Chennai Sangamam 2025: “சென்னை சங்கமம்” - 50 விதமான கலைநிகழ்ச்சிகள், உணவும், பொழுதுபோக்கும், எங்கெல்லாம் தெரியுமா?
Chennai Sangamam: ”சென்னை சங்கமம்” நிகழ்ச்சியை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

Chennai Sangamam: ”சென்னை சங்கமம்” நிகழ்ச்சியில் இடம்பெறும் பொழுதுபோக்கு அம்சங்கள் குறித்து கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
”சென்னை சங்கமம்” நிகழ்ச்சி:
பொங்கல் பண்டிகையை ஒட்டி சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள ஏகாம்பரநாதர் ஆலய திடலில் ‘சென்னை சங்கமம்' திருவிழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். இவ்விழாவில் புகழ்பெற்ற 250 கலைஞர்கள் இணைந்து நடத்தும் மாபெரும் இசை, நடன நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், சென்னை மக்களுக்கு இது ஒரு சிறந்து பொழுதுபோக்கு அம்சமாக திகழும். பெரும் செலவு செய்யாமல், குடும்பத்துடன் பொழுதுபோக்குவதுடன், பாரம்பரிய நாட்டுப்புற கலைகளையும் கண்டுகளிக்க இந்த நிகழ்ச்சி வாய்ப்ப்பை ஏற்படுத்தி தருகிறது.
தமிழ்நாடு அரசு அறிவிப்பு:
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பொங்கல் திருநாளையொட்டி, தமிழ் மண்ணின் கலைகளைக் களிப்போடு கொண்டாடும் வகையில் சென்னை மாநகரில் பல்வேறு வகையான கலை நிகழ்ச்சிகளுடன் கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் "சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா" கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டிற்கான 'சென்னை சங்கமம்- நம்ம ஊரு திருவிழா' சென்னை, கீழ்ப்பாக்கம் பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரநாதர் ஆலயத் திடலில் 13.1.2025 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்படுகிறது. இதில் தமிழ்நாட்டின் புகழ் பெற்ற 250 கலைஞர்கள் இணைந்து நடத்தும் மாபெரும் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. மேலும், சென்னையில் 18 இடங்களில் 14.1.2025 முதல் 17.1.2025 வரை நான்கு நாட்கள் மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை நடைபெற உள்ளன.
கலைநிகழ்ச்சி விவரங்கள்:
இவ்விழாவில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் தேர்வு செய்யப்பட்டுள்ள 1500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் நையாண்டி மேளம், கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், இறை நடனம், தப்பாட்டம், துடும்பாட்டம்,பம்பையாட்டம், கைச்சிலம்பாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், சேவையாட்டம், கோலாட்டம், ஜிக்காட்டம், ஜிம்பளா மேளம், பழங்குடியினர் நடனம், சிலம்பாட்டம், மல்லர் கம்பம், வில்லுபாட்டு, கணியன் கூத்து, தெருக்கூத்து, பாவைக்கூத்து, தோல்பாவைக்கூத்து, நாடகம், கிராமிய ஆடல், பாடல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அத்துடன் புகழ்பெற்ற செவ்வியல் மற்றும் மெல்லிசைக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளும், கேரளத்தின் தெய்யம் நடனம், மகாராஷ்டிராவின் லாவணி நடனம், ராஜஸ்தான் கூமர் நடனம், மேற்கு வங்காளம் கனுச்சி நடனம், கோவாவின் விளக்கு நடனம், உத்தராகண்ட்டின் சபேலி நடனம் ஆகிய பிற மாநிலக் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.
உணவுத்திருவிழா:
சென்னை சங்கமம் விழா நடைபெறும் இடங்களில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் விரும்பி உண்ணும் பல உணவு வகைகளைக் கொண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு உணவுத்திருவிழாவும் நடைபெறவுள்ளது.
சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியைத் தொடர்ந்து கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, காஞ்சிபரம் மற்றும் வேலூர் ஆகிய எட்டு நகரங்களிலும் இந்த ஆண்டு ”சங்கமம் - நம்ம ஊரு திருவிழா” கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன” என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

