WTC 2023 Final: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல்; நாளை இங்கிலாந்து பறக்கும் கிங் கோலி..! கூட யாரெல்லாம் போறாங்க..?
WTC 2023 Final: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ள நாளை இந்திய அணியின் சில வீரர்கள் இங்கிலாந்து செல்லவுள்ளனர்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் லண்டன் மாநகரில் உள்ள ஓவல் மைதானத்தில் வரும் ஜூன் மாதம் 7ம் தேதி தொடங்கி 11ம் தேதிவரை நடைபெறவுள்ளது. இந்த இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா மோதவுள்ளது. கடந்த முறை இறுதிப் போட்டி வரைக்கும் சென்று பதக்கத்தினை நியூசிலாந்து அணியிடம் இழந்த இந்திய அணி இம்முறை கட்டாயம் கோப்பையை வெல்லும் என்ற முனைப்புடன் உள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி:
இந்நிலையில், இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடைபெற்று வருவதால் இந்திய அணி இன்னும் இங்கிலாந்துக்குச் செல்லாமல் உள்ளது. இந்நிலையில், ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் நேற்று முடிவடைந்தது. இதில் சென்னை, குஜராத், லக்னோ மற்றும் மும்பை அணிகள் ப்ளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இதனால் மற்ற அணிகளில் உள்ள இந்திய அணியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான அணியில் உள்ள வீரர்கள் நாளை அதாவது மே மாதம் 24ஆம் தேதி இங்கிலாந்துக்குச் சென்று பயிற்சியில் ஈடுபடவுள்ளது. மற்ற வீரர்கள் மே மாதம் 29ஆம் தேதி செல்லவுள்ளனர்.
இந்நிலையில் முதல் கட்டமாக விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது சிராஜ், அக்ஷர் பட்டேல், ஷர்துல் தாக்கூர், யுமேஷ் யாதவ் மற்றும் உனத் கட் நாளை இங்கிலாந்து செல்லவுள்ளனர். இவர்களுடன் பயிற்சியாளார் ராகுல் டிராவிட்டும் செல்லவுள்ளார். அதேபோல் அனிகட் சௌத்ரி, ஆகாஷ் தீப் மற்றும் யர்ர ப்ரித்திவி ராஜ் ஆகியோர் இந்திய அணியின் வலைபயிற்சி பந்து வீச்சாளர்களாக செயல்படவுள்ளனர்.
ஐசிசி உல டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு காயம் அடைந்த கே.எல்.ராகுலுக்கு பதிலாக பிசிசிஐ இஷான் கிஷன் பெயரை அறிவித்தது. சிறப்பான பார்மில் ஐபிஎல் தொடரில் விளையாடி கொண்டிருக்கும் சஹாவுக்கு வாய்ப்பு கிடைக்காததது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
இந்தியாவிற்காக விருத்திமான் சஹா கடந்த 2021 ம் ஆண்டு கடைசியாக 2021 டிசம்பரில் டெஸ்ட் போட்டியில் விளையாடினார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு அஜிங்க்யா ரஹானேவைப் போலவே, சஹாவும் டெஸ்ட் அணிக்கு திரும்ப வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சஹாவுக்கு வாய்ப்பு வழங்கப்படாததால் ட்விட்டர்வாசிகள் ட்விட்டர் பக்கத்தில் தங்களது அதிருப்திகளை வெளிபடுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து பேசிய தேர்வுக் குழுவின் தலைவர் சிவசுந்தர் தாஸ், “ கே.எஸ்.பாரத்திற்கு பிறகு இந்திய அணிக்கு முன்பில் இருந்தே இரண்டாவது விக்கெட் கீப்பர் ஆப்ஷனாக இஷான் கிஷன் இருந்தார். அதன் காரணமாகவே இந்திய அணியின் இடம்பெற்றார்” என தெரிவித்தார்.
இஷான் கிஷன்:
இஷான் கிஷன் இந்திய அணிக்காக இதுவரை 14 ஒருநாள் மற்றும் 27 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக இன்னும் அறிமுகமாகவில்லை. இஷான் கிஷன் முதல் தர கிரிக்கெட்டில் இதுவரை 48 போட்டிகளில் விளையாடி 38.76 சராசரியுடன் 2985 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஆறு சதங்களும் அடங்கும். இருப்பினும், சமீபத்திய ரஞ்சி டிராபியில், இஷான் கிஷன் வெறும் 180 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலக டெஸ்ட்சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில் , சேதேஷ்வர் புஜாரா , விராட் கோலி , அஜிங்க்யா ரஹானே , கே.எஸ்.பாரத் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா , அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், முகமது. ஷமி, முகமது. சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனட்கட், இஷான் கிஷன்(விக்கெட் கீப்பர்).
காத்திருப்பு வீரர்கள்: சூர்யகுமார் யாதவ், ருதுராஜ் கெய்க்வாட், முகேஷ் குமார்