FIFA World Cup 2022: உலகக்கோப்பை கால்பந்து திருவிழா: இன்று மோதப்போவது எந்தெந்த அணிகள்..?
FIFA World Cup 2022: ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவின் நான்காவது நாளான இன்று நேருக்கு நேர் மோதவுள்ள அணிகள் குறித்து இங்கு காணலாம்.
22வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கடந்த ஞாயிற்றுக் கிழமை கத்தார் நாட்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 32 அணிகள் 64 போட்டிகள் என கத்தார் நாடே கால்பந்து திருவிழாவில் மூழ்கிக்கொண்டுள்ளது. மொத்தம் 29 நாட்கள் நடக்கும் போட்டியின் நான்காவது நாளான இன்று மொத்தம் நான்கு போட்டிகள் நடைபெறுகிறது. டி, எஃப் மற்று இ ஆகிய பிரிவில் இடம் பெற்றுள்ள அணிகளுக்கு இன்று போட்டிகள் நடைபெற உள்ளன.
இன்றைய போட்டிகள்
- மொராக்கோ - குரோஷியா
- ஜெர்மன் - ஜப்பான்
- ஸ்பெயின் - கோஸ்டா ரிகோ
- பெல்ஜியம் - கனடா
மொராக்கோ - குரோஷியா:
2018 FIFA உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தோல்வியை தழுவிய குரோஷியா, இந்த உலகக்கோப்பையின் தனது தொடக்க ஆட்டத்தில் மொராக்கோவை எதிர்கொள்கிறது. சர்வதேச அளவில் தொடர்ந்து ஐந்து போட்டிகளில் பெற்ற வெற்றிகளுடன், மொராக்கோ அணி இன்றைய போட்டியில் களமிறங்குகிறது.
மறுபுறம் மொராக்கோவும், தனது கடைசி ஐந்து ஆட்டங்களில் தோல்வியடையாமல் உள்ளது. சர்வதேச தரவரிசைப்பட்டியில் குரோஷியா 12வது இடத்திலும், மொராக்கோ 22 இடத்திலும் உள்ளது. சர்வதேச அளவிலான அதிகாரப்பூர்வ போட்டியில், முதல் முறையாக இரு அணிகளும் எதிகொள்ள உள்ளன. சம பலத்துடன் உள்ள இரண்டு அணிகள் மோதும் இப்போட்டி, இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு, அல் பேத் மைதானத்தில் நடைபெற உள்ளது.
ஜெர்மன் - ஜப்பான்:
நான்கு முறை உலக சாம்பியனான ஜெர்மனி அணி, நடப்பு தொடரில் தனது முதல் போட்டியில் ஜப்பானை எதிர்த்து களம் காண உள்ளது. கடைசியாக விளையாடிய 9 போட்டிகளில் இரண்டில் மட்டுமே ஜெர்மன் அணி வெற்றி பெற்றுள்ளது. ஜப்பான் அணி தனது கடைசி 3 போட்டிகளில், ஒரு, ஒரு தோல்வி மற்றும் ஒரு டிராவை பதிவு செய்துள்ளது. சர்வதேச தரவரிசைப்பட்டியலில் ஜெர்மன் 11வது இடத்திலும், ஜப்பான் 24வது இடத்திலும் உள்ளன. ஜப்பான் உடனான கடைசி 4 போட்டிகளிலும் தோல்வியே சந்திக்காத ஜெர்மன் அணி, 2 போட்டிகளில் வெற்றியை பதிவு செய்துள்ளது. கலீஃபா மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 06.30 மணிக்கு இந்த போட்டி தொடங்க உள்ளது.
ஸ்பெயின் - கோஸ்டா ரிகோ:
அல் துமாமா மைதானத்தில் நடைபெற உள்ள போட்டியில், ஸ்பெயின் மற்றும் கோஸ்டா ரிகோ அணி பலப்பரீட்சை நடத்த உள்ளன. சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வந்த ஸ்பெயின் அணி, கடைசி 10 போட்டிகளில் சந்தித்த முதல் தோல்வியுடன் இன்று மைதானத்தில் களம் இறங்க உள்ளது. கடந்த உலகக்கோப்பை தொடரில் லீக் சுற்றிலேயே வெளியேறிய சூழலை, நடப்பாண்டில் மாற்றும் நோக்கில் கோஸ்டா ரிகோ அணி போட்டியில் விளையாட உள்ளது.
இரு அணிகளும் இதுவரை இருமுறை நேருக்கு நேர் மோதிக்கொண்ட போட்டியில், ஸ்பெயின் அணி தோல்வியை சந்திக்காமல் ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளது. சர்வதேச புள்ளிப்பட்டியலில் ஸ்பெயின் அணி 7வது இடத்திலும், கோஸ்டா ரிகோ 31வது இடத்திலும் உள்ளன. இந்திய நேரப்படி, இரவு 9.30 மணிக்கு போட்டி தொடங்க உள்ளது.
பெல்ஜியம் - கனடா:
அகமது பின் அலி மைதானத்தில் இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெற உள்ள போட்டியில், பெல்ஜியம் மற்றும் கனடா அணிகள் மோத உள்ளன. சர்வதேச புள்ளிப்பட்டியலில் பெல்ஜியம் அணி இரண்டாவது இடத்திலும், கனடா அணி 41வது இடத்திலும் உள்ளன.
முன்னதாக ஒருமுறை மட்டுமே இரு அணிகளும் மோதிய நிலையில், பெல்ஜியம் அணி கனடாவை எளிதில் வீழ்த்தி இருந்தது. ஆனால், கடந்த சில மாதங்களாக பெல்ஜியம் அணி பெரிதாக சோபிக்காத நிலையில், அவர்களுக்கு கனடா அணி வீரர்கள் அதிர்ச்சி அளிக்கக் கூடும் என கூறப்படுகிறது. போட்டிகள் அனைத்தும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 18 சேனலில் ஒளிபரப்பாகவுள்ளது.