"பெரியாரைப் பத்தி தப்பா பேசுறவங்க பிறப்பைச் சந்தேகப்பட்றேன்" கோபத்தின் உச்சியில் துரைமுருகன்
பெரியார் குறித்து அவதூறாக பேசுபவர்களின் பிறப்பையே நான் சந்தேகப்படுகிறேன் என்று அமைச்சர் துரைமுருகன் பேசியுள்ளார்.

திராவிட கட்சிகளின் வழிகாட்டியாக திகழும் பெரியார் பற்றி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது பெரும் சர்ச்சையை தமிழ்நாட்டில் ஏற்படுத்தியுள்ளது. அவரது கருத்துக்கு தி.மு.க. கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளது. மேலும், சீமானின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரை கைது செய்ய வேண்டுமென பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
பிறப்பைச் சந்தேகப்படுகிறேன்
இந்த நிலையில், தி.மு.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,
கேள்வி: ஆளுநர் முதலமைச்சருக்கு இருக்கும் ஆணவம் சரியில்லை என்று கூறியிருக்கிறாரே?
பதில்: மரபு அது அல்ல. இத்தனை ஆண்டுகாலமாக முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதமும் பாடப்பட்டு வந்தது. அந்த மரபை மாற்றச் சொன்னவர் அவர்தான். தவறு செய்தவர் அவர்தான். அவர் முதலமைச்சரைப் பார்த்து ஆணவம் என்கிறார். அவருக்கு கவர்னர் என்ற திமிர் உள்ளது.
கேள்வி: பெரியார் எந்த சமுதாயத்திற்கு நல்லது செய்தார்? என்ன புரட்சி செய்தார்? என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
பதில்: பெரியார் பற்றி அவதூறாக பேசுபவர்களின் பிறப்பையே நான் சந்தேகப்படுகிேறன்.
கேள்வி: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. மட்டுமே களத்தில் உள்ளது. அது பற்றி உங்கள் கருத்து?
பதில்: அனைவரும் புறக்கணித்து விட்டார்கள். அவ்வளவு பலமாக இருக்கிறோம் என்று அர்த்தம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பெரியார் குறித்து சர்ச்சைப் பேச்சு:
பெரியார் பற்றி சீமான் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி வரும் சூழலில், அமைச்சர் சீமானை மறைமுகமாக குறிப்பிட்டு அவரது பிறப்பையே சந்தேகப்படுகிறேன் என்று பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரியார் குறித்து சீமான் பேசியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், நேற்று இதற்கு விளக்கம் அளித்த சீமான் அம்பேத்கர் சிந்தனையும், பெரியாரின் சிந்தனையும் ஒன்றா? என கேள்வி எழுப்பினார். மேலும், பெரியார் எந்த சமுதாயத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டார். பெரியாருக்கு இனமே கிடையாது என்றும் சீமான் பேசினார்.
ஆளுநர் - தமிழக அரசு மோதல் போக்கு
மேலும், சட்டசபைக் கூட்டத்தொடரில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையைப் படிக்காமலே சென்ற பிறகு, தேசிய கீதம் முதலில் இசைக்கப்படவில்லை என்று கூறி வெளிநடப்பு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் முதலமைச்சருக்கு அகங்காரம் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த சில நாட்களாகவே ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தமிழக அரசுக்கும் மோதல் போக்கு இல்லாமல் இருந்து வந்த நிலையில் மீண்டும் ஆளுநர் - தமிழக அரசு மோதல் போக்கு தொடங்கியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

