ODI World Cup 2023: நியூசிலாந்திற்கு எதிராக பென் ஸ்டோக்ஸ் ஆடவில்லையா? இங்கிலாந்துக்கு பின்னடைவு
காயம் காரணமாக இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் நியூசிலாந்து அணிக்கு எதிரான நாளைய தொடக்கப் போட்டியில் ஆடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ஐசிசி உலகக்கோப்பை தொடர் நாளை (அக்டோபர் 5) மிக பிரமாண்டமாக தொடங்க உள்ளது. இதில் முதல் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள உலகின் மிகப்பெரிய மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்குகிறது.
உலகக்கோப்பை:
இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. இந்தியா, ஆப்கானிஸ்தான் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வங்கதேசம், நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் நேரடியாக கலந்துகொள்ள தகுதி பெற்றன. இலங்கை, நெதர்லாந்து ஆகிய அணிகள் தகுதிச் சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடித்து உலகக் கோப்பைக்கு தகுதிபெற்றன. இந்த தொடர் மொத்தம் 45 நாட்கள் நடைபெற இருக்கிறது.
அதன்படி நாளை (அக்டோபர் 5) தொடங்கும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணியும் நேரடியாக மோதுகின்றன.
இடுப்பில் காயம்
இதில், இடுப்பில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடுவது சந்தேகம் என்று அந்த அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், “ பென் ஸ்டோக்சுக்கு இடுப்பில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. அவர் பயிற்சிக்காக கடுமையாக உழைக்கிறார். ஆனாலும் அவர் விளையாடுவது சந்தேகம் தான்” என்று கூறியுள்ளார். மேலும் ,”போட்டியின் தொடக்கத்தில் நாங்கள் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். நாளைய போட்டி ஒரு நீண்ட போட்டியாக இருக்கும். ஸ்டோக்ஸ் நீண்ட காலமாக முழங்காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக பந்துவீச்சில் அவரது பங்கு குறைந்து வருகிறது. ஆனால், ஒரு சிறந்த பேட்ஸ்மேனாக உலகக்கோப்பைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்” என்றார்.
ஸ்டோக்ஸ் இடத்தில் ஹாரி
தொடர்ந்து பேசிய அவர், “ஸ்டோக்ஸ் இடத்தில் ஹாரி புரூக் களம் இறக்கப்படலாம். அவர் எவ்வளவு அற்புதமான வீரர் என்பதை நாம் அனைவரும் அறிவோம். டி20 கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து ஹாரி ப்ரூக் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் ஒரு நாள் போட்டியில் அதிகம் விளையாடவில்லை என்றாலும் அவருக்கு மிகவும் சிறப்பான ஒரு போட்டியாக அமையும். புரூக் அதிக ரன்களை எடுக்கவும் சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தவும் ஒரு நாள் போட்டிகள் உதவியாக இருக்கும்” என்றார்.
மேலும் படிக்க:ODI WC 2023 Srilanka Team: மீண்டு(ம்) வருமா? உலகக் கோப்பையில் இலங்கை அணியின் சாதக, பாதகங்கள் என்ன?
மேலும் படிக்க: ODI World Cup 2023: உலகக்கோப்பையில் கவனிக்க வேண்டிய ஐந்து வீரர்கள்! முதல் இடத்தை தட்டித்தூக்கிய ”ரன் மிஷின்” விராட் கோலி!