மும்பை இந்தியன்ஸ் தொடர் வெற்றி எப்படி சாத்தியம்
தொடர்ந்து வெற்றியை குவிக்கும் மும்பை அணியின் தொடர் உற்சாகத்திற்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாக கிரிக்கெட் ஜாம்பவான்கள் கருதுகின்றனர்.
மும்பை இந்தியன்ஸ் அணி ஏன் ஐபிஎல் ஜாம்பவான் என்பதற்கு ஓர் உதாரணம் கொல்கத்தாவிற்கு எதிரான நேற்றைய ஆட்டம். சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான சென்னை ஆடுகளத்தில் 150 ரன்களை கடந்தால் போதுமென தீர்மானித்து மும்பை பேட்டிங் செய்தது முக்கியமானதொரு அம்சம். மைதானத்தை கணிப்பதில் தனக்குள்ள திறமையை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தினார் ரோஹித் சர்மா. 153 ரன்களை கொல்கத்தா எளிதாக சேஸ் செய்யுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையிலும் மும்பை பந்துவீச்சாளர்கள் நம்பிக்கை இழக்கவில்லை. கொல்கத்தா அணிக்கு கில், ராணா ஜோடி வேறு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. வேறொரு அணியாக இருந்திருந்தால் எதுரணியின் தொடக்கத்தை பார்த்து வெற்றி பெறும் நம்பிக்கையையே முழுதாக இழந்திருக்கும். ஆனால் மும்பை இந்தியன்ஸ் தன்னுடைய வாய்ப்புக்காக தவம் இருந்தது.
எதிரணி செய்யும் ஒரு சிறிய தவறு கூட ஆட்டத்தின் முடிவை மாற்றி எழுதுமென
தன்னுடைய அனுபவத்தில் ரோஹித் தெரிந்து வைத்திருந்தார். முதல் விக்கெட்டை சாஹார் கைப்பற்றியதும் மும்பை அணி வீரர்கள் மத்தியில் உற்சாகம் தொற்றிக் கொண்டது. தற்காப்பு ஃபீல்ட் செட்டப் ஒரே நிமிடத்தில் தாக்குதல் பானியாக மாறியது. சுழற்பந்து வீச்சு மட்டுமே வழியென உணர்ந்த ரோஹித் ஷர்மா சஹார், குருனால் பாண்டியா ஆகியோருக்கு தொடர்ந்து பந்துவீச வாய்ப்பு கொடுத்தார். ஒரு கட்டத்தில் ஆஃப் ஸ்பின் வீசுவதற்காக தானே பந்தைக் கையில் எடுத்தார் அவர். ஜஸ்பிரித் பும்ரா ஓவர்களை டெத் ஓவர்களுக்கு என மீதம் வைத்திருந்தது மும்பையின் முக்கியமான நகர்வு. பும்ராவை சமாளிப்பது கடினம் என்பதால் பிற பந்துவீச்சாளர்களை அடித்து ஆட வேண்டிய கட்டாயம் கொல்கத்தா பேட்ஸ்மேன்களுக்கு ஏற்பட்டது. இந்த உளவியல் ரீதியிலான தாக்குதல் மும்பைக்கு நன்றாகவே கைகொடுத்தது. யாரை குறிவைத்து அடித்து ஆடுவது என்பதில் கொல்கத்தா வீரர்கள் தெளிவில்லாமல் இருந்தனர். உலகின் சிறந்த ஃபினிசர்களான தினேஷ் கார்த்திக், ரஸ்ஸல் போன்றவர்களே சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியதை பார்க்க முடிந்தது.
பொதுவாக இறுதிக் கட்ட ஓவர்களில் ஸ்லிப் பொசிசனில் பீல்டரை நிற்க வைப்பது மிகவும் அரிது. ஆனால் ரோஹித் நேற்றைய போட்டியில் 18வது ஓவரில் அதனை சாத்தியப்படுத்தினார். இந்த தைரியமான அணுகுமுறை தான் மற்ற அணிகளில் இருந்து மும்பையை தனித்துக் காட்டுகிறது. வர்ணணையாளர் ஶ்ரீகாந்த் பாணியில் சொல்வதென்றால் தில்லுக்கு துட்டு." என்னை விட என் மீது கேப்டன் ரோஹித் அதிக நம்பிக்கை வைத்திருக்கிறார்". இது ஆட்டம் முடிந்ததும் ராகுல் சஹார் தனது கேப்டன் பற்றி கூறிய வார்த்தைகள். நம்பிக்கை, வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு, புதுமை. இதுதான் ரோஹித் சர்மாவின் பலம். ஒவ்வொரு வருடமும் மும்பை இந்தியன்ஸ், ஐபிஎல் கோப்பை வெல்ல வாய்ப்புள்ள அணியாக இருப்பதன் ரகசியம் இதுதான்.