 வயதிற்குற்பட்ட அணியை வழிநடத்திய விராட் கோஹ்லி இந்திய அணிக்காக உலக கோப்பையை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார். ஆனால் சர்வதேச அணிக்கு விராட் கோஹ்லி கேப்டனாக பொறுப்பேற்ற பின் சாம்பியன்ஸ் டிராபி, 2019 உலகக்கோப்பை ஆகியவற்றில் இந்தியா மகுடம் சூட தவறியது. அந்த வகையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வென்றால் அது விராட் கோஹ்லியின் முதல் ஐசிசி கோப்பையாக அமையும்.
இதுவரை ஐசிசி கோப்பையை கண்ணில் காணாத நியூசிலாந்து
விராட் கோஹ்லி தலைமையில் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளை இந்தியா வெற்றி பெறாவிட்டாலும், இந்திய அணியை பொறுத்த வரை அனைத்து விதமான கோப்பைகளையும் வென்றுள்ளது. ஆனால் நியூசிலாந்து அணி தற்போது வரை ஐசிசி சாம்பியன்ஷிப் கோப்பைகளை ஒருமுறைகூட வென்றதில்லை என்ற சோகமான வரலாறு தொடர்கிறது. குறிப்பாக 2019 உலகக்கோப்பை இறுதிப் போட்டி வரை முன்னேறிய நியூசிலாந்து அணி நூலிழையில் சாம்பியன் வாய்ப்பை தவற விட்டது. அதனால் முதன் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்று தங்கள் தாகத்தை தீர்த்துக் கொள்ள நியூசிலாந்து அணி மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இங்கிலாந்து அணியுடன் அண்மையில் நடைபெற்ற தொடரை 1-0 என்ற கணக்கில் வென்றதும் அந்த அணிக்கு கூடுதல் பலத்தை அளிக்கிறது.
இறுதி போட்டி குறித்த தகவல்கள்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் நகரில் அமைந்துள்ள ஏஜியஸ் பவுல் மைதானத்தில் மத்தியம் 3 மணிக்கு தொடங்குகிறது. டாஸ் 2.30 மணி அளவில் வீசப்படும்.
இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் இந்த போட்டியை நேரடி ஒளிபரப்பு செய்கிறது, இணையதளத்தில் காண விரும்பும் ரசிகர்கள் ஹாட்ஸ்டார் மூலமாக போட்டியை கண்டு ரசிக்கலாம்.