Ind vs Eng: லார்ட்சில் ‛சதம்போட்ட பரம்பரை’ யார் யார் தெரியுமா... 89 ஆண்டுகளில் கெத்து காட்டிய 9 இந்தியர்கள்!
இதுவரை லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் 18 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி ஆடியுள்ளது. அவற்றில் இந்திய அணி சார்பில் 11 சதங்கள் மட்டுமே அடிக்கப்பட்டுள்ளது.
வினு மன்கட் ( 1952)
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய கிரிக்கெட் அணிக்காக முதன்முறையாக சதமடித்த பெருமைக்கு சொந்தக்காரர் வினுமன்கட். 1952ம் ஆண்டு ஜூன் மாதம் 19-24ந் தேதி வரை நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் தனி ஆளாக போராடி வினு மன்கட் 184 ரன்களை குவித்தார். அவர் 19 பவுண்டரிகளும், 1 சிக்ஸரும் அடித்தார். இருப்பினும் அந்த போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
திலீப் வெங்கர்சகர், குண்டப்பா விஸ்வநாத் (1979)
இந்திய அணி 1979ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக ஆடிய 2வது டெஸ்ட் போட்டியில் திலீப் வெங்கர்சகர் மற்றும் குண்டப்பா விஸ்வநாத்தின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியை டிரா செய்தது. இந்த போட்டியில் முதலில் ஆடிய இந்திய முதல் இன்னிங்சில் 96 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 419 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து, இரண்டாவது இன்னிங்சில் ஆடிய இந்திய அணியில் திலீப் வெங்கர்சகர் 295 பந்துகளில் 103 ரன்களையும், குண்டப்பா விஸ்வநாத் 337 பந்துகளில் 113 ரன்களையும் குவித்து இந்தியாவை தோல்வி பிடியில் இருந்து காப்பாற்றினர். அந்த போட்டி அதனால் டிராவில் முடிந்தது.
ரவி சாஸ்திரி, முகமது அசாருதீன் ( 1990)
1990ம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் முதலில் ஆடிய இங்கிலாந்து 653 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. இதையடுத்து ஆடிய இந்திய அணியில் தொடக்க வீரர் ரவி சாஸ்திரி 100 ரன்களையும், முகமது அசாருதீன் 121 ரன்களையும் குவித்தனர். இருப்பினும் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் சிறப்பாக ஆடாத காரணத்தால் அந்த போட்டியில் இந்திய அணி 247 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
சவுரவ் கங்குலி (1996)
1996ம் ஆண்டு நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 344 ரன்களை குவித்த நிலையில், அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் அறிமுக வீரராக களமிறங்கிய சவுரவ் கங்குலி 20 பவுண்டரிகளுடன் 131 ரன்களை குவித்தார். சவ்ரவ் கங்குலி, ராகுல் டிராவிட்டின் சிறப்பான ஆட்டத்தால் அந்த போட்டியை இந்திய அணி டிரா செய்தது.
அஜித் அகர்கர் (2002)
2002ம் ஆண்டு லார்ட்சில் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து சிறப்பான ஆட்டத்தை இரண்டு இன்னிங்சிலும் வெளிப்படுத்த, 568 என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். சச்சின், சேவாக், கங்குலி சொதப்ப வாசிம் ஜாபர், ராகுல் டிராவிட் ஓரளவு ரன்கள் சேர்த்து வெளியேறிய நிலையில், அஜித் அகர்கர் மட்டும் சிறப்பாக ஆடி 109 ரன்கள் சேர்த்தார். இருப்பினும் அந்த போட்டியில் இந்திய அணி 170 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
ராகுல் டிராவிட் (2011)
2011ம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி கெவின் பீட்டர்சன் இரட்டை சதத்தால் 474 ரன்களை குவித்தது. அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் ராகுல் டிராவிட் 103 ரன்களை குவித்தார். இரண்டாவது இன்னிங்சில் சிறப்பான ஓரளவு ரன்களை குவித்த இங்கிலாந்து அணி இந்திய அணிக்கு 458 ரன்களாக இலக்கை நிர்ணயித்தது. இரண்டாவது இன்னிங்சில் சுரேஷ் ரெய்னா, லட்சுமணன் மட்டும் ஓரளவு ரன்கள் சேர்த்த நிலையில், பிற வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் இந்திய அணி 196 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
அஜிங்கிய ரஹானே (2014)
2014ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 295 ரன்களை முதல் இன்னிங்சில் குவித்தது. அஜிங்கிய ரஹானேவின் சிறப்பாக ஆடி 103 ரன்களை குவித்தார். இந்த போட்டியில் இந்திய அணியின் புவனேஷ்குமார் மற்றும் இஷாந்த் சர்மாவின் சிறப்பான பந்துவீச்சால் இந்திய அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணி தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.
இந்தியாவின் பேட்டிங் ஜாம்பவன்களான சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கர், எம்.எஸ்.தோனி, விராட் கோலி, வி.வி.எஸ். லட்சுமணன் ஆகியோர் லார்ட்சில் இதுவரை சதமடித்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னிலையில் கடைசியாக நேற்று துவக்க வீரர் கே.எல்.ராகுலும் சதம் அடித்து ‛சதமடித்த பரம்பரை’யில் இணைந்துள்ளார்.