India Olympic History: நூற்றாண்டு கால வரலாறு - ஒலிம்பிக்கில் இந்தியா வென்ற 10 தங்கங்கள் - மொத்தம் எத்தனை பதக்கங்கள் தெரியுமா?
Indias Olympic History: இந்தியா ஒலிம்பிக் வரலாற்றில் இதுவரை 10 தங்கப் பதக்கங்களை மட்டுமே வென்றுள்ளது.
Indias Olympic History: இந்தியா ஒலிம்பிக் வரலாற்றில் இதுவரை, ஒட்டுமொத்தமாக் 35 பதக்கங்களை மட்டுமே வென்றுள்ளது.
ஒலிம்பிக்கில் இந்திய வரலாறு:
சுதந்த்ரத்திற்கு முன்பே 1900 ஆம் ஆண்டிலேயே பதக்கம் வென்று, ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு மிகப் பெரிய வரலாற்றை கொண்டுள்ளது. இந்தியா 25 நவீன ஒலிம்பிக் விளையாட்டுகளில் இருந்து மொத்தம் 35 பதக்கங்களை வென்றுள்ளது. நூற்றாண்டுக காலமாக ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று வந்தாலும், இதுவரை அதிக பதக்கங்களை வென்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா 57வது இடத்திலேயே உள்ளது. இது மிகவும் ஈர்க்கக்கூடிய சாதனையாக இல்லை என்றாலும், 140 கோடி மக்களை கொண்ட இந்தியாவிற்கு ஒவ்வொரு பதக்கமும் விலைமதிப்பற்றதாக உள்ளது. இந்தியா இதுவரை குளிர்கால ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றதே இல்லை என்பதும், 1896, 1904, 1908 மற்றும் 1912 கோடைகால ஒலிம்பிக்கில் பங்கேற்கவில்லை. என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியா இதுவரை வென்ற 35 பதக்கங்களும், கோடைக்கால ஒலிம்பிக்கில் மட்டுமே கிடைத்துள்ளது.
இந்தியா இதுவரை வென்ற முதல் பதக்கம்:
ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் இருந்த போதிலும், 1900ம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் இந்தியா அறிமுகமானது. அப்போதைய கல்கத்தாவில் பிறந்த நார்மன் பிரிட்சார்ட், இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே தடகள வீரராக களமிறங்கினார். - சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலின் படி, இது மற்ற வரலாற்று பதிவுகளில் சர்ச்சைக்குரியதாக இருந்தாலும், பிரிட்சார்ட் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்று இந்தியாவின் பதக்கப் பட்டியலை உயர்த்தினார்.
நார்மன் பிரிட்சார்ட் - வெள்ளி - ஆடவர் 200 மீ தடை ஓட்டம்
நார்மன் பிரிட்சார்ட் - வெள்ளி - ஆண்கள் 200 மீ ஓட்டம்
இந்தியா இதுவரை வென்ற 10 தங்கப் பதக்கங்கள்:
- ஆம்ஸ்டெர்டாம் ஒலிம்பிக் - 1928: நெதர்லாந்து அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில், தயான் சந்த் தலைமையிலான இந்திய ஆடவர் ஹாக்கி அணி தங்கப் பதக்கத்தை வென்றது. ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியா வென்ற முதல் தங்கப் பதக்கம் இதுவாகும்.
- லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் - 1932: இந்திய ஆடவர் ஹாக்கி அணி, அமெரிக்காவிற்கு எதிரான இறுதிப் போட்டியில் 24-1 என்ற கோல் கணக்கில் பிரமாண்ட வெற்றி பெற்றது.
- பெர்லின் ஒலிம்பிக்ஸ் - 1936: ஜெர்மனி அணியை வீழ்த்தி தயான் சந்த் தலைமையிலான இந்திய அணி, ஹாட்ரிக் தங்கப் பதக்கத்தை வென்று அசத்தியது
-
லண்டன் ஒலிம்பிக் - 1948: இந்தியா தனது முதல் ஒலிம்பிக் பதக்கத்தை ஒரு சுதந்திர நாடாக 1948ல் வென்றது. பல்பீர் சிங் சீனியர் தலைமையிலான ஆடவர் ஹாக்கி அணி தங்கப் பதக்கம் வென்று அசத்தியது
- ஹெல்சிங்கி ஒலிம்பிக் - 1952: பல்பீர் சிங் தலைமையிலான இந்திய அணி மீண்டும் தங்கப் பதக்கம் வென்று அசத்தியது
-
மெல்போர்ன் ஒலிம்பிக்ஸ் - 1956: பல்பீர் சிங் தலைமையிலான ஹாக்கி அணி மீண்டும் தங்கப் பதக்கம் வென்றது. இதன் மூலம் பங்கேற்ற 6 ஒலிம்பிக்கிலும் தொடர்ந்து தங்கம் வென்று வரலாறு படைத்தது. அமெரிக்காவின் கூடைப்பந்து அணியை தவிர ஒரு குழு நிகழ்வில் இந்த ஒலிம்பிக் சாதனையை வேறு யாரும் நிகழ்த்தியது இல்லை
- டோக்கியோ ஒலிம்பிக்ஸ் - 1964: இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றதோடு, 1960ம் ஆண்டு இறுதிப் போட்டியில் பெற்ற தோல்விக்கு இந்தியா பதிலடி தந்தது.
- மாஸ்கோ ஒலிம்பிக்ஸ் - 1980: இந்திய ஆடவர் ஹாக்கி அணி 1976 ஆம் ஆண்டு பெற்ற மோசமான தோல்வியில் இருந்து மீண்டு வந்து தங்கம் வென்றது. 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வெல்லும் வரை, இது இந்திய ஹாக்கியின் கடைசி பதக்கமாக இருந்தது.
-
பெய்ஜிங் ஒலிம்பிக் - 2008: இந்தியா முதன்முறையாக ஒரு ஒலிம்பிக்கில் மூன்று பதக்கங்களை வென்றது. 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில், அபினவ் பிந்த்ரா வென்ற தங்கப் பதக்கம் இந்தியாவின் முதல் தனிநபர் தங்கப் பதக்கமாகும்.
- டோக்கியோ ஒலிம்பிக் - 2020: ஈட்டி எறிதல் பிரிவில் நிரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றதோடு, தடகளத்தில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார். தன்நபர் போட்டிய்ல் தங்கம் வென்ற இரண்டாவது இந்தியர் என்ற அங்கீகாரமும் அவருக்கு கிடைத்தது.