FIFA World Cup 2022: ஆடாமலே 73 கோடி ரூபாய் பெறும் அணிகள்; கோப்பையை வென்றால் பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?
FIFA World Cup 2022: ஃபிஃபா உலகக் கோப்பை கால் பந்து திருவிழாவில் கலந்துகொள்ளும் அணிகள் மற்றும் வெற்றி பெறும் அணிகள் பெரும் பரிசுத் தொகை குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
FIFA World Cup 2022: ஃபிஃபா உலகக் கோப்பை கால் பந்து திருவிழாவில் கலந்துகொள்ளும் அணிகள் மற்றும் வெற்றி பெறும் அணிகள் பெரும் பரிசுத் தொகை குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் எந்த அளவிற்கு இருக்கிறார்களோ, அதை விட இரண்டு மடங்கு ரசிகர்கள் கால்பந்து விளையாட்டிற்கு உண்டு. கால்பந்து தொடரில் பல நாடுகளில் லீக் தொடர்கள் நடத்தப்பட்டாலும், ஃபிபா உலகக் கோப்பை என்றதும் ஒட்டுமொத்த உலக கால்பந்து ரசிகர்களும் உற்று நோக்கும் ஒரே தொடர் இந்த தொடர் மட்டும்தான்.
அந்தவகையில் ஃபிபா சர்வதேச கூட்டமைப்பு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பை கால்பந்து தொடரை நடத்தி வருகிறது. தற்போது நடைபெற இருக்கும் இந்த தொடரானது வருகின்ற 20ம் தேதி கத்தார் நாட்டில் தொடங்குகிறது. உலகக் கோப்பை கால்பந்து திருவிழா இன்னும் மூன்று நாட்களில் தொடங்கவுள்ளதால் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் மத்தியில் ஆர்வமும் ஆவலும் அதிகரித்து வருகிறது.
32 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றுகளில் விளையாட இருக்கின்றனர். முதல் போட்டியானது வருகின்ற 20ம் தேதி கத்தார்-ஈகுவடார் நாடுகளுக்கிடையே நடைபெற இருக்கிறது.
இந்த அதிகாரபூர்வ தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவும், உலகக் கோப்பை தொடருக்கு அணிகள் தயாராகும் வகையிலும் ஒவ்வொரு அணிகளும் பயிற்சி போட்டிகளில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.
3580 கோடி பரிசுத் தொகை
2022 ஆண்டு கத்தாரில் நாட்டில் நடக்கவுள்ள 22 ஆவது உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவில் பங்கேற்கவுள்ள ஒவ்வொரு அணிக்கும் 342 கோடி ரூபாயை வெல்லும் சமவாய்ப்பு உள்ளது. ஆம் கோப்பையை வெல்லும் அணிக்கு, கோப்பையுடன் 342 கோடி ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்படவுள்ளது. இரண்டாவது இடத்தினைப் பிடிக்கும்ம் அணிக்கு 244 கோடி ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மூன்றாவது இடம் பெறும் அணிக்கு 220 கோடி ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்படும். மேலும் நான்காவது இடம் பெறும் அணிக்கு 203 கோடி ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐந்து முதல் எட்டு வரையிலான இடம் பெறும் அணிகளுக்கு தலா 138 கோடி ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்படும். ஒன்பதாவது இடம் முதல் 16 வது இடம் வரை இடம் பெறும் அணிகளுக்கு தலா 106 கோடி ரூபாய் ஃபிபாவால் வழங்கப்படும். அதேபோல் 17வது முதல் 32 வரை இடம் பெறும் அணிகளுக்கு தலா 73 கோடி ரூபாய் வழங்கப்படவுள்ளது.
இந்தமுறை நடைபெறவுள்ள உலகக்கோப்பை கால்பந்தாட்ட திருவிழாவின் ஒட்டு மொத்தமாக பரிசுத் தொகை என்பது 3,580 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இது கடந்த 2018ல் நடத்தப்பட்ட உலகக்கோப்பை கால்பந்தாட்ட திருவிழாவில் வழங்கப்பட்ட பரிசுத்தொகை விடவும் 326 கோடி ரூபாய் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விபரங்களைப் பார்க்கும் போது உலகக் கோப்பை கால்பந்தில் கலந்து கொள்ளும் அணி கோப்பையை வெல்லாமாலே 73 கோடி ரூபாயை உறுதி செய்கிறது. ஆனால் 32 அணிகளில் ஒன்றாக தகுதி பெறாத இந்திய கால்பந்து அணியின் கால்பந்து ஃபெடரேஷனுக்கு இந்திய அரசு 2022-2023 நிதியாண்டில் 5 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.