FIFA WC 2022 Qatar: அசத்தலாக 6 கோல்கள்: ஈரானை ஈசியாக வீழ்த்திய இங்கிலாந்து...!
இங்கிலாந்து அணி 6-2 என்ற கோல் கணக்கில் ஈரானை வீழ்த்தியது. தொடக்கம் முதலே கால்பந்தை தங்கள் வசம் வைத்து ஆதிக்கம் செலுத்தியது முன்னாள் சாம்பியன் இங்கிலாந்து.
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் பி பிரிவில் தரவரிசையில் 5ஆவது இடத்தில் உள்ள இங்கிலாந்து அணியும், தரவரிசையில் 20ஆவது இடத்தில் உள்ள ஈரானும் இன்று சந்தித்தன. இதில் இங்கிலாந்து அணி 6-2 என்ற கோல் கணக்கில் ஈரானை வீழ்த்தியது.
22 ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நேற்று தொடங்கியது. குரூப் ஏ பிரிவில் முதல் ஆட்டத்தில் கத்தாரை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியது ஈகுவடார்.
ஈஷான் ஹஜ்சஃபி தலைமையிலான ஈரானும், ஹாரி கேன் தலைமையிலான இங்கிலாந்தும் ரசிகர்களின் ஆர்ப்பரிப்புடன் கலிஃபா இன்டர்நேஷனல் ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு இன்று (நவம்பர் 21) தொடங்கியது.
கால்பந்து விளையாட்டு தொடங்குவதற்கு முன் கிரிக்கெட் போலவே இரு நாட்டு தேசிய கீதமும் பாடப்படும். ஆனால், ஈரான் வீரர்கள் தேசிய கீதத்தைப் பாடவில்லை. போட்டி தொடங்குவதற்கு முன்பு ஈரான் கேப்டன் அலிரெஸா ஜகன்பாக்ஷ் கூறுகையில், "ஈரான் அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தேசிய கீதத்தை பாடுவதா வேண்டாமா என்று அணி வீரர்களுடன் இணைந்து முடிவு செய்வோம்" என்று தெரிவித்திருந்தார்.
எனினும், ஈரான் வீரர்கள் தேசிய கீதத்தைப் பாடவில்லை. 6-ஆவது முறையாக உலகக் கோப்பையில் கால்பதித்துள்ளது ஆசியாவின் முன்னணி அணியான ஈரான். ஆனால், இதுவரை முதல் சுற்றைக் கூட உலகக் கோப்பையில் இந்த அணி தாண்டியதில்லை. இங்கிலாந்தும், ஈரானும் நேருக்கு நேர் சந்திந்தது இதுவே முதல் முறையாகும்.
இதுவரை 51 கோல்கள் அடித்துள்ளார் இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேன். இன்னும் 3 கோல் போட்டால் அவர் அதிக கோல்கள் அடித்த இங்கிலாந்து வீரர் என்ற சாதனையைப் படைப்பார். ஏற்கனவே, வெய்ன் ரூனி 53 கோல்களை அடித்துள்ளார். இந்த ஆட்டத்தில் அவர் ஒரு கோல் கூட அடிக்கவில்லை.
6 கோல்கள்
இங்கிலாந்து அணி முதல் பாதி முடிவில் 3 கோல்களைப் பதிவு செய்தது. அட்டகாசமாக விளையாடி வருகிறது. ஆட்டத்தின் 22ஆவது நிமிடத்தில் ஈரான் கோல்கீப்பர் அலிரெசா பெரன்வான்ட்டுக்கு அடிபட்டது. இங்கிலாந்து முன்கள வீரருடன் எதிர்பாராதவிதமாக இடித்துக் கொண்டதில் அவருக்கு அடிபட்டது. மூக்கிலும் ரத்தம் வந்ததாக தெரிகிறது.
இதையடுத்து அவரே ஆடுகளத்தைவிட்டு வெளியேறுவதாக பயிற்சியாளரிடம் தெரிவித்தார். தூண் போன்ற நம்பிக்கை நட்சத்திரமான அலிரெஸா பெய்ரன்வான்ட் வெளியேறியது அந்நாட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது. அவருக்கு பதிலாக மாற்று கோல்கீப்பர் களமிறக்கப்பட்டார்.
Point to a #ThreeLions goalscorer. pic.twitter.com/6qpsFpO74t
— England (@England) November 21, 2022
இங்கிலாந்து அணி சார்பில் இளம் வீரர்களான ஜுட் பெல்லிங்ஹம் 35ஆவது நிமிடத்தில் முதல் கோலை போட்டார்.
அடுத்ததாக 43-ஆவது நிமிடத்தில் புகயோ சகா இரண்டாவது கோலையும், கூடுதல் நேரத்தில் ரஹீம் ஸ்டெர்லிங் ஒரு கோலையும் வலைக்குள் தள்ளினார். ஈரான் வீரருக்கு காயம் ஏற்பட்டதால் முதல் பாதி ஆட்டத்தில் சிறிது நேரம் காலதாமதம் ஆனது. அதன் காரணமாகவே கூடுதலாக 15 நிமிடங்கள் வழங்கப்பட்டன.
ஈரானுக்கு முதல் கோல்
அடுத்த பாதி ஆட்டம் பரபரப்புடன் தொடங்கியது. 62ஆவது நிமிடத்தில் புகாயோ சகா மீண்டும் ஒரு கோலை வலைக்குள் செலுத்தி அசத்தினார். பின்னர் சுதாரித்துக் கொண்டு ஒரு கோலாவது போட வேண்டும் என்று களத்தில் வேகம் காட்டிய ஈரான் அணிக்கு 65 ஆவது நிமிடத்தில் கோல் கிடைத்தது. அந்த கோலை முன்கள வீரர் மெஹ்தி டரெமி போட்டார்.
▶️ The second half is underway!#FIFAWorldCup | #Qatar2022
— FIFA World Cup (@FIFAWorldCup) November 21, 2022
பின்னர் மீண்டும் இங்கிலாந்து அணி வசம் கால்பந்து சென்றது. எவ்வளவோ போராடியும் உத்திகளை கையாண்டும் ஈரானால் கால்பந்தை தங்கள் பக்கத்துக்கு கொண்டு வரவே முடியவில்லை. ஆட்டம் இப்படி சென்று கொண்டிருக்கையில் 89ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் ஜேக் கிரியாலிஷ் அணியின் 6-ஆவது கோலை வலைக்குள் செலுத்தி அமர்க்கப்படுத்தினார். கூடுதல் நேரமாக 10 நிமிடங்கள் வழங்கப்பட்டது.
கடைசி நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி ஈரான் வீரர் மெஹ்தி டரெமி மீண்டும் ஒரு கோலை பதிவு செய்தார்.
இதன்மூலம் 6-2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து வெற்றியுடன் உலகக் கோப்பையைத் தொடங்கியுள்ளது.