Bhogi Air Quality: மக்களே உஷார்..! போகி கொண்டாட்டம், சென்னையை சூழ்ந்த கரும்புகை, காற்றில் பிளாஸ்டிக் நச்சு
Bhogi Chennai Air Quality: போகி கொண்டாட்டத்தால் சென்னையில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது.

Bhogi Air Quality: போகி கொண்டாட்டத்தால் சென்னையை கரும்புகை சூழ்ந்தபடி காட்சியளிக்கிறது.
போகி கொண்டாட்டம்:
தை திருநாளான பொங்கலை வரவேற்கும் விதமாக, மார்கழியின் கடைசி நாளான இன்று போகிப் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. ”பழையன கழிதல், புதியன புகுதல்” என்பதே இந்த நாளின் முக்கிய நோக்கமாகும். அதன்படி, தமிழகம் முழுவதும் அதிகாலையிலேயே எழுந்த பொதுமக்கள், வீட்டில் இருந்த பழைய பொருட்களை எரித்தனர். அந்த தீயில் பழைய பாய், பழைய துணிகள் போன்றவற்றை எரித்தனர். பலர் மரக்கட்டைகளை போட்டு, கிராமப்புறங்களில் போகிக்காக வெட்டி வந்த முட்களை கொண்டு தீ மூட்டினார். அதோடு, மேளம் போன்ற இசை வாத்தியங்களை வாசித்தும் போகியை உற்சாகமாக கொண்டாடினர்.
விதிகளை மறந்த பொதுமக்கள்:
போகிப்பண்டிகையை உற்சாகமாக கொண்டாடும் வேளையில், அரசு கொடுத்த வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் ஏராளமானோர் மறந்துவிட்டனர் என்பதே உண்மை. காரணம், பாய், துணி மற்றும் மரக்கட்டைகள் போன்றவற்றோடு, ரப்பர் டயர்கள், பிளாஸ்டிக் சூட்கேஸ்கள் என காற்று மாசு ஏற்படுத்தக்கூடிய பொருட்களையும் தீயிட்டு கொளுத்தினர். ஆனால், காற்று மாசுபாட்டை ஏற்படுத்தக் கூடிய பொருட்களை எரிக்க வேண்டாம் என அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னையை சூழ்ந்த கரும்புகை
போகிப்பண்டிகையை கொண்டாடும் விதமாக, பிளாஸ்டிக் மற்றும் டயர்களை எரித்ததால் கரும்புகை எழுந்து சென்னையை சூழ்ந்துள்ளது. பனியுடன் சேர்ந்து கரும்புகையும் சேர்ந்து, அடர் பனியாக காட்சியளிக்கிறது. ஒருபுறம் குளிர், நள்ளிரவில் பெய்த மழை, கரும்புகை ஆகியவற்றால், சென்னையே இருண்டு காணப்படுகிறது. அதிகாலையில் பணிக்கு செல்பவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
பொதுமக்கள் உஷார்
போகிப்பண்டிகை கொண்டாட்டத்தில் சென்னையில் காற்றின் தரம் வழக்கமான நிலையை காட்டிலும் மோசமடைந்துள்ளது. காற்றை சுவாசிக்கும்போதே அதில் பிளாஸ்டிக் வாசம் இருப்பதை உணர முடிகிறது. அதாவது எரிக்கப்பட்ட பொருட்களின் நுண்துகள்கள் காற்றில் கலந்துள்ளன. நெருக்கமான கட்டிடங்கள் மற்றும் பனி காரணமாக, நுண்துகள் காற்றில் பயணித்து வெளியேற முடியாமல் சென்னை நகரை சூழ்ந்தபடி உள்ளன. எனவே, ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறு கொண்டவர்கள், இன்று அதிகாலையில் வெளியே செல்வதை தவிர்ப்பது நல்லது. குறிப்பாக சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் வெளியே செல்வதை தவிர்க்கலாம்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

