Magnus Carlsen: கார்ல்சனை வெச்சு செய்த குகேஷ் - கடுப்பில் டேபிளை குத்தி ஆவேசம் - மாஸ் காட்டிய தமிழன்
Gukesh Carlsen: தமிழகத்தைச் சேர்ந்த குகேஷிடம் கண்ட தோல்வியை ஏற்க முடியாமல், கார்ல்சன் ஆவேசமடைந்து டேபிளை குத்திய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

Gukesh Carlsen: உலகின் நம்பர் ஒன் செஸ் வீரரான கார்ல்செனை வீழ்த்தி தமிழக வீரர் குகேஷ் அபார வெற்றி பெற்றார்.
குகேஷின் மிரட்டலான சம்பவம்:
செஸ் வரலாற்றில் மறக்கமுடியாத வரலாற்று நிகழ்வு ஒன்றை, தமிழ்நாட்டைச் சேர்ந்த உலக செஸ் சாம்பியனான குகேஷ் நிகழ்த்தியுள்ளார். நார்வே செஸ் 2025 போட்டியின் 6வது சுற்றில் முன்னாள் உலகின் நம்பர் ஒன் வீரரான கார்ல்சனை எதிர்கொண்ட குகேஷ், அபாரமாக செயல்பட்டு வெற்றியை வசமாக்கினார். இதனை உலக செஸ் ரசிகர்கள் பெரும் சாதனையாக கண்ட வேலையில், தோல்வியை ஏற்க முடியாமல் கார்ல்சன் ஆவேசமடைந்த வீடியோ காட்சிகளும் இணையத்தில் வைரலாகியுள்ளன. இந்த வெற்றியானது 34 வயதான கார்ல்செனுக்கு எதிரான குகேஷின் முதல் கிளாசிகல் வெற்றி ஆகும். நார்வேயை சேர்ந்த லெஜண்ட் ஆன கார்ல்சனை அவரது சொந்த மண்ணான ஸ்டாவ்அங்கரில் வீழ்த்தியதால, இந்த வெற்றி குகேஷிற்கு மேலும் சிறப்பு வாய்ந்ததாக மாறியுள்ளது.
Gukesh turns it all around and WINS his first classical game against Magnus Carlsen!https://t.co/7Aid1cvNlK#NorwayChess pic.twitter.com/KMpRadXJq0
— chess24 (@chess24com) June 1, 2025
வீடியோ வைரல்:
கடும் போட்டி நிறைந்த விளையாட்டில் வெள்ளைக் காய்களுடன் விளையாடி, 18 வயது குகேஷ் இறுதிவரை நிதானத்தை கைவிடாமல் தனது திறனை வெளிப்படுத்தினார். ஆட்டத்தின் பெரும்பாலான நேரங்களில் கார்ல்செனின் கையே ஓங்கி இருந்தது. ஆனால், பதற்றமடையாத குகேஷ் தனக்கான வாய்ப்பு கிடைக்கும் வரை காத்திருந்தார். போட்டி நிறைவடையும் போது கார்ல்செனிற்கு நேரம் குறைவாக இருந்ததால், அழுத்தம் ஏற்பட்டு மிகவும் அரிதான மற்றும் மோசமான காய் நகர்த்தல் மூலம் அவர் தவறிழைத்தார். அதனை குகேஷ் தனக்கான வாய்ப்பாக மாற்றிக்கொண்டார். இதன் பிறகு சற்றும் பின்வாங்காத அவர் அதிரடியான ஆட்டத்தால் வெற்றியை நோக்கி முன்னேறினார். ஒரு கட்டத்திற்கு மேல் வெற்றி வாய்ப்பு இல்லை என்பதை உணர்ந்த கார்ல்சென், டேபிளை ஓங்கி குத்தி தோல்வியை ஒப்புக்கொண்டார். குகேஷிடம் கையை குலுக்கிய பிறகு, காய்களை கலைத்து போட்டு விட்டு அங்கிருந்து வெளியேறினார்.
Gukesh beat Magnus for the first time in classical chess 🤩 What a day for the World Champion 💪 #NorwayChess pic.twitter.com/U7atQrEIjL
— Norway Chess (@NorwayChess) June 1, 2025
குகேஷ் வெற்றி கொண்டாட்டம்:
வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை கண்டபிறகு, போட்டி நடந்த அறையில் இருந்து வெளியே வந்த குகேஷ் தனது பயிற்சியாளரிடன் ஃபிஸ்ட் பம்ப் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். முன்னதாக உலக சாம்பியன் பட்டத்தை வென்றபோது, நான் பட்டத்தை வென்று இருந்தாலும் உலகின் சிறந்த வீரர் (மேக்னஸ் கார்ல்சன்) யார் என்பதை உலகமே அறியும் என குகேஷ் குறிப்பிட்டார். தற்போது அந்த கார்ல்சனையே வீழ்த்தி குகேஷ் சாதனை படைத்துள்ளார்.
முன்னதாக கடந்த ஆண்டு தமிழக வீரரான பிரக்ஞானந்தாவிடமும், கார்ல்சன் தோல்வியுற்று இருந்தது குறிபிடத்தக்கது.





















