DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
தேமுதிக சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை வரும் ஜனவரி மாதம் 9ம் தேதி அறிவிக்கும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ள நிலையில், ஒவ்வொரு கட்சியினரும் அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வரும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணியை வலுவாக அமைக்கும் கட்சி வாக்கு சதவீதத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது
கூட்டணி பேச்சுவார்த்தை:
இதனால், திமுக - அதிமுக - தவெக என ஆட்சியைப் பிடிக்க களமிறங்கியுள்ள கட்சிகள் கூட்டணியை வலுவாக அமைக்க தீவிர வியூகம் வகுத்து வருகின்றனர். தமிழ்நாட்டில் தனக்கென்று குறிப்பிட்ட வாக்கு வங்கி வைத்துள்ள கட்சி தேமுதிக. அவர்களை தங்கள் பக்கம் கூட்டணிக்குள் இழுக்க திமுக, அதிமுக மற்றும் தவெக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், இதுவரை தேமுதிக யாருடன் கூட்டணி என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
தேமுதிக யாருடன் கூட்டணி?
இந்த நிலையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அளித்துள்ள பேட்டியில், கூட்டணி அறிவிப்பு ஜனவரி 9ம் தேதி கடலூரில் நடக்கும் மாநாட்டில்தான் நாங்கள் ஒரு தெளிவான முடிவு எடுத்து அறிவிப்போம். தவெக பற்றி நிறைய சொல்லிவிட்டோம். எங்கள் கட்சி பற்றி கருத்து சொல்கிறேன். ஆளுங்கட்சியினர் நிறைவேற்றிவிட்டோம் என்றுதான் சொல்வார்கள். எதிர்க்கட்சியினர் நிறைவேற்றவில்லை என்றுதான் சொல்வார்கள். நான் மக்களை தினமும் நேரில் களத்தில் சந்திக்கிறோம்.
அப்படி கேட்கும்போது கொடுத்த வாக்குறுதியில் 50 சதவீதம் முடித்திருக்கிறார்கள். 50 சதவீதம் இன்னும் முடிக்கவில்லை. அதை மறுக்க முடியாது. அதனால்தான் திமுக ஆட்சிக்கு நான் 50க்கு 50 என்று கூறியுள்ளேன். இன்னும் 4, 5 மாதத்தில் இருக்கின்ற வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் தேமுதிக-வின் நிலைப்பாடு.
ஒரே ஒரு எம்ஜிஆர் - கேப்டன்:
ஒரே ஒரு எம்ஜிஆர்தான். எம்ஜிஆருக்கு மாற்று கிடையவே கிடையாது. அதேமாதிரி ஒரே ஒரு கேப்டன்தான். கேப்டனுக்கு மாற்று கிடையவே கிடையாது. அவங்க அவங்களுக்கு அவங்கதான். அவர்கள் பிறவியிலே தலைவர்கள். அவருக்கு மாற்று இவர் என்று கிடையாது. அப்படி யாரும் எடுத்துக்கவும் முடியாது.
எஸ்ஐஆர் அப்படி என்றால் முதலில் என்னவென்று மக்களுக்கு முதலில் தெளிவுபடுத்துங்கள். அவரவர் வாக்குகளை அவரவர் உறுதிப்படுத்துங்கள். அவரவர் குடும்ப வாக்குகளையும் உறுதிப்படுத்துங்கள். உறுதிப்படுத்தினாலும் உங்கள் வாக்குகளை யாரும் எடுக்க முடியாது.
வாக்கு திருட்டு:
இப்போது, கோவை, திருப்பூர் மற்றும் ஈரோட்டில் வட மாநிலத்தவர்கள் அதிகம் இங்கு வந்து வேலை செய்கின்றனர். அப்படி இருக்கும்போது அவர்கள் வாக்குளை இங்கே கொண்டு வந்து அவர்களை தமிழ்நாடு வாக்காளர்கள் என எப்படி எடுத்துக்கொள்ள முடியும்? இங்கே இருப்பவர்கள் வாக்குகளை எடுத்துவிட முடியாது? இதைத்தான் அவர்கள் வாக்கு திருட்டு என்று சொல்கிறார்கள்.
ஆளுங்கட்சியில் இருப்பவர்கள் அந்த மாதிரி எதுவுமே இல்லை. யாரெல்லாம் தேவையில்லாமல் ஊடுருவி இருக்கிறார்கள். நாட்டிற்கு தீவிரவாதம் என்று இந்த விஷயங்கள் எல்லாம் இருக்கிறது. அதை களையெடுக்கிறோம். அந்த மாதிரி ஓட்டுக்களை நாங்கள் களையெடுக்கிறோம்.
உண்மையில் தமிழ்நாட்டிற்கு யார் குடிமகன்கள் வாக்குகளை உறுதிப்படுத்துகிறோம் என்று அவர்கள் சொல்கிறார்கள். நாங்கள் என்ன சொல்கிறோம் என்றால் தமிழ்நாட்டிற்கு வருகிறீர்கள் என்றால் வாருங்கள். உங்கள் வாழ்வியலை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சம்பளம் வாங்கிக்கொள்ளுங்கள். ஆனால், ஓட்டுரிமை என்பது அவரவர் பிறந்த மாநிலத்தில்தான் இருக்க வேண்டும்.
எப்படி வாக்குரிமை?
வட மாநிலத்தில் பிறந்தவர்களுக்கு எப்படி தமிழ்நாட்டில் வாக்குரிமை தர முடியும்? நிச்சயம் அது தவறான முன்னுதாரணம். அப்படி ஒரு வாக்குத் திருட்டு நடந்தால் நிச்சயம் மக்கள் புரட்சி வெடிக்கும். அதில் மாற்றுக் கருத்து இல்லை. இங்கே லஞ்சம், ஊழல், மலைகள் திருட்டு எல்லாம் ஆகிவிட்டது.
கடைசியில் வாக்கு திருட்டு என்று வாக்குகளையும் பறித்தால் இந்த ஜனநாயக நாட்டில் தேர்தல் என்பதே அவசியமில்லாதது. அப்படி ஒரு நிலை வந்தால் தமிழ்நாட்டில் மக்கள் புரட்சி வெடிக்கும். அதற்கு வாய்ப்பு இருக்கிறதா? இல்லையா? என்பதை வெள்ளை அறிக்கை மூலம் மத்திய, மாநில அரசுகள் புரிய வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.




















