WTC Points Table: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு ஆபத்தா..? இதுதான் காரணமா...?
ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 3வது டெஸ்ட் போட்டி டிரா ஆன நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான தரவரிசையில் இந்தியாவின் நிலை குறித்து காணலாம்.
ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 3வது டெஸ்ட் போட்டி டிரா ஆன நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான தரவரிசையில் இந்தியாவின் நிலை குறித்து காணலாம்.
ஆஸ்தி-தெ.ஆ. டெஸ்ட் டிரா:
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இதில் கடந்த டிசம்பர் 17 ஆம் தேதி தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டி இரண்டு நாட்களிலேயே முடிவடைந்தது. இதில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனையடுத்து டிசம்பர் 26 ஆம் தேதி தொடங்கிய 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.
இதனைத் தொடர்ந்து கடந்த ஜனவரி 2 ஆம் தேதி தொடங்கிய இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று முதலில் பேட் செய்தது. உஸ்மான் கவாஜா (195 ரன்கள்) மற்றும் ஸ்டீவ் ஸ்மித் (104 ரன்கள்) ஆகியோரின் அதிரடி சதத்தால் முதல் இன்னிங்ஸில் அந்த அணி 4 விக்கெட் இழப்புக்கு 475 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. தொடர்ந்து பேட் செய்த தென்னாப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 255 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகி ஃபாலோ ஆன் ஆனது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்:
இதனால் தென்னாப்பிரிக்கா அணியே இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்தது. 220 ரன்கள் பின்தங்கிய நிலையில் விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி தோல்வியை தவிர்க்க போராடியது. 41.5 ஓவர்கள் முடிவில் அந்த அணி 2 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்திருந்த போது டிரா ஆனதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து 3 போட்டிகள் கொண்ட தொடரை ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
#ICCRankings #Test @ICC pic.twitter.com/YISQ0iErqU
— RJ Sasi (@RealRjSasi) January 7, 2023
இந்த வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான தரவரிசையில் ஆஸி., அணி 78.57 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது. அதேசமயம் 2வது இடம் வகிக்கும் இந்திய அணி (58.93 புள்ளிகள்) வரும் பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணியுடன் பங்கேற்க உள்ளது. இந்த தொடரில் 4-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றால் ஆஸ்திரேலியாவின் புள்ளி மதிப்பு 59.6 ஆக குறையும். இந்தியாவின் புள்ளி மதிப்பு 68.05 ஆக உயரும்.
இறுதிப்போட்டிக்கு செல்லுமா இந்தியா..?
அதேசமயம் இலங்கை அணி 53.33 புள்ளி மதிப்புகளுடன் 3வது இடத்தில் உள்ளது. இந்த அணி நியூசிலாந்திற்கு எதிராக விளையாடும் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வென்றால் 61.11 புள்ளி மதிப்பைப் பெறும்.
4வது இடத்தில் இருக்கும் தென்னாப்பிரிக்கா 48.72 புள்ளி மதிப்புடன் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இரண்டு போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் 2 போட்டியிலும் வெற்றி பெற்றால் தென்னாப்பிரிக்கா புள்ளி மதிப்பு 55.5 ஆக அதிகரிக்கும். இந்த அணிகளுக்கு சமமாக திகழும்.
ஒருவேளை இந்திய அணி 4 போட்டிகளிலும் ஆஸ்திரேலியாவிடம் தோற்றால் அந்த அணியின் புள்ளி மதிப்பு 45.4 ஆக குறையும். ஒரு போட்டியில் மட்டும் வென்றால் 51.39 ஆகவும், இரண்டில் வெற்றி பெற்றால் 56.9 ஆகவும், மூன்று போட்டிகளில் வென்றால் 62.5 ஆகவும் புள்ளிகள் மதிப்பு இருக்கும். ஆனால் குறைந்தது 2 போட்டிகளில் வென்றால் மட்டுமே இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான வாய்ப்பு பிரகாசமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.