Car Sale 2025: ஹுண்டாய்க்கு டாடா சொன்ன மஹிந்த்ரா.. 2வது இடத்திற்கு முன்னேற்றம் - போட்டியில்லாத ராஜாவாக மாருதி
Car Sale 2025: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் நடப்பாண்டில் ஒட்டுமொத்த கார் விற்பனையில், டாடாவை பின்னுக்கு தள்ளி மஹிந்த்ரா நிறுவனம் இரண்டாவது பிடித்தை அசத்தியுள்ளது.

Car Sale 2025: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் நடப்பாண்டில் ஒட்டுமொத்த கார் விற்பனையில், மாருதி சுசூகி நிறுவனம் பெரும் வித்தியாசத்தில் முதல் இடத்தை தக்கவைத்துள்ளது.
2025ல் இந்தியாவில் கார் விற்பனை:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையின் விற்பனை, 2025ம் ஆண்டில் மிகப்பெரிய மாற்றத்தை கண்டுள்ளது. ஆண்டின் ஒட்டுமொத்த பயணிகள் வாகன விற்பனையில் மஹிந்த்ரா & மஹிந்த்ரா நிறுவனம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. நீண்டகாலமாக இரண்டாவது இடத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த டாடா மோட்டார்ஸ் மற்றும் ஹுண்டாய் மோட்டார்ஸ் நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி, உள்ளூர் வாகன உற்பத்தி நிறுவனமான மஹிந்த்ரா முன்னேறி இருப்பது மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது. உள்நாட்டு சந்தையில் எஸ்யுவி கார்கள் மீது நிலவும் விருப்பம் மற்றும் நிறுவனம் விரிவுபடுத்தி வரும் போர்ட்ஃபோலியோ காரணமாக, மஹிந்த்ரா நிறுவனம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.
வாகன விற்பனையில் டாப் 5 நிறுவனங்கள்:
அரசின் வாஹன் போர்டல் தரவுகளின்படி, கடந்த டிசம்பர் 25ம் தேதி வரையில் நடப்பாண்டில் மஹிந்த்ரா நிறுவனம் 5.81 லட்சம் வாகனங்களை விற்பனை செய்து இதுவரை இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த ஆண்டில் நிறுவனத்தின் விற்பனை 4.9 லட்சம் மட்டுமே ஆகும். அதேநேரம், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நடப்பாண்டில் இதுவரை 5.52 லட்சம் யூனிட்களையும், ஹுண்டாய் நிறுவனம் 5.50 லட்சம் யூனிட்களையும் மட்டுமே விற்பனை செய்துள்ளன. எஸ்யுவி வாகனங்கள் மீது மட்டுமே அதிகளவில் கவனம் செலுத்தும் உள்ளூர் நிறுவனம், ஹேட்ச்பேக், செடான் மற்றும் எஸ்யுவி என பலதரப்பட்ட வாகனங்களை விற்பனை செய்யும் நிறுவனங்களை விற்பனையில் பின்னுக்கு தள்ளுவது இதுவே முதல்முறையாகும். அதேநேரம், ஒவ்வொரு மாதமும் அநாயசமாக சராசரியாக ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்யும் மாருதி சுசூகி, நடப்பாண்டில் கடந்த டிசம்பர் 25ம் தேதி வரை மட்டுமே 17.50 லட்சம் யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் யாரும் தொட முடியாத அளவில் மிகப்பெரிய வித்தியாசத்துடன் முதல் இடத்தை ஆக்கிரமித்துள்ளது.
மஹிந்த்ரா சாதித்தது எப்படி?
மஹிந்த்ரா நிறுவனம் இரண்டாவது இடத்தை பிடித்தது என்பது எதிர்பாராத விதமாக நடந்தது அல்ல. ஆண்டின் தொடக்கத்தின் முதலே முறையாக திட்டமிட்டு அதனை சரியாக செயல்படுத்தியதன் மூலம் கிடைத்த பலனாகும். நன்கு அறியப்பட்ட இன்ஜின் அடிப்படையிலான ஸ்கார்ப்பியோ என், ஸ்கார்ப்பியோ க்ளாசிக் மற்றும் தார் ராக்ஸ் ஆகியவை நிறுவனத்தின் விற்பனைக்கு அடித்தளமாக அமைந்தன. மேலும், தைரியாமாக புதிய ப்ரீமியம் மின்சார எஸ்யுவிக்களை சந்தைப்படுத்தியதும் விற்பனையில் புதிய உச்சத்தை எட்ட உதவின.
ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட BE 6e மற்றும் XEV 9e கார் மாடல்கள், 38 ஆயிரம் யூனிட்களுக்கும் அதிகமாக விற்பனையாகி, மின்சார கார் சந்தையில் அதிகப்படியான பங்களிப்பை கொண்டுள்ளன. இந்த வெற்றி தந்த ஊக்கத்தால் ப்ராண்டின் முதன்மையான 7 சீட்டர் எஸ்யுவி ஆக, ரூ.19.95 லட்சம் மதிப்பிலான XEV 9S மாடலை நவம்பரில் விற்பனைக்கு கொண்டு வந்தது. இதன் மூலம் 2026ல் நிறுவனத்தின் விற்பனை பிரிவு மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.





















