FIFA World Cup 2022 Prize money: கோப்பையை வெல்லும் அணிக்கு இவ்வளவு கோடியா..? வாய்பிளக்க வைக்கும் பரிசுத்தொகை.. முழுவிவரம்!
FIFA World Cup 2022 Prize Money: 22வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு இந்திய மதிப்பின்படி ரூ.342 கோடி வழங்கப்பட இருக்கிறது.
22வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு இந்திய மதிப்பின்படி ரூ.342 கோடி வழங்கப்பட இருக்கிறது.
22வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரானது அரபு நாடான கத்தாரில் கடந்த மாதம் 20ம் தேதி மிக பிரமாண்டமாய் தொடங்கியது. லீக், 2வது சுற்று, கால் இறுதி ஆட்டம், அரையிறுதி ஆட்டம் முடிவில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணியும், முன்னாள் சாம்பியன் அர்ஜெண்டினா அணியும் இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றன.
உலகக்கோப்பை யாருக்கு என உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் இடையேயான எதிர்பார்ப்பு உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில்,பிரான்ஸ் அர்ஜென்டினா அணிகள் மோதும் இறுதிப்போட்டி இன்று இரவு இந்திய நேரப்படி 08.30 மணிக்கு லுசைல் ஐகானிக் மைதானத்தில் தொடங்க உள்ளது. இன்றைய போட்டியில் எந்த அணி வெற்றி பெற்றாலும், அது அந்த அணி வெல்லும் 3-வது உலகக் கோப்பையாக இருக்கும்.
கோப்பையை வெல்லும் அணிக்கு இவ்வளவு கோடியா..?
உலகக் கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.342 கோடியும், தோல்வி அடையும் அணிக்கு ரூ.244 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட உள்ளது. முன்னதாக, மூன்றாவது இடம் பிடித்த குரோஷியா அணிக்கு ரூ.223 கோடியும், நான்காம் இடம் பிடித்த மொராக்கொ அணிக்கு ரூ.206 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட உள்ளது.
பிரேசில், நெதர்லாந்து, போர்ச்சுகல், இங்கிலாந்து ஆகிய அணிகள் காலிறுதிக்கு தகுதிபெற்ற நிலையில், அந்த அணிகளுக்கு தலா 140 கோடி வழங்கப்படும். அதேபோல், 2வது சுற்றுக்கு தகுதிபெற்ற அமெரிக்கா, செனகல், ஆஸ்திரேலியா, போலந்து, ஸ்பெயின், ஜப்பான், சுவிட்சர்லாந்து, தென் கொரியா ஆகிய நாடுகளுக்கு தலா 107 கோடி வழங்கப்பட இருக்கிறது.
It all comes down to this 😤 #FIFAWorldCup #Qatar2022
— FIFA World Cup (@FIFAWorldCup) December 17, 2022
மெஸ்ஸியின் கடைசி உலகக் கோப்பை:
லியோனல் மெஸ்ஸி என்ற பெயர் உலக கால்பந்து ரசிகர்களால் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. இவர் எல்லா காலத்திலும் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவர். மெஸ்ஸிக்கு வயது 35 என்றாலும், இன்னும் 19 வயது இளைஞர்களை போல சிறப்பாக விளையாடி வருகிறார். இவரது வேகம் மற்றும் சுறுசுறுப்பான ஆட்டம் பார்ப்போரை எளிதில் கவரும். இந்த நிலையில், ஃபிஃபா உலகக் கோப்பை 2022 தொடர்தான் தனது கடைசி உலகக் கோப்பை தொடர் என்று லியோனல் மெஸ்ஸி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதையடுத்து, மெஸ்ஸியின் கடைசி உலகக் கோப்பை போட்டி என்பதால் தனது நீண்ட கால ஏக்கத்தை தணிக்கும் வகையில் அர்ஜெண்டினா அணிக்காக மெஸ்ஸி கோப்பையை வெல்லுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரான்ஸ் அணி:
நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணி இந்த முறையும் கோப்பையை வென்றால் 60 ஆண்டுகளில் அடுத்தடுத்து உலகக் கோப்பை வென்ற முதல் அணி என்ற பெருமையை பிரான்ஸ் பெறும். இதுவரை 5 கோல்கள் அடித்துள்ள கிலியன் எம்பாப்பே, 4 கோல் போட்டுள்ள ஒலிவியர் ஜிரூட், 3 கோல் அடிக்க துணை நின்றுள்ள கிரீஸ்மான் மற்றும் பெர்னாண்டஸ், கேப்டனும், கோல் கீப்பருமான ஹூகோ லோரிஸ் உள்ளிட்டோர் அந்த அணிக்கு வலு சேர்க்கிறார்கள்.