ICC World test championship: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இன்று போட்டி தொடங்குமா?
இரண்டாவது நாளான இன்று போட்டி நடக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அவ்வப்போது சிறிய இடைவேளைகளில் போட்டி தடைப்படலாம் என்று கருதப்படுகிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் நடைபெற உள்ளது. நேற்று தொடங்க டெஸ்ட் போட்டி மழை காரணமாக நாள் முழுவதும் தொடங்கவில்லை. அத்துடன் முதல் நாள் ஆட்டம் முழுவதும் ரத்தானது. இந்தச் சூழலில் இன்றாவது போட்டி தொடங்குமா என்ற எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் தினேஷ் கார்த்திக் ஸ்கை ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு வர்ணனையாளராக இங்கிலாந்து சென்றுள்ளார். அவர் தற்போது அங்கு இருக்கும் நிலைமை தொடர்பாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில், “காலையில் எழுந்தவுடன் சூரியன் வெளியே” என்று கூறி தற்போது வெயில் அடிப்பது போன்ற ஒரு படத்தையும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Waking up to the sun ☀️#WTCFinal pic.twitter.com/ksizgYYwbB
— DK (@DineshKarthik) June 19, 2021
நேற்று முழுவதும் மழை பெய்ததால் ஆட்டத்தில் டாஸ் கூட போட முடியாத சூழல் உருவானது. இது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. அவர்களுக்கு தினேஷ் கார்த்திக் ட்வீட் ஒரு நல்ல செய்தியாக அமைந்துள்ளது. மேலும் வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி இன்று நாள் முழுவதும் ஒரு சில நேரங்களில் வானம் மேக மூட்டத்துடன் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மழை பெய்யும் வாய்ப்பு குறைவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் பொதுவாக மேக மூட்டம் அதிகமாக இருந்தால் ஆடுகளம் ஸ்விங் பந்துவீச்சுக்கு அதிகம் கைக்கொடுக்கும். எனவே டாஸ் வென்று நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ய அதிக வாய்ப்பு உள்ளது. அத்துடன் ஒருநாள் முழுவதும் மழை பெய்துள்ளதால் மைதானத்தில் ஈரப்பதம் இருக்கும். ஆகவே மைதானத்தில் அடிக்கப்படும் பந்தின் வேகமும் குறையும் வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக தொடக்கத்தில் சற்று ரன் எடுப்பது கொஞ்சம் கடினமாக இருக்கும் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர்.
இருப்பினும் எப்போது எல்லாம் இங்கிலாந்தில் சூரியன் நன்றாக வெளியே வந்து வெளிச்சம் தருகிறதோ அந்த சமயத்தில் பேட்டிங் செய்ய சற்று எளிதாக இருக்கும். எனவே இந்திய அணி ஒருவேளை முதலில் பேட்டிங் செய்தால் முதல் ஒன்றரை மணி நேரம் சற்று கவனத்துடன் ஆட வேண்டும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். அதேசமயம் இந்திய அணி பந்துவீச்சு செய்தால் முதல் ஒன்றரை நேரத்தை நன்றாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
ஆக மொதத்தில் இரண்டாவது நாளான இன்று போட்டி நடக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அவ்வப்போது சிறிய இடைவேளைகளில் போட்டி தடைப்படலாம் என்றாலும் அதற்கு வாய்ப்பு சற்று குறைவே என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே இங்கிலாந்தில் மழையை கருத்தில் கொண்டு ஐசிசி ஒரு ரிசர்வ் நாளை அறிவித்துள்ளது. தேவைப்பட்டால் அந்த நாளை பயன்படுத்தி கொள்ளவும் முயற்சி எடுக்கப்படும் என்று கருதப்படுகிறது. இந்திய நேரப்படி இன்று மதியம் 2.30 மணிக்கு போட்டி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: