TN Rain Alert: டிச.15 புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி; நாளை 16 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு; வானிலை முக்கிய அலர்ட்!
தமிழ்நாட்டில் 72 இடங்களில் கனமழை பதிவாகி உள்ளது. வடகிழக்குப் பருவ மழை இயல்பை விட 16 சதவீதம் அதிகம் பெய்துள்ளது.
வட கிழக்குப் பருவ மழை காரணமாக சென்னை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் கன அழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் கூறும்போது, ’’அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியின் வலு குறையும். தென் தமிழக மாவட்டங்களில் நாளை கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் 72 இடங்களில் கனமழை பதிவாகி உள்ளது. வடகிழக்குப் பருவ மழை இயல்பை விட 16 சதவீதம் அதிகம் பெய்துள்ளது.
மழை வாய்ப்பு எங்கெங்கே?
தமிழ்நாட்டில் இன்று (டிச.12) தென்காசி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யக் கூடும். அதேபோல திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், மதுரை, தேனி, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழை பெய்யலாம். மேலும் ராணிபேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், திண்டுக்கல், திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு
அந்தமான் கடற்கரைக்கு அருகே வரும் 15ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. அதன் நகர்வைப் பொறுத்து தமிழ்நாட்டில் மழை இருக்குமா என்று தெரிய வரும்’’ என்று தெரிவித்துள்ளார்.
பனி மூட்டம் ஏன்?
மேலும் அவர் கூறும்போது, ‘’காற்றின் அதிக ஈரப்பதம் காரணமாக, ஆங்காங்கே பனி மூட்டம் காணப்படுவதாகவும் மழை பெய்த பிறகு அது மறைந்துவிடும்’’ என்றும் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.