பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
ஒன்றாம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை அடுத்த வகுப்புகளுக்கு தேர்ச்சி பெறுவார்கள் என்பது விதிமுறையாக இருந்து வந்தது.
தமிழ்நாட்டு பள்ளிகளில் தற்போதைய தேர்ச்சி முறையே தொடரும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்திருந்தாலும் தமிழ்நாட்டில் தற்போதைய தேர்ச்சி முறையே தொடரும். மாற்றம் ஏதும் இல்லை. மத்திய அரசின் புதிய நடைமுறை மத்திய அரசின் பள்ளிகளுக்கு மட்டுமே பொருந்தும். மாணவர்கள் மகிழ்ச்சியோடும் பாதுகாப்போடும் கல்வி கற்பதற்கு உகந்த சூழலை ஏறப்டுத்துவதே திராவிட மாடல் அரசின் இலக்கு” எனத் தெரிவித்தார்.
முன்னதாக, ஒன்றாம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை அடுத்த வகுப்புகளுக்கு தேர்ச்சி பெறுவார்கள் என்பது விதிமுறையாக இருந்து வந்தது. இதனால் கல்வித் தரம் குறைவதாக அவ்வபோது குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இந்நிலையில்தான். ஆர்.டி.இ என்ற கல்வி உரிமை சட்டத்தின் விதிகள் திருத்தப்பட்டுள்ளன. அந்த விதிகளின் படி, ஐந்தாம் வகுப்பிலும் எட்டாம் வகுப்பிலும் மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். அந்த வகுப்புகளில் மாணவர்கள் தேர்ச்சி பெறாவிட்டால், அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும். அதாவது இரண்டு மாதங்களுக்கு பிறகு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்க வேண்டும் என திருத்தப்பட்டுள்ளது. அப்போதும் அவர் தேர்ச்சி பெறாவிட்டால் மீண்டும் ஒருமுறை அதேவகுப்பை மீண்டும் படிக்க வேண்டும் என மத்திய கல்வி அமைச்சகம் திருத்தம் கொண்டுவந்துள்ளது.