எதிர்பாராததை எதிர்பாருங்கள்... இந்திய டி20 அணியில் ஆச்சரியங்களும் அதிருப்திகளும்!
”இந்திய அணிக்காக விளையாடத் தொடங்கிய ஆரம்பப் போட்டிகளிலேயே சிறப்பாக செயல்பட்ட நடராஜன் அடுத்தடுத்த தொடர்களில் ஓரம்கட்டப்பட்டு இருப்பது புரியாத புதிராகவே உள்ளது.”

எஞ்சி இருக்கும் ஐ.பி.எல். போட்டிகளில் நிறைவடைந்தவுடன் அக்டோபர் மாதம் ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாடுகளில் நடைபெற உள்ளன. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, மேற்கு இந்திய தீவுகள், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, பப்புவா நியூ கினியா, ஓமன், நெதர்லாந்து, நமீபியா, அயர்லாந்து ஆகிய 16 நாடுகளில் இந்த தொடரில் விளையாடுகின்றன.
அக்டோபர் 17-ம் தேதி தொடங்கும் உலகக்கோப்பை டி20 தொடர் நவம்பர் 14-ம் தேதி நிறைவடைகிறது. இதற்கான அட்டவணை, பிரிவுகள் அனைத்து வெளியிடப்பட்ட நிலையில், இந்திய அணியில் யாருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்ற எதிர்பாப்பு ரசிகர்களிடையே எழுந்தது.
இந்த நிலையில், தான் பிசிசிஐ டி20 தொடரில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் பட்டியலை வெளியிட்டு உள்ளது. கேப்டன் விராட் கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணியில், துணை கேப்டன் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், விக்கெட் கீப்பர்கள் ரிஷப் பண்ட், இஷான் கிஷன், ஆல்ரவுண்டர்கள் வரிசையில் ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்ஷர் பட்டேல், சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின், வருண் சக்கரவர்த்தி, ராகுல் சஹார் வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி, பும்ரா, புவனேஷ்வர் குமார் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.
இதில் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர், மணிஷ் பாண்டே, சஞ்சு சாம்சன், முகமது சிராஜ், சாஹல், குல்தீப் யாதவ், குர்னல் பாண்டியா, தமிழக வீரர்கள் நடராஜன், வாஷிங்டன் சுந்தர், ஆகியோரது பெயர்கள் இடம்பெறவில்லை. இந்திய அணிக்காக விளையாடத் தொடங்கிய ஆரம்பப் போட்டிகளிலேயே சிறப்பாக செயல்பட்ட நடராஜன் அடுத்தடுத்த தொடர்களில் ஓரம்கட்டப்பட்டு இருப்பது புரியாத புதிராகவே உள்ளது.

இந்திய வீரர்கள் பட்டியலை வெளியிட்ட பிசிசிஐ, யாரும் எதிர்பார்க்காத வகையில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்து உள்ளது. அதுதான் தோனி ஆலோசகராக செயல்படுவார் என்ற அறிவிப்பு. உலகக்கோப்பை தோல்விக்கு பிறகு இந்திய அணியில் இருந்து ஓரம்கட்டப்பட்ட முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, பல நாட்கள் கழித்து தனது ஓய்வை அறிவித்தார். இந்த சூழல் அவரை ஆலோசகராக பிசிசிஐ நியமித்து உள்ளது. 2007-ல் நடைபெற்ற முதல் உலகக்கோப்பை டி20 தொடரில் இந்தியாவுக்கு வெற்றிக்கோப்பையை வென்றுகொடுத்தவர் தோனி.
அதுமட்டுமின்றி ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு 3 முறை கோப்பைகளை வென்றுள்ளார். 2 முறை மட்டுமே சென்னை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறாமல் வெளியேறியது. அதுபோல் சாம்பியன்ஸ் லீக் போட்டியிலும் சென்னை அணியை சாம்பியனாக்கியவர் தோனி. இப்போது அவரது ஆலோசனையின் கீழ் இந்தியாவும் டி20 உலகக்கோப்பை மீண்டும் கைப்பற்றும் என்ற நம்பிக்கை எழுந்து உள்ளது.





















