பவுலிங்கை வேணா க்ளோன் பண்ணலாம்.. அஷ்வின் பற்றி ராஜஸ்தான் ராயல்ஸ் பதிவு
ஸ்மித் முதல் பந்தை இறங்கி வந்து ஸ்ட்ரோக் வைத்து வித்தியாசமான அணுகுமுறையை காட்ட, அடுத்த பந்தே அஸ்வின் தனது வித்தியாசத்தை ஸ்மித்திற்கு காட்ட விக்கெட் கீப்பர் கேஎஸ் பாரத் இடம் கேட்ச் ஆகி அவுட் ஆனார்.
டெல்லியில் நடந்த இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் ஆபத்தான ஜோடிகளான மார்னஸ் லாபுசாக்னே மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரை மூன்றே பந்துகளில் வெளியேற்றி இந்திய அணிக்கு தேவையான பிரேக்கை கொடுத்து ஆஸ்திரேலிய நம்பிக்கையை குலைத்தார் இந்தியாவின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின்.
ஆட்டத்தின் 23-வது ஓவரில் நம்பர் 1 மற்றும் நம்பர் 2 டெஸ்ட் பேட்ஸ்மேன்களை வெளியேற்றியது உலகில் உள்ள அத்தனை வந்துவீச்சாளர்களுக்கும் கனவாகவே இருக்கும், ஆனால் செய்து மாஸ் காட்டினார் அஸ்வின். லாபுஷாக்னே 24 பந்துகளில் 18 ரன்கள் எடுத்த நிலையில் உஸ்மான் கவாஜாவுடன் இணைந்து வலுவான பார்ட்னர்ஷிப்பைத் உருவாக்கிக் கொண்டிருந்தார். அப்போதுதான் அவரது விக்கெட்டை வீழ்த்தினார் அஸ்வின். அடுத்ததாக களமிறங்கிய ஸ்மித் முதல் பந்தை இறங்கி வந்து ஸ்ட்ரோக் வைத்து வித்தியாசமான அணுகுமுறையை காட்ட, அடுத்த பந்தே அஸ்வின் தனது வித்தியாசத்தை ஸ்மித்திற்கு காட்ட விக்கெட் கீப்பர் கேஎஸ் பாரத் இடம் கேட்ச் ஆகி அவுட் ஆனார்.
அஸ்வின் அபாரம்
அடுத்தடுத்து இரண்டு விக்கெட்களை இழந்த ஆஸ்திரேலிய அணி முதல் செஷனை 91/3 என்று முடித்தது. அஸ்வின் முக்கியமான இரண்டு விக்கெட்டை வீழ்த்தியதைத் தொடர்ந்து, ரசிகர்களும் முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் அவரை புகழ்ந்து தள்ளினர். அதுமட்டுமின்றி முதல்தர கிரிக்கெட்டில் அஸ்வினின் 700வது விக்கெட்டாக லாபுசக்னே விக்கெட்டை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அஸ்வினின் இந்தியன் பிரீமியர் லீக் உரிமையாளரான ராஜஸ்தான் ராயல்ஸ் தங்கள் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் ஆஸ்திரேலியாவை கலாய்த்தனர்.
அஸ்வின் ஸ்டைலில் பந்துவீசுபவர்
முன்னதாக ஆஸ்திரேலிய அணி அஸ்வினின் பந்து வீச்சை எதிர்கொள்வதற்காக வித்யாசமான பயிற்சிகளை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் ஒன்று அஸ்வினி போன்றே பந்து வீசும் ஸ்டைல் உடைய ஒருவரை வைத்து பயிற்சி செய்வது. பரோடாவின் மகேஷ் பித்தியாவின் பந்துவீச்சு ஸ்டைல் அஷ்வினைப் போன்றே இருக்கும். பித்தியாவும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக டெல்லிக்குச் சென்று ஆஸி பேட்டர்களுக்காக வலைகளில் தொடர்ந்து பந்து வீசினார். தொடர் தொடங்குவதற்கு முன்பும் அவரை கூடவே வைத்துக்கொண்டு சுற்றியது ஆஸ்திரேலிய குழு.
"𝘠𝘰𝘶 𝘤𝘢𝘯 𝘤𝘭𝘰𝘯𝘦 𝘮𝘺 𝘢𝘤𝘵𝘪𝘰𝘯, 𝘯𝘰𝘵 𝘮𝘺 𝘣𝘳𝘢𝘪𝘯" pic.twitter.com/ZR6FCr8OJD
— Rajasthan Royals (@rajasthanroyals) February 17, 2023
மூளையை க்ளோன் செய்ய முடியாது
அதனை குறிப்பிட்டு எழுதிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ட்விட்டர் பக்கம், "நீங்கள் என் ஆக்ஷனை வேண்டுமானால் குளோன் செய்ய முடியும், என் மூளை அல்ல." என்று எழுதி கடந்த பார்டர் கவாஸ்கர் டிராஃபியில் ஸ்டார்கிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நெற்றியில் கைவைத்து சைகை செய்யும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தனர். நாக்பூரில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின் முதல் டெஸ்டில் அஸ்வின் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார். டெல்லியில் நேற்று நடந்த இப்போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்தது. டேவிட் வார்னர் மற்றும் உஸ்மான் கவாஜா ஜோடி 50 ரன்களை தாண்டி ஒரு பார்ட்னர்ஷிப்பை உருவாக்கிக்கொண்டிருந்த நேரத்துல வார்னர் 15 ரன்களில் எட்ஜ் ஆகி ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு அஸ்வின் இரண்டு விக்கெட்டுகள் எடுக்க ஆட்டம் இந்திய அணி கைகளுக்கு வந்தது. இன்றைய நாள் போட்டியில் முதல் செஷனில் இந்திய அணி டாப் ஆர்டர் சரிந்து 88 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்தது.