FIFA WORLDCUP 2022: அர்ஜெண்டினா போட்டியின் போது மைதானத்தில் ஏற்பட்ட மரணம்; சோகத்தில மூழ்கிய கத்தார்..!
FIFA WORLDCUP 2022: உலகக் கோப்பை போட்டியின் போது மைதானத்தில் பாதுகாப்பில் இருந்த பாதுகாவலர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
FIFA WORLDCUP 2022: உலகக் கோப்பை போட்டியின் போது மைதானத்தில் பாதுகாப்பில் இருந்த பாதுகாவலர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
கடந்த 10ஆம் தேதி கத்தாரில் உள்ள லூசைஸ் மைதானத்தில் அர்ஜெண்டினா நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான காலிறுதிப் போட்டி நடைபெற்றது. மிகவும் விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில், அர்ஜெண்டினா அணி வெற்றிபெற்றது. இந்த போட்டியின்போது, மைதானத்தில் பாதுகாப்பில் இருந்த பாதுகாவலர், 8வது தளத்தில் இருந்து தவறி விழுந்துள்ளார். இதனால், உடனடியாக மைதானத்தில் இருந்த மருத்துவக் குழு அவருக்கு முதல் உதவி வழங்கியது. அதன் பின்னர், ஆம்புலன்ஸ் மூலம் ஹமாத் மருத்துவ மருத்துவமனையில் உள்ள அவசரப் பிரிவில் அனுமதித்துள்ளனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தாலும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
View this post on Instagram
பாதுகாவலரின் மரணம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள அறிக்கையில், ஜான் ஜாவ் கிபு என்ற பாதுகாவலர், தவறி விழிந்து காயமடைந்தார். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தவர் உயிரிழந்துள்ளார். கென்யாவைச் சேர்ந்தவரான அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
10ஆம் தேதி நடந்த காலிறுதிப் போட்டியில், முதல் பாதி ஆட்டம் முழுவதும் அர்ஜென்டீனாவின் ஆதிக்கமே அதிகம் காணப்பட்டது. ஆனால், இரண்டாவது பாதியில் நெதர்லாந்து அணியும் தடுப்பு ஆட்டத்திற்குப் பதிலாக, அதிரடியாக கோலடிக்க முயற்சித்தது. ஆனால், அர்ஜென்டீனா தடுப்பு ஆட்டமும் கோல் கீப்பர் பெர்ணான்டஸின் மிகச்சிறந்த தடுப்புகளும் நெதர்லாந்துக்குப் பெரும் ஏமாற்றமாக அமைந்தன.
73 -வது நிமிடத்தில், அர்ஜென்டீனாவிற்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி, நட்சத்திர வீரர் மெஸ்ஸி கோலடித்து, முன்னணியை அதிகப்படுத்தினார். ஆனால், நெதர்லாந்து வீரர்கள் தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதற்கு வெற்றிக் கிடைக்கும் வகையில், 83-வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் வெக்ஹோர்ஸ்ட் கோலடித்தார்.
இதனால், ஆட்டத்தின் கடைசி நிமிடங்கள் பெரும் பரபரப்பாக மாறிவிட்டது. ஒவ்வொரு நிமிடமும் கோல் கம்பம் அருகே பந்து செல்லும் போதெல்லாம், கோல் விழுமா என்ற எதிர்பார்ப்பை பன்மடங்கு அதிகப்படுத்தியது என்றால் தவறில்லை. 2-வது கோலடித்து சமன் செய்ய முயற்சித்த நெதர்லாந்து அணி கடுமையாகப் போராடியது. இந்தச் சூழலில், 90 நிமிடங்கள் முடிந்தது. ஆனால், "ஸ்டாப்பேஜ் டைம்" என கூடுதலாக 10 நிமிடங்கள் கொடுக்கப்பட்டது. இந்த கூடுதல் நேரமும் முடிவடைய ஒரு நிமிடம் இருந்தபோது, யாரும் எதிர்பாராத வகையில், நெதர்லாந்து வீரர் வெக்ஹோர்ஸ்ட் மீண்டும் கோலடித்து, போட்டியை சமன் செய்தார்.
இதையடுத்து, கூடுதல் நேரமாக அரை மணி நேரம் வழங்கப்பட்டது. இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. இதையடுத்து, 120 நிமிட ஆட்டத்திற்குப் பிறகும் 2-2 என கோல்கணக்கு சமனில் இருந்ததால், ஆட்டத்தின் முடிவைத் தீர்மானிக்க, இரு அணிகளுக்கும் கோலடிக்க தலா 5 வாய்ப்புகள் தரும் முதல் பெனால்டி ஷூட் வழங்கப்பட்டது. அர்ஜென்டீனா கோல்கீப்பர் மார்டினஸ், அடுத்தடுத்து கோல்களைத் தடுத்து, அர்ஜென்டீனாவின் வெற்றியை உறுதி செய்தார். பெனால்டி ஷூட் முறையில் அர்ஜென்டீனா 4 கோல்களும், நெதர்லாந்து 3 கோல்களும் அடித்தனர். இதனால், பெனால்டி ஷூட்டில் 4-3 என்ற கோல் கணக்கில், கால் இறுதி ஆட்டத்தில் நெதர்லாந்தைத் தோற்கடித்து, அர்ஜென்டீனா அணி, அரைஇறுதிக்குள் நுழைந்தது.
2014-ம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியின் அரை இறுதி ஆட்டத்திலும், இதேபோன்று, பெனால்டி ஷூட் முறையில் நெதர்லாந்தைத் தோற்கடித்தது அர்ஜென்டீனா என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மைதானத்தில் தான் கால்பந்து போட்டித் தொடரின் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.