Messi Retirement: கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வா..? ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்த மெஸ்ஸி..!
அர்ஜெண்டினா அணிக்காக தேசிய போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என்று மெஸ்ஸி அறிவித்திருப்பது ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலக சாம்பியன் அர்ஜெண்டினா:
கத்தாரில் நடைபெற்று வந்த உலகக்கோப்பை கால்பந்து தொடர் நிறைவு பெற்றுள்ளது. உலகம் முழுவதும் ஆவலுடன் எதிர்பார்த்தது போலவே மெஸ்ஸியின் கைகளிடம் உலகக்கோப்பை தஞ்சம் அடைந்துள்ளது. நேற்று நடந்த விறுவிறுப்பான இறுதிப்போட்டியில் போட்டி நேரத்தில் இரு அணிகளும் 3-3 என்று சமநிலையில் இருந்ததால், பெனால்டி ஷூட் அவுட்டில் 4-2 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்று மகுடம் சூடியது.
நடப்பு உலகக்கோப்பைதான் மெஸ்ஸியின் கடைசி உலகக்கோப்பை என்று ஏற்கனவே தெரிந்த நிலையில், உலகக்கோப்பையுடன் கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் ஏற்கனவே அறிவித்திருந்தார். இதனால், இந்த கோப்பையை அர்ஜெண்டினா வெல்ல வேண்டும் என்று ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்தனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பை நேற்று இரவு பூர்த்தி செய்து தந்த மெஸ்ஸி போட்டி முடிந்த பிறகு ரசிகர்களுக்கு மற்றொரு இன்ப அதிர்ச்சி அளித்தார்.
ஓய்வு இல்லை:
போட்டி முடிந்த பிறகு ஓய்வு குறித்த கேள்விக்கு பேட்டி அளித்த மெஸ்ஸி, “தேசிய அணியில் இருந்து நான் ஓய்வு பெறப்போவதில்லை. நான் உலக சாம்பியனாக அர்ஜெண்டினா சீருடையில் தொடர்ந்து விளையாடுவேன். உலகக்கோப்பையை கடவுள் எனக்கு கொடுக்கப்போகிறார் என்று எனக்கு தெரியும்.” இவ்வாறு அவர் கூறினார். மெஸ்ஸியின் இந்த அறிவிப்பால் அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நூற்றாண்டின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான மெஸ்ஸிக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் அர்ஜெண்டினா அணி கோப்பையை வெல்ல மெஸ்ஸிதான் முழுக்காரணம் என்றே சொல்லலாம். அவர் பெனால்டி ஷூட் அவுட்டில் 1 கோலும், போட்டியின்போது 2 கோல்களும் அடித்து அர்ஜெண்டினா வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.
மெஸ்ஸி அபாரம்:
இந்த தொடர் முழுவதும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மெஸ்ஸி, மொத்தம் 7 கோல்களை விளாசியதுடன் 3 பேர் கோல் அடிக்க உதவியாக இருந்துள்ளார். இந்த சீசன் முழுவதும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், அர்ஜெண்டினா அணியை சிறப்பாக வழிநடத்தி அந்த நாட்டு மக்களின் 36 ஆண்டுகால காத்திருப்பை மெஸ்ஸி தீர்த்து வைத்திருப்பது ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: FIFA WORLDCUP 2022: இறுதிவரை திக்..திக்..! பெனால்டி ஷூட் அவுட்டில் மிரட்டல்...! சாம்பியன் பட்டத்தை வென்ற அர்ஜெண்டினா..!
மேலும் படிக்க: Golden Boot: தோற்றாலும் வீரன் வீரனே.. கோல்டன் பூட் விருதை வென்றார் பிரான்ஸின் 'தங்கமகன்' எம்பாப்பே..!