IND vs ENG, 1st Test: மழையால் பறிபோன வெற்றி..! டிரா ஆன இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட்..!
India vs England,1st Test: இந்தியா- இங்கிலாந்து இடையேயான வெற்றியை தீர்மானிக்கும் நாள் கடைசி நாள் ஒரு பந்துகள் கூட வீசப்படாததால், முதலாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவதாக அறிவிக்கப்பட்டது.
இந்தியா- இங்கிலாந்து இடையேயான பட்டோடி டிராபியின் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் உள்ள ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் கடந்த 4-ஆம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியினர் பேட்டிங்கை தேர்வு செய்து முதல் இன்னிங்சில் 183 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் மட்டும் அதிகபட்சமாக 64 ரன்கள் குவித்தார்.
அடுத்து ஆடிய இந்திய அணியில் ரோகித் சர்மா, புஜாரா, விராட்கோலி அஜிங்கிய ரஹானே அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, தொடக்க வீரர் கே.எல்.ராகுல் மட்டும் பொறுப்புடன் ஆடினார். அவருடன் ரவீந்திர ஜடேஜாவும், கடைசி கட்டத்தில் பும்ரா அதிரடியாக ஆடியதாலும் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 278 ரன்களை சேர்த்தது.
95 ரன்கள் பின்தங்கிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் ரோரி பர்னஸ், சிப்ளி, ஜாக் கிராவ்லி அடுத்தடுத்து ஆட்டமிழக்க, முதல் இன்னிங்சில் சிறப்பாக ஆடிய கேப்டன் ரூட் மட்டும் தனித்து போராடி அணியை மீட்டார். ஜோ ரூட்டின் அற்புதமான சதத்தால் அந்த அணி இரண்டாவது இன்னிங்சில் 85.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 303 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியின் ஜோ ரூட் தவிர, முன்னணி வீரர்களான பார்ஸ்டோ, ஜாஸ் பட்லர், டேனியல் லாரன்ஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். சாம் கரன் மட்டும் 32 ரன்கள் சேர்த்தார். இதையடுத்து, 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி நேற்று களமிறங்கியது. இந்திய அணி நேற்றைய நிலவரப்படி ஒரு விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் எடுத்தது. கே.எல்.ராகுல் 26 ரன்கள் எடுத்த நிலையில், ப்ராட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ரோகித் சர்மா 12 ரன்களுடனும், சத்தீஸ்வர புஜாரா 12 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில், வெற்றி யாருக்கு என்று தீர்மானிக்கும் ஆட்டத்தின் 5-வது நாளான இன்று காலை முதல் நாட்டிங்காமில் மழை பெய்து வந்தது. இதனால், ஆட்டத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு மழை நின்றாலும், ஆடுகளம் ஈரப்பதத்துடனே காணப்பட்டது. இதனால், ஆட்டத்தை தொடங்க முடியாத சூழல் ஏற்பட்டது. இந்த நிலையில், மாலை செசனில் ஆடுவதற்காக ஆட்டம் பரிசோதிக்கப்பட்டது. பரிசோதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் மீண்டும் மழை பெய்தது.
இதனால், சிறிது நேரம் கழித்து 5வது நாள் ஆட்டம் கைவிடப்படுவதாக நடுவர்கள் கைது செய்தனர். இதனால், இந்தியா- இங்கிலாந்து இடையேயான இந்த போட்டி டிராவில் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்தியாவின் வெற்றிக்கு 157 ரன்களும், இங்கிலாந்தின் வெற்றிக்கு 9 விக்கெட்டுகளுமே மட்டுமே தேவைப்பட்ட இந்த போட்டியில் நிச்சயம் முடிவு கிடைக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.