Raina's Favourite Youngsters | என்னை ஈர்த்த வீரர்கள் இவங்கதான் - ரெய்னா பளிச்..!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தன்னை ஈர்த்த மூன்று இளம் இந்திய வீரர்கள் யார் என தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா. 34 வயதான சுரேஷ் ரெய்னா கடந்தாண்டு ஆகஸ்டு 15-ந் தேதி அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இருப்பினும் ஐ.பி.எல். தொடரில் மட்டும் தொடர்ந்து ஆடப்போவதாக கூறினார்.
இந்த நிலையில், தனியார் விளையாட்டு செய்தி நிறுவனம் ஒன்றிற்கு சுரேஷ் ரெய்னா பேட்டி அளித்துள்ளார். அதில் அவரிடம் தற்போதுள்ள இந்திய அணியில் தங்களை ஈர்த்த வீரர்கள் யார் என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சுரேஷ் ரெய்னா, கர்நாடகவைச் சேர்ந்த தேவ்தத் படிக்கல். மகாராஷ்ட்ராவைச் சேர்ந்த ருதுராஜ் கெய்க்வாட். அக்ஷர் படேல். ருதுராஜ் கெய்க்வாட் சிறந்த ஆட்டக்காரர். அதேபோல, அக்ஷர் பட்டேலும் உண்மையில் கடினமாக உழைக்கிறார். ரவீந்திர ஜடேஜா இல்லாதபோது சிறப்பான முறையில் பந்துவீசுகிறார் என்றார்.
இந்த பட்டியலில் இளம் வீரர் ரிஷப் பண்ட் இடம்பெறாதது குறித்து கேட்கப்பட்டதற்கு, கடந்தாண்டு ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் விளையாடிய பிறகு முற்றிலும் மாறுபட்ட வீரராக ரிஷப் பண்ட் மாறிவிட்டார். அவர் தற்போது சீனியர் வீரர் அந்தஸ்திற்கு வந்துவிட்டார். அவர் வளர்ந்துவிட்டார். அவர் தற்போது சிக்ஸர்கள் மட்டும் அடிப்பதில்லை. பவுண்டரிகளும் அடிக்கிறார் என்றார் சுரேஷ் ரெய்னா.
மேலும், இந்த பேட்டியில் முகமது சிராஜின் திறமையையும் சுரேஷ் ரெய்னா பாராட்டி பேசினார். மேலும், இந்திய அணியின் வளர்ச்சிக்காக பாடுபடும் ராகுல் டிராவிட்டிற்கும் தனது பாராட்டுக்களை தெரிவித்தார். இந்திய ஏ கிரிக்கெட் அணி மற்றும் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் தேசிய கிரிக்கெட் அகாடமி மூலம் பிரித்வி ஷா, சுப்மன்கில், மயங்க் அகர்வால் போன்ற இளம் கிரிக்கெட் வீரர்களின் திறமையை வெளிக்கொண்டு வந்துள்ளார். தற்போது இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஷிகர் தவானுக்கும், அந்த அணியின் பயிற்சியாளரான ராகுல் டிராவிட்டிற்கும் சுரேஷ் ரெய்னா வாழ்த்துகளை கூறினார்.
சுரேஷ் ரெய்னா இதுவரை 18 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 768 ரன்களும், 226 ஒருநாள் போட்டிகளில் ஆடி 5 ஆயிரத்து 615 ரன்களும், 78 டி20 போட்டிகளில் ஆடி 1604 ரன்களும், 200 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 5 ஆயிரத்து 491 ரன்களும் குவித்துள்ளார். பகுதிநேரப் பந்துவீச்சாளரான சுரேஷ் ரெய்னா டெஸ்ட் போட்டிகளில் 13 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 36 விக்கெட்டுகளையும், டி20 போட்டிகளில் 13 விக்கெட்டுகளையும், ஐ.பி.எல். போட்டிகளில் 25 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஐ.பி.எல். தொடரில் தோனி விளையாடாவிட்டால் தானும் விளையாட மாட்டேன் என்று சுரேஷ் ரெய்னா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.