WTC Points Table: விறுவிறு முன்னேற்றம்... உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் கெத்து காட்டும் இந்தியா..!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான தரவரிசையில் இந்தியாவின் நிலை குறித்து காணலாம்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான தரவரிசையில் இந்தியாவின் நிலை குறித்து காணலாம்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதி 2வது டெஸ்ட் போட்டி தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய அந்த அணி 263 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து பேட் செய்த இந்திய அணி 262 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடர்ந்து ஒரு ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸில் 113 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனையடுத்து 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 26.4 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 118 ரன்களை எடுத்து இந்திய அணி வெற்றி பெற்றது.
புஜாரா 31 ரன்களுடனும், பரத் 23 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதன் மூலம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. மேலும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-0 என முன்னிலை பெற்றது. இந்த வெற்றியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான தரவரிசையில் இந்திய அணி விறுவிறு என முன்னேற்றம் அடைந்துள்ளது.
இதனால் இந்தியாவின் புள்ளி மதிப்பு 61.66 இல் இருந்து 64.06 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் முதலிடத்தில் இருந்தாலும் ஆஸ்திரேலியாவின் புள்ளி மதிப்பு 70.83 இல் இருந்து 66.67 ஆக குறைந்துள்ளது. இன்னும் ஒரு வெற்றி பெற்று தொடரை கைப்பற்றினாலே இந்திய அணி முதல் இடம் பிடிக்கும்.
2வது இடம் யாருக்கு?
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான தரவரிசையில் இலங்கை அணி 53.33 புள்ளி மதிப்புகளுடன் 3வது இடத்தில் உள்ளது. இந்த அணி நியூசிலாந்திற்கு எதிராக மார்ச் மாதம் விளையாடும் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வென்றால் 61.11 புள்ளி மதிப்பைப் பெறும்.
4வது இடத்தில் இருக்கும் தென்னாப்பிரிக்கா 48.72 புள்ளி மதிப்புடன் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இரண்டு போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் 2 போட்டியிலும் வெற்றி பெற்றால் தென்னாப்பிரிக்கா புள்ளி மதிப்பு 55.5 ஆக அதிகரிக்கும்.
இந்தியா ஆஸ்திரேலியா அணியை 3-0 அல்லது 4-0 என்ற கணக்கில் வீழ்த்தினால் தரவரிசை பட்டியலில் இந்தியா முதலிடமும், ஆஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்கும் இடையே இரண்டாவது இடத்துக்கான போட்டியும் இருக்கும். எனவே இந்த மோதலில் ஜெயிக்கப்போவது யார் என்ற கேள்வி கிரிக்கெட் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்தியாவுடனான அடுத்த 2 டெஸ்டையும் ஆஸ்திரேலியா டிரா செய்தால் அந்த அணியின் புள்ளி மதிப்பு 63.15 ஆக இருக்கும் எனவும், 2 போட்டிகளிலும் தோற்றால் 59.6 ஆக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.