FIFA WC Saudi Arabia: அர்ஜெண்டினாவை வீழ்த்தி கலக்கல் வெற்றி... சவுதி அரேபியாவுக்கு நாளை விடுமுறை அறிவித்த மன்னர்!
1990இல் கேமரூன் அணி பெற்ற வெற்றிக்குப் பிறகு உலகக் கோப்பையில் அர்ஜென்டினாவை வீழ்த்திய ஐரோப்பாவைச் சேராத முதல் அணி என்ற பெருமையை சவுதி அரேபியா பெற்றுள்ளது.
இன்றைய உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் முன்னாள் சாம்பியனான அர்ஜெண்டினா அணியை வீழ்த்தி சவுதி அரேபியா கலக்கல் வெற்றிபெற்ற நிலையில், சவுதி அரேபியாவுக்கு நாளை பொது விடுமுறை அறிவித்து அந்நாட்டு பிரதமர், மன்னர் முகம்மது பின் சல்மான் உத்தரவிட்டுள்ளார்.
உலகின் பலம் வாய்ந்த கால்பந்து அணிகளுள் ஒன்றான அர்ஜெண்டினா அணி கடந்த 36 போட்டிகளில் தோல்வியை சந்திக்காமல் கோலோச்சி வந்தது. ஆனால் இந்தத் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இன்றைய உலகக்கோப்பை தொடரில் தங்களது முதல் போட்டியிலேயே சவுதி அரேபிய அணியிடம் அர்ஜெண்டினா அதிர்ச்சித் தோல்வியைத் தழுவியது.
முன்னாள் சாம்பியனான அர்ஜெண்டினாவை 2 - 1 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியா வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.
இன்றைய ஆட்டத்தின் 9ஆவது நிமிடத்தில் நட்சத்திரக் கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி கோல் அடித்த நிலையில், 1 -0 என்ற கணக்கில் ஆட்டத்தின் முதல் பாதியில் அர்ஜெண்டினா முன்னிலை வகித்தது.
ஆனால் அதன் பின் அர்ஜெண்டினா தடுமாறிய நிலையில், ஆட்டத்தின் 48, 54ஆவது நிமிடங்களில் சவுதி அரேபிய அணியின் அல்ஷெரி, அல்டவ் சராய் ஆகிய வீரர்கள் அடுத்தடுத்து அதிரடியாய் கோல் அடித்து சவுதி அரேபிய அணியை வெற்றிப்பாதைக்கு இட்டுச் சென்றனர். தொடர்ந்து 2-1 என்ற கோல் கணக்கில் முன்னாள் சாம்பியனான அர்ஜெண்டினாவை சவுதி அரேபியா வீழ்த்தியுள்ளது.
View this post on Instagram
இந்நிலையில், 1990ஆம் ஆண்டு கேமரூன் அணிக்குப் பிறகு உலகக் கோப்பையில் அர்ஜென்டினாவை வீழ்த்திய முதல் ஐரோப்பியா அல்லாத அணி என்ற பெருமையை சவுதி அரேபியா இன்று பெற்றுள்ளது.
இந்நிலையில், சவுதி அரேபியா அணியின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், நாளை சவுதி அரேபியாவுக்கு பொது விடுமுறை அறிவித்து அந்நாட்டு மன்னரும் பிரதமருமான முகம்மது பின் சல்மான் உத்தரவிட்டுள்ளார்.