Lionel Messi: அர்ஜென்டினா அணிக்காக ஆட சீனா சென்ற மெஸ்ஸி… விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்திய போலீசார்!
மெஸ்ஸியை சீன விமான நிலையத்தில் காவல்துறையினர் நிறுத்தி விசாரித்த நிலையில், அர்ஜென்டினாவின் நட்புறவுப் போட்டிக்கான ஏற்பாடுகள் ஒரு சிறிய சிக்கலை எதிர்கொண்டது போல் தெரிகிறது.
அர்ஜென்டினா கால்பந்து அணிக்காக விளையாட சீனா வந்தபோது, பெய்ஜிங் விமான நிலையத்தில் லியோனல் மெஸ்ஸியை சீன போலீசார் நிறுத்தி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சீனா சென்ற மெஸ்ஸிக்கு சிக்கல்
வியாழன் அன்று பெய்ஜிங்கில் உள்ள வேர்க்கர்ஸ் ஸ்டேடியத்தில் நடைபெறும் சர்வதேச நட்பு அடிப்படையிலான போட்டியில் அர்ஜென்டினா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள உள்ளது. இந்த போட்டியை ஒட்டி, நடப்பு ஃபிஃபா உலகக் கோப்பை சாம்பியன்களான அர்ஜென்டினா தங்கள் ஃபார்மை மென்மேலும் கட்டியெழுப்பவும், சீனாவில் உள்ள ரசிகர்களைக் கவரவும் விரும்புவார்கள். ஆனால், கேப்டன் லியோனல் மெஸ்ஸியை சீன விமான நிலையத்தில் காவல்துறையினர் நிறுத்தி விசாரித்த நிலையில், அர்ஜென்டினாவின் நட்புறவுப் போட்டிக்கான ஏற்பாடுகள் ஒரு சிறிய சிக்கலை எதிர்கொண்டது போல் தெரிகிறது.
பாஸ்போர்ட் பிரச்சனை காரணமாக தடுத்து வைத்த போலீசார்
பெய்ஜிங்கிற்கு வந்த 35 வயதான அவர், விசாவிற்கு விண்ணப்பிக்காததால், பாஸ்போர்ட் பிரச்சனை காரணமாக விமான நிலையத்தில் போலீசாரால் தடுத்து வைக்கப்பட்டார். மெஸ்ஸி அர்ஜென்டினா மற்றும் ஸ்பானிஷ் பாஸ்போர்ட் என இரண்டையும் வைத்திருக்கிறார். அதில் அவர் ஸ்பானிஷ் பாஸ்போர்ட்டை சீனாவிற்கு எடுத்துச் சென்றுள்ளார். அதில் பிரச்சனை என்னவென்றால், ஸ்பானிஷ் பாஸ்போர்ட்டுகளுக்கு சீனாவிற்குள் விசா இல்லாத நுழைவு இல்லை. ஆனால் அவற்றை கொண்டு விசா இல்லாமல் தைவானுக்குள் நுழைய முடியும். தைவான் சீனாவின் ஒரு பகுதிதான் என்று அர்ஜென்டினா நினைத்ததாகவும், அதனால் விசாவிற்கு விண்ணப்பிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
ஒருவழியாக விசா கிடைத்தது
ஆரம்பத்தில், மெஸ்ஸி மற்றும் சீன விமான நிலைய காவலர்களுக்கு இடையே மொழி பிரச்சனை இருந்தது, ஆனால் விரைவில் ஒரு ட்ரான்சிலேட்டரை அனுப்பி அது தீர்க்கப்பட்டது. இதனால் அவர் அங்கிருந்தபடியே விரைவாக விசாவைப் பெற்றார். இதன்மூலம் அவர் நட்புரீதியிலான போட்டியில் விளையாடுவது உறுதியாகி உள்ளது. மெஸ்ஸி சமீபத்தில் PSG யில் இருந்து விலகி இன்டர் மியாமியில் சேர்ந்தார். மூத்த வீரரான அவர் தனது கடைசி போட்டியில் ஆடும்போது PSG ரசிகர்களால் கேலி செய்யப்பட்டார்.
Earlier today at the Beijing airport, Leo Messi faced some issues with his passport. pic.twitter.com/rLNwI3W4nJ
— Leo Messi 🔟 Fan Club (@WeAreMessi) June 10, 2023
ஆதரவு தந்த சக வீரர் செர்ஜியோ அகுவேரோ
அவர் பிரான்சில் இருந்த போது நடந்த இந்த பிரசனையின் போது, மெஸ்ஸியின் பாதுகாப்பிற்காக விரைந்த முன்னாள் சக வீரர் செர்ஜியோ அகுவேரோ, "பிஎஸ்ஜியில் மெஸ்ஸி நன்றாக ஆடி வரும்னேரம் இது. சாம்பியன்ஸ் லீக் உட்பட ஐந்து முக்கிய லீக்குகளை கணக்கிட்டால், 20 கோல்கள் அடித்ததுடன், 20 கோள்களுக்கு உதவியாக இருந்துள்ளார். இந்த அளவு பங்களித்த இரண்டே வீரர்கள் மட்டுமே அணியில் உள்ளனர். ஒருவர் மெஸ்ஸி மற்றும் மற்றவர் வினிசியஸ். அவர் கோல்களுக்கு வழிவகுத்த 16 பாஸ்கள் கொடுத்துள்ளார்," என்று கூறினார். "கூடுதலாக, அவரது இரண்டு சீசன்களில் அவர் இரண்டு லீக் மற்றும் ஒரு பிரெஞ்சு சூப்பர் கோப்பையை வென்றார். இந்த சாதனைகள் அனைத்தும் எண்கள் என்றாலும், களத்தில் மெஸ்ஸி செய்யும் செயல், புள்ளிவிவரங்களுக்கு அப்பாற்பட்டது. PSG இல் அவரது இடத்தை சரியாக வைக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்," என்று அவர் மேலும் கூறினார்.