நெசவு தொழில் டூ ஐபிஎல்! இந்தியாவின் மலிங்கா... யார் இந்த ஸ்லிங்கா பெரியசாமி?
சேலத்தைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் என்பவரும், மற்றொரு இந்திய கிரிக்கெட் வீரரான தங்கராசு நடராஜனும் பெரியசாமிக்கு உதவி மேற்கொண்டுள்ளனர். பெரியசாமி, கிரிக்கெட்டை கரியராக தேர்வு செய்ய உதவி உள்ளனர்.
கொரோனா பரவலால் பாதியில் நிறுத்தப்பட்ட 2021 ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதி போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நாளை தொடங்குகிறது. ஐபிஎல் தொடரைப் பொருத்தவரை, ஏற்கனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிச்சந்திர அஷ்வின், வாஷிங்டன் சுந்தர், நடராஜன், ஷாரூக்கான், வருண் சக்கரவர்த்தி, ஜெகதீசன் ஆகியோர் ஆடி வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த மற்றுமொரு வீரர் ஐபிஎல் தொடரில் ஆட உள்ளார். தமிழ்நாடு பிரமியர் லீக்கில் சிறப்பாக விளையாடிய கணேசன் பெரியசாமிதான் ஐபிஎல் தொடருக்கு தேர்வாகி உள்ளார். இவர், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக தேர்வாகியுள்ளார்.
யார் இந்த கணேசன் பெரியசாமி?
சேலம் மாவட்டத்திற்கு மேற்க்கே 33 கி.மீ தொலைவில் உள்ள சின்னப்பம்பட்டியில் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த பெரியசாமியுடன் பிறந்தவர்கள் நான்கு பேர். சிறுவயதிலே பெரியசாமிக்கு சின்ன அம்மை நோயினால் பாதிப்பு ஏற்பட்டதால், அவரது வலது கண் பார்வையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கண் பார்வை பாதிக்கப்பட்டதால் பெரிதும் வெளியே செல்வதை தவிர்த்து வந்துள்ளார் பெரியசாமி. விரல் விட்டு எண்ணும் அளவிலான நண்பர்கள் கூட்டத்துடன், தனது நட்புறவை சிறிதே வைத்துக்கொண்டார். 7ம் வகுப்பு படிக்கும் போதே, படிப்பை நிறுத்திக் கொண்டு, பள்ளியை விட்டு வெளியேறினார். அந்த நெருக்கடியான காலகட்டங்களிலும் கூட, டென்னிஸ் பந்து கிரிக்கெட் விளையாடி அவரது ஆர்வத்தை வெளிப்படுத்தினார். இப்படி கடினமான காலக்கட்டத்தில் கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய பெரியசாமிக்கு, ஆர்வம் அதிகரித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து 19 வயதிற்குட்பட்ட தமிழ்நாடு அணிக்கான தேர்வில் பங்கேற்றார். அதில், அவர் தேர்வு செய்யப்பட்டு முதல் மூன்று ஆண்டுகள் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடினார். ஆனால் கபவாத ஜுரம் பாதிக்கப்பட்டு கிட்டத்தட்ட கிரிக்கெட்டை கைவிட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார். ஒரு புறம் கிரிக்கெட்டுக்கு இடைவெளிவிட்டு, தனது குடும்பத்திற்கு உதவி செய்ய வேண்டும் என்ற கட்டாயத்தில் சேலை நெசவு நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார்.
ஆனால், சேலை நெசவு நிறுவனத்தில் பணிபுரியும் போது பெரியசாமி மீண்டும் கிரிக்கெட் விளையாடவே ஆசைப்பட்டார். தன்னால் முடிந்த முயற்சிகளை மேற்கொண்டார். சேலத்தைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் என்பவரும், மற்றொரு இந்திய கிரிக்கெட் வீரரான தங்கராசு நடராஜனும் பெரியசாமிக்கு உதவி உள்ளனர். பெரியசாமி, கிரிக்கெட்டை கரியராக தேர்வு செய்ய ஊக்குவித்துள்ளனர்.
இப்போது, 27 வயதான கணேசன் பெரியசாமி இதுவரை தமிழ்நாடு பிரிமீயர் லீக்கில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்காகவும், சேலம் ஸ்பார்டன்ஸ் அணிக்காகவும் ஆடியுள்ளார். பந்துவீச்சில் மலிங்காவின் பாணியை கடைபிடிப்பதால், பெரியசாமியை ’ஸ்லிங்கா பெரியசாமி’ என்றும் செல்லமாக சகவீரர்களும், ரசிகர்களும் அழைக்கின்றனர். நான்காவது டி.என்.பி.எல். தொடரில் தான் ஆடிய அனைத்து போட்டிகளிலுமே கணேசன் பெரியசாமி விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். வேறு எந்த வீரரும் இதுவரை செய்திடாத சாதனை இது.
"நான் என் குடும்பத்திற்காக விளையாடுகிறேன். கிரிக்கெட் எனக்கு நம்பிக்கையை அளித்துள்ளது. ஒவ்வொரு போட்டியும் எனக்கு ஒரு சவால். மைதானத்தில் சக வீரர்கள் என்னை எதிர்கொள்ளும்போது, நானும் திறமையானவன் என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். எனது திறமையால் நான் அதைக் வெளிக்காட்ட வேண்டும் என முயற்சி செய்து வருகின்றேன்” என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் பெரியசாமி.
வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் பயிற்சி பெறும் அகாடமியில்தான் பெரியசாமியும் பயிற்சி பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சன்ரைசர்ஸ் அணியில் இணைந்துள்ள பெரியசாமிக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். வாழ்த்துகள் பெரியசாமி!