Ditwah Cylone 3 Dead: டிட்வா புயல்; தமிழகத்தில் 3 பேர் உயிரிழப்பு; மூழ்கிய பயிர்களுக்கு நிவாரணம்; அமைச்சர் முக்கிய அப்டேட்
டிட்வா புயலால் தமிழ்நாட்டில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் ராமச்சந்திரன், பல மாவட்டங்களில் மூழ்கிய பயர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்தும் முக்கிய தகவல் அளித்துள்ளார்.

டிட்வா புயல் தமிழ்நாட்டை நெருங்கியுள்ள நிலையில், புயல் காரணமாக தமிழ்நாட்டில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், பல மாவட்டங்களில் மூழ்கிய ஆயிரக்கணக்கான ஹெக்டேர் நிலங்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்தும் தகவலை வெளியிட்டுள்ளார். அது குறித்து தற்போது பார்ப்போம்.
தமிழ்நாட்டில் இதுவரை 3 பேர் உயிரிழப்பு
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள டிட்வா புயல், சென்னைக்கு தென்கிழக்கே 220 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இப்புயலின் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், சென்னை எழிலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், புயல் காரணமாக எதிர்பார்த்த அளவு மழை இதுவரை பெய்யவில்லை என்று தெரிவித்தார்.
மேலும், தற்போது வரை பெய்துள்ள மழையால், தமிழ்நாட்டில் இதுவரை 3 பேர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார். அதன்படி, தூத்துக்குடி, தஞ்சாவூரில் சுவர் இடிந்து 2 பேர் உயிரிழந்துள்ளனர். மயிலாடுதுறையில் மின்சாரம் தாக்கி 20 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நிவாரண மையங்களில் 2,393 பேர் தங்கவைப்பு
டிட்வா புயலால் கடலூர், விழுப்புரம், சென்னையில் அதிக மழை இருக்கும் என எதிர்பார்த்ததாகவும், ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு மழை இதுவரை பெய்யவில்லை என்றும் அமைச்சர் ராமச்சந்திரன் கூறினார்.
மேலும், டிட்வா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 38 நிவாரண மையங்களில் 2,393 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
டிட்வா புயலால் பெய்த கனமழை மற்றும் சூறைக்காற்றால், தமிழ்நாட்டில் மொத்தம் 234 குடிசைகள் மற்றும் வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவித்த அமைச்சர், 149 கால்நடைகள் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் அளித்தார்.
மூழ்கிய விளைநிலங்கள் - நிவாரணம் குறித்து முதல்வர் முடிவு
மேலும், தமிழ்நாட்டில் பெய்த மழையால், 56 ஆயிரம் ஹெக்டேர் விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில், விவசாய நிலங்கள் மழைநீரில் மூழ்கியுள்ளதால், நிவாரணம் குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதனிடையே, இன்று மாலை தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரையில் இருந்து குறைந்தபட்சம் 70-30 கிலோ மீட்டர் தொலைவில் டிட்வா புயல் மையம் கொண்டிருக்கும் எனவும் கடலில் இருந்து மேலும் விலகி, சென்னைக்கு 70 கிலோ மீட்டர் தூரம் வரை மட்டும் டிட்வா புயல் நகரும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், அதற்குப் பின், டிட்வா புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக படிப்படியாக வலுவிழக்கும் என்றும், இரவுக்குள் புயல் வலுவிழக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.






















