ஐஸ் ஸ்கேட்டிங்கில் சாதித்த செங்கல்பட்டு சிறுமி ! தமிழ்நாட்டிற்கே பெருமை! அரசுக்கு வைத்த கோரிக்கை!
செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த ஐஸ் ஸ்கேட்டிங் வீராங்கனை யஷாஸ்ரீ தேசிய அளவிலான போட்டியில் வெண்கலம் வென்று அசத்தியுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த சிறுமி, ஐஸ் ஸ்கேட்டிங் போட்டியில் தமிழகத்திற்கு வெண்கலம் பதக்கத்தை வென்று கொடுத்துள்ளார்.
ஐஸ் ஸ்கேட்டிங் போட்டியில் சாதனை
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த மாம்பாக்கம் பகுதியை சேர்ந்த தினேஷ் குமார், கிர்த்திகா தம்பதியின் மகள் யஷாஸ்ரீ. இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார். பள்ளி மாணவிக்கு சிறுவயது முதலே விளையாட்டு மீது ஆர்வம் இருந்துள்ளது. தனது மகளின் ஆர்வத்தை உணர்ந்த பெற்றோர், யஷாஸ்ரீக்கு ஊக்கமளித்து வந்துள்ளனர்.
இந்தநிலையில் யஷாஸ்ரீ டேராடூனில் ஜூன் 25 முதல் ஜூன் 29 வரை நடைபெற்ற தேசிய ஐஸ் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப்பில், 1000 மீட்டர் தூரத்திற்கான போட்டியில் தமிழ்நாட்டிற்காக வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
சாதித்த சிறுமி
இந்த விளையாட்டு போட்டியில் இந்தியா முழுவதிலும் இருந்து 20 மாநிலங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட ஸ்கேட்டர்கள் பங்கேற்ற இந்த பிரம்மாண்ட போட்டியில், தமிழ்நாட்டில் இருந்து 34 ஸ்கேட்டர்கள் கலந்துகொண்டனர். செங்கல்பட்டில் இருந்து யஷாஸ்ரீயுடன், தேஷாஸ்ரீயும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றி குறித்து பேசிய யஷாஸ்ரீ, தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதோடு, தமிழ்நாட்டில் ஐஸ் ஸ்கேட்டிங் பயிற்சி செய்வதற்கான போதிய வசதிகள் இல்லாதது குறித்து வேதனை தெரிவித்தார். அவர் கூறுகையில், "தமிழ்நாட்டில் ஐஸ் ஸ்கேட்டிங் செய்வதற்கான ஏற்பாடுகள் இல்லை. நாங்கள் பயிற்சி எடுக்க வேண்டும் என்றால் வட மாநிலங்களை நம்பி இருக்க வேண்டிய சூழல் உள்ளது. எனவே, தமிழக அரசு எங்களுக்கு ஐஸ் ஸ்கேட்டிங் பயிற்சி மையங்களை அமைத்துத் தருவதற்கான நடவடிக்கையில் இறங்க வேண்டும்" என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
ஆசியப் போட்டிகளில் பதக்கம் வெல்லும் இலக்கு
யஷாஸ்ரீ தற்போது ஆசிய முகாமிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது குறித்து அவர், "நான் ஆசியப் போட்டிகளில் விளையாட இருக்கிறேன். இந்திய அணியில் இடம்பெற்று பதக்கம் வெல்வதை எனது இலக்காகக் கொண்டுள்ளேன்" என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார். முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கேற்ற யஷாஸ்ரீ, 500 மீட்டர் பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்று தனது திறமையை நிரூபித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.





















