Paralympics 2021: பாராலிம்பிக் பதக்கம் வென்றார் ‛கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ நடிகர்: யார் இந்த கிறிஸ்டீன் கூம்ப்ஸ்?
சவாலான தோற்றம் ஒரு சவாலல்ல என்று உயரப் பறந்து சாதித்து வரும் கிறிஸ்டீன் கூம்ப்ஸ்க்கு வாழ்த்துகள்!
ஒலிம்பிக், பாராலிம்பிக் என நடந்து முடிந்த இரண்டு பிரமாண்ட விளையாட்டு தொடர்களில் இருந்து ஏராளமான தன்னம்பிக்கை கதைகள், மனதை நெகிழ வைத்த தருணங்கள் நம்மை கட்டிப்போட்டன. அந்த வரிசையில், பிரபல கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொலைக்காட்சி சீரியலில் நடித்துள்ள நடிகர் கிறிஸ்டீன் கூம்ப்ஸ் பாராலிம்பிக்கில் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
பாராலிம்பிக் தொடரை பின் தொடர்ந்தவர்களுக்கு, கிறிஸ்டீன் கோம்ஸ் பரிச்சயமான முகமாகத்தான் இருப்பார். ஏனென்றால், பாரா பேட்மிண்டனில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரர் கிருஷ்ணா, கிரேட் பிரிட்டர் வீரரான கிறிஸ்டீன் கூம்ப்ஸை அரை இறுதியில் எதிர்கொண்டார். உலக பிரபலமான கேம் ஆஃப் த்ரோன்ஸ் சீரியலின் நான்காவது எபிசோடில் ஒரு கேமியோ கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார் கிறிஸ்டீன். நடிகர், விளையாட்டு வீரர் என பன்முகம் கொண்ட கிறிஸ்டீன், புதிய முயற்சிகளை மேற்கொண்டு அந்தந்த துறையில் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகம் கொண்டவர்.
How many returns can you count? 🏸@Krysten_Coombs returns shot after shot in training. @bwfmedia | @BadmintonTalk | #ParaBadminton pic.twitter.com/T4A4hQyyJV
— Paralympic Games (@Paralympics) April 26, 2021
பாராலிம்பிக் போட்டிகளை பொருத்தவரை, உலகெங்கிலும் இருந்து வெவ்வேறு பாதிப்புகளுடன் வீரர், வீராங்கனைகள் போட்டியிடுவர். அவர்களது, உடல் பாதிப்புகள் ஒருவரை ஒருவரிடம் இருந்து வித்தியாசப்பட்டிருக்கும். இதனால், ஒரு விளையாட்டில் வெறும் ஆண்கள், பெண்கள் என இரு பிரிவுகளின் கீழ் பிரிக்காமல், வெவ்வேறு பாதிப்புகளைப் பொருத்து பிரிவுகள் பிரிக்கப்படும். அந்த பிரிவுகளின் கீழ் வீரர் வீராங்கனைகள் போட்டியிடுவர். ஒரே விளையாட்டின் கீழ் பிரிக்கப்படும் பிரிவுகளை சில குறியீடுகளை கொண்டு அடையாளப்படுத்துவர். அந்த வகையில், கிறிஸ்டீன் கூம்ப்ஸ், கிருஷ்ணா ஆகியோர் பாரா பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு எஸ்.எச்-6 பிரிவில் போட்டியிட்டனர்.
இந்த விளையாட்டின் அரை இறுதிப்போட்டியில், 21-10, 21-11 என்ற புள்ளிக்கணக்கில் இரண்டு கேம்களை கைப்பற்றி போட்டியை வென்றார் கிருஷ்ணா. அரை இறுதியில் தோற்றதால், வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் விளையாடிய கிறிஸ்டீன், போட்டியை வென்று பதக்கத்தையும் கைப்பற்றினார். 44 நிமிடங்கள் நடைபெற்ற வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் அசர வைத்தார் கிறிஸ்டீன். சவாலான தோற்றம் ஒரு சவாலல்ல என்று உயரப் பறந்து சாதித்து வரும் கிறிஸ்டீன் கூம்ப்ஸ்க்கு வாழ்த்துகள்!
ENG vs IND 2021: ஓவல் மைதானத்தின் தனிமையில் அஷ்வின்... ரசிகர்கள் ஆதங்கம்!