ஐபிஎல் போட்டியில் இன்னிங்ஸின் முதல் ஓவரில் அதிக ரன்கள் வழங்கிய டாப் -3 பந்துவீச்சாளர்கள்
நேற்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா பந்துவீச்சாளர் சிவம் மாவி வீசிய முதல் ஓவரிலேயே 25 ரன்கள் விளாசினார். இந்நிலையில் ஐபிஎல் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸின் முதல் ஓவரில் அதிக ரன்கள் வழங்கிய பந்துவீச்சாளர்கள் யார் யார்?
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய டெல்லி கேபிடல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் டெல்லி அணியின் பிரித்வி ஷா கொல்கத்தா பந்துவீச்சை அடித்து நொறுக்கினார். குறிப்பாக கொல்கத்தா பந்துவீச்சாளர் சிவம் மாவி வீசிய முதல் ஓவரிலேயே 25 ரன்கள் விளாசினார்.
இந்நிலையில் ஐபிஎல் வரலாற்றில் முதல் ஓவரில் அதிக ரன்கள் வழங்கிய பந்துவீச்சாளர்கள் யார் யார்?
3. சிவம் மாவி:
நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் டெல்லி அணியின் பேட்டிங் போது சிவம் மாவி முதல் ஓவரை வீசினார். இதில் முதல் பந்து வைடு ஆக சென்றது. அதில் டெல்லி வீரர்கள் ஒரு ரன் ஓடியும் எடுத்தனர். பின்பு ஆடிய பிரித்வி ஷா 6 பவுண்டரிகள் விளாசினார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஒரே ஓவரில் 6 பவுண்டரிகள் கொடுத்த இரண்டாவது பந்துவீச்சாளர் என்ற தேவையில்லாத சாதனையையும் மாவி படைத்தார். இதற்கு முன்பாக ஶ்ரீநாத் அரவிந்த் 2013ஆம் ஆண்டில் ஒரே ஓவரில் 6 பவுண்டரிகள் கொடுத்தார்.
2. ஹர்பஜன் சிங்:
2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்று கொல்கத்தா முதலில் பேட்டிங் செய்தது. கொல்கத்தா அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக கம்பீர்- யுசஃப் பதான் களமிறங்கினர். ஆட்டத்தின் முதல் ஓவரை மும்பை வீரர் ஹர்பஜன் சிங் வீசினார். இதில் யுசஃப் பதான் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் விளாசினார். மேலும் கம்பீர் தனது பங்கிற்கு ஒரு சிக்சர் விளாசினார். அத்துடன் ஹர்பஜன் சிங் ஒரு நோ பாலும் வீசினார். இதனால் முதல் ஓவரில் இவர் 26 ரன்கள் வழங்கினார். இதன்மூலம் ஐபிஎல் போட்டியின் முதல் ஓவரில் அதிக ரன்கள் கொடுத்த வீரர்கள் பட்டியலில் 2ஆவது இடம்பிடித்தார்.
1. அபு நெசிம்:
2011ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் 2ஆவது குவாலிஃபையர் போட்டியில் மும்பை-பெங்களூரு அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து மும்பை அணியில் முதல் ஓவரை அபு நெசிம் வீசினார். பெங்களூரு அணியில் கெயில்-அகர்வால் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். முதல் பந்து வைடாக அமைந்தது. இதில் கீப்பர் பந்தை பிடிக்காததால் அகர்வால் ஒரு சிங்கிளும் எடுத்தார். அதன்பின்னர் கிறிஸ் கெயில் மூன்று பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் விளாசினார். அபு நெசிம் மேலும் ஒரு வைடு வீச அதை கீப்பர் பிடிக்காததால் பந்து பவுண்டரிக்கு சென்று 5 ரன்கள் ஆனது. இதனால் முதல் ஓவரில் மொத்தம் 27 ரன்கள் வழங்கினார். இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் இன்னிங்ஸின் முதல் ஓவரில் அதிக ரன்கள் கொடுத்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார்.