'கெட்ட பைய சார் இந்த காளி'- 7 ஆண்டுகளுக்கு பிறகு கோலியை "கோல்டன் டக்" செய்து சாதித்த ஆண்டர்சன் !
இந்திய கேப்டன் விராட் கோலியை டக் அவுட் செய்து அனில் கும்ப்ளே சாதனையை ஜேம்ஸ் ஆண்டர்சன் சமன் செய்தார்.
இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதல் நாளின் முடிவில் இந்திய அணி தன்னுடைய முதல் இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்திருந்தது. இங்கிலாந்து அணி தன்னுடைய முதல் இன்னிங்ஸில் 183 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியிருந்தது. இதனால் இந்திய அணி முதல் நாள் முடிவில் 162 ரன்கள் பின்தங்கி இருந்தது.
இந்நிலையில் இரண்டாவது நாளான இன்று இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் இருவரும் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். முதல் விக்கெட்டிற்கு இந்த ஜோடி 97 ரன்கள் சேர்த்திருந்த போது ரோகித் சர்மா 36 ரன்களில் ராபின்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து வந்த புஜாரா 4 ரன்களுக்கு ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்து மீண்டும் ஏமாற்றினார். அவருக்கு அடுத்து வந்த இந்திய கேப்டன் விராட் கோலி தன்னுடைய முதல் பந்திலேயே விக்கெட்டை ஜேம்ஸ் ஆண்டர்சன் இடம் பறி கொடுத்தார். அத்துடன் தன்னுடைய கோல்டன் டக்கையும் அவர் பதிவு செய்தார்.
கோலியின் விக்கெட்டை எடுத்ததன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தன்னுடைய 619ஆவது விக்கெட்டை ஜேம்ஸ் ஆண்டர்சன் எடுத்தார். அத்துடன் இந்தியாவின் அனில் கும்ப்ளேவின் 619 டெஸ்ட் விக்கெட்கள் என்ற சாதனையை சமன் செய்து அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் 3ஆவது இடத்திற்கு முன்னேறினார். அதைவிட மேலும் ஒரு சிறப்பான விஷயம் ஒன்று உள்ளது.
WOWWWW! 🔥@jimmy9 gets Kohli first ball and Trent Bridge is absolutely rocking!
— England Cricket (@englandcricket) August 5, 2021
Scorecard/Clips: https://t.co/5eQO5BWXUp#ENGvIND pic.twitter.com/g06S0e4GN7
கோலி vs ஆண்டர்சன்:
இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான பேட்ஸ்மேன் விராட் கோலி. அதேபோல் இங்கிலாந்து அணியின் மிகவும் அனுபவம் மிக்க வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன். ஆகவே இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் போது இவர்கள் இருவருக்கும் இடையே ஒரு தனிப்போட்டி நடக்கும். குறிப்பாக டெஸ்ட் போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெறும் போது ஆண்டர்சனின் ஸ்விங் பந்துவீச்சை எதிர்கொள்ள விராட் கோலிக்கு எப்போதும் பெரிய சவாலாக இருக்கும்.
ஆண்டுகள் | ஆண்டர்சனுக்கு எதிராக அடித்த ரன்கள் | ஆண்டர்சன் இடம் வீழ்ந்த கோலி |
2011-2014 | 42 ரன்கள் | 5 முறை |
2015-2020 | 194 ரன்கள் | 0 |
2021* | தற்போது ரன் எதுவும் அடிக்கவில்லை | 1 முறை |
அந்தவகையில் 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து-இந்தியா டெஸ்ட் தொடரில் விராட் கோலி மிகவும் மோசமான ஃபார்மில் இருந்தார். அப்போது 10 இன்னிங்ஸில் அவர் வெறும் 134 ரன்கள் மட்டுமே அடித்தார். அதில் 4 முறை கோலியின் விக்கெட்டை ஜேம்ஸ் ஆண்டர்சன் எடுப்பார். இதைத் தொடர்ந்து 2018ஆம் ஆண்டு இந்திய அணி இங்கிலாந்து சென்றது. அப்போதும் கோலி-ஆண்டர்சன் இடையே பெரிய போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த முறை ஆண்டர்சன் கோலியின் விக்கெட்டை ஒரு முறை கூட எடுக்கவில்லை.
இந்தச் சூழலில் தற்போது 2021ஆம் ஆண்டு தொடரின் முதல் போட்டியிலேயே விராட் கோலியின் விக்கெட்டை ஆண்டர்சன் எடுத்துள்ளார். அதாவது சரியாக 7 ஆண்டுகளுக்கு பிறகு கோலியின் விக்கெட்டை ஆண்டர்சன் எடுத்துள்ளார். அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் விராட் கோலியின் விக்கெட்டை ஆண்டர்சன் 9ஆவது முறையாக வீழ்த்தியுள்ளார்.
மேலும் படிக்க: விவேகம்... விஸ்வாசம்... வலிமை... இங்கிலாந்தை பந்தாடிய இந்தியாவின் டாப் 3 மொமெண்ட்ஸ்!