இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
சாதி, மதம் வேறுபாடுகளை களைந்து ஒன்று பட்டு செயல்பட்டால் இந்தியா முன்னேறும்.
சென்னை பெரம்பூர் டான்பாஸ்கோ பள்ளியில் திமுக சார்பில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.
அதில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், “எந்த மதமாக இருந்தாலும் அன்பை போதிக்க வேண்டும். சாதி, மதம் வேறுபாடுகளை களைந்து ஒன்று பட்டு செயல்பட்டால் இந்தியா முன்னேறும். சிறுபான்மையினரின் நலனில் முழுமையாக அக்கறை கொண்டுள்ள இயக்கம் திமுக.
மத்தியில் ஆளும் பாஜக அரசு சிறுபான்மையினரை அச்சுறுத்தும் அரசாக உள்ளது. சக மனிதர்கள் மீது பாகுபாடு காட்டக்கூடாது. மக்கள் நலன் அரசாக செயல்படுவதால்தான் மக்கள் தொடர்ந்து எங்களுக்கு வெற்றியை தருகிறார்கள்.
சமத்துவத்தை போற்றும் அரசாக திமுக உள்ளது. சமத்துவத்தை போற்றுவதும் பாதுகாப்பதும்தான் திராவிட மாடல் அரசு. திராவிட மாடல் என்றால் என்ன என்று கேட்பவர்களுக்கு இதுதான் பதில். தேவாலயங்களை புனரமைக்க அரசு நிதி ஒதுக்கியுள்ளது. ஜெருசலம் புனித பயணம் செல்வோருக்கு ரூ.37 ஆயிரம் நேரடியாக வழங்கப்படுகிறது. காந்தி அம்பேத்கர் படத்தை புறக்கணிக்கும் அளவுக்கு மக்கள் விரோத ஆட்சியை பாஜக நடத்துகிறது. நாடு நல்லவர்கள் கையில் பாதுகாப்பாக இருக்கும். சிறுபான்மை மக்களுக்கு துரோகங்களை செய்துவிட்டு வாக்கு அரசியலுக்காக நடிப்பவர்கள் நிறைய பேர் உள்ளனர். மதத்தை அரசியலுக்கு பயன்படுத்தி மக்களை தூண்டி விரோத அரசியல் செய்பவர்களுக்குத்தான் நாங்கள் எதிரி. மதசார்பின்மை என்ற சொல்லையே அரசியலமைப்பு சட்டத்தில் இருந்து நீக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. நாம் தேர்ந்தெடுக்கும் சொற்களே நாம் எந்த அரசியலை முன்னெடுக்கிறோம் என்பதை சொல்லும். ஒற்றுமையாக இருக்கும் இந்தியாவை சிதைத்து ஒற்றை இந்தியாவாக மாற்ற முயற்சிக்கிறார்கள். இதனால்தான் கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் பெரும்பான்மையை தரவில்லை. இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை. மக்கள் வேறுபட்டு இருந்தாலும் மனங்கள் ஒன்றுபட்டு இருக்க வேண்டும்.” என பேசியுள்ளார்.