FIFA World Cup 2022 Qatar: போட்டி தொடங்கும் முன் ஈரான் வீரர்கள் தேசிய கீதம் பாடவில்லை.. ஏன் தெரியுமா?
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் பி பிரிவில் இங்கிலாந்து - ஈரான் அணிகள் விளையாடி வருகின்றன. போட்டி தொடங்குவதற்கு முன்னதாக ஈரான் வீரர்கள் தேசிய கீதம் பாடவில்லை.
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் பி பிரிவில் இங்கிலாந்து-ஈரான் அணிகள் விளையாடி வருகின்றன. போட்டி தொடங்குவதற்கு முன்னதாக ஈரான் வீரர்கள் தேசிய கீதம் பாடவில்லை.
22 ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நேற்று தொடங்கியது. குரூப் ஏ பிரிவில் முதல் ஆட்டத்தில் கத்தாரை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியது ஈகுவடார்.
இந்நிலையில், குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள தரவரிசையில் 5ஆவது இடத்தில் உள்ள இங்கிலாந்து அணியும், தரவரிசையில் 20ஆவது இடத்தில் உள்ள ஈரானும் சந்தித்தன. இந்த ஆட்டம் நடைபெற்று வருகிறது.
ஈஷான் ஹஜ்சஃபி தலைமையிலான ஈரானும், ஹாரி கேன் தலைமையிலான இங்கிலாந்தும் ரசிகர்களின் ஆர்ப்பரிப்புடன் கலிஃபா இன்டர்நேஷனல் ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்குத் தொடங்கியது.
கால்பந்து விளையாட்டு தொடங்குவதற்கு முன் கிரிக்கெட் போலவே இரு நாட்டு தேசிய கீதமும் பாடப்படும்.
ஆனால், ஈரான் அணி வீரர்கள் தேசிய கீதத்தை பாடவில்லை. போட்டி தொடங்குவதற்கு முன்பு ஈரான் கேப்டன் அலிரெஸா ஜகன்பாக்ஷ் கூறுகையில், "ஈரான் அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தேசிய கீதத்தை பாடுவதா வேண்டாமா என்று அணி வீரர்களுடன் இணைந்து முடிவு செய்வோம்" என்று தெரிவித்திருந்தார்.
🇮🇷#IRN#FIFAWorldCup | #Qatar2022 pic.twitter.com/h7ItdBSDke
— FIFA World Cup (@FIFAWorldCup) November 21, 2022
எனினும், ஈரான் வீரர்கள் தேசிய கீதத்தைப் பாடவில்லை. 6-ஆவது முறையாக உலகக் கோப்பையில் கால்பதித்துள்ளது ஈரான். ஆனால், இதுவரை முதல் சுற்றைக் கூட தாண்டியதில்லை. இங்கிலாந்தும், ஈரானும் நேருக்கு நேர் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.
இதுவரை 51 கோல்கள் அடித்துள்ளார் இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேன். இன்னும் 3 கோல் போட்டால் அவர் அதிக கோல்கள் அடித்த இங்கிலாந்து வீரர் என்ற சாதனையைப் படைப்பார். ஏற்கனவே, வெய்ன் ரூனி 53 கோல்களை அடித்துள்ளார்.
3 கோல்கள்
இங்கிலாந்து அணி முதல் பாதி முடிவில் 3 கோல்களைப் பதிவு செய்தது. அட்டகாசமாக விளையாடி வருகிறது. ஆட்டத்தின் 22ஆவது நிமிடத்தில் ஈரான் கோல்கீப்பர் அலிரெசா பெரன்வான்ட்டுக்கு அடிபட்டது. இங்கிலாந்து முன்கள வீரருடன் எதிர்பாராதவிதமாக இடித்துக் கொண்டதில் அவருக்கு அடிபட்டது. மூக்கிலும் ரத்தம் வந்ததாக தெரிகிறது.
இதையடுத்து அவரே ஆடுகளத்தைவிட்டு வெளியேறுவதாக பயிற்சியாளரிடம் தெரிவித்தார்.
தூண் போன்ற நம்பிக்கை நட்சத்திரமான அலிரெஸா பெய்ரன்வான்ட் வெளியேறியது அந்நாட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது. அவருக்கு பதிலாக மாற்று கோல்கீப்பர் களமிறக்கப்பட்டார்.
இங்கிலாந்து அணி சார்பில் இளம் வீரர்களான ஜுட் பெல்லிங்ஹம் 35ஆவது நிமிடத்தில் முதல் கோலை போட்டார்.
அடுத்ததாக 43-ஆவது நிமிடத்தில் புகயோ சகா இரண்டாவது கோலையும், கூடுதல் நேரத்தில் ரஹீம் ஸ்டெர்லிங் ஒரு கோலையும் வலைக்குள் தள்ளினார். ஈரான் வீரருக்கு காயம் ஏற்பட்டதால் முதல் பாதி ஆட்டத்தில் சிறிது நேரம் காலதாமதம் ஆனது. அதன் காரணமாகவே கூடுதலாக 15 நிமிடங்கள் வழங்கப்பட்டன.
இங்கிலாந்து ஆதிக்கம்
ஆட்டம் தொடங்கியது முதலே இங்கிலாந்து அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. கால்பந்து அந்த அணியின் வசமே 99.3 சதவீதம் இருந்தது. என்ன செய்வதென்றே தெரியாமல் ஈரான் வீரர்கள் திணறினார்கள். ஈரான் வீரர்கள் 9 முறை தவறிழைத்தனர். ஒரு முறை மஞ்சள் அட்டையை காண்பித்து போட்டி நடுவர் எச்சரித்தார்.
லாவகமாக பந்தை வலைக்கு எடுத்துச் செல்வதிலும் இங்கிலாந்து வீரர்கள் சிறப்பாகச் செயல்பட்டனர்.
ஒரு சில முறை ஈரானுக்கு கோல் போட வாய்ப்பு கிடைத்தது. எனினும், அந்த அணியால் கோல் போட முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.
கலீஃபா சர்வதேச ஸ்டேடியம் (Khalifa International Stadium)
இந்த ஸ்டேடியம் 1976ஆம் ஆண்டு கட்டப்பட்டது. கத்தாருக்கு உலகக் கோப்பை போட்டியை நடத்தும் உரிமம் கிடைப்பதற்கு முன்பு அங்கு இருந்த ஒரே ஸ்டேடியம் இதுதான். இந்தப் போட்டிக்காக ஸ்டேடியம் புனரமைக்கப்பட்டுள்ளது. 8 ஆட்டங்கள் இங்கு நடக்கிறது. மூன்றாவது இடத்துக்கான (Third place) ஆட்டமும் இங்குதான் நடக்கவுள்ளது.