WC Qualifier 2023: முன்னாள் சாம்பியனுக்கு இப்படி ஒரு சூழலா..? பரிதாப நிலையில் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ்..!
முன்னாள் சாம்பியன்களா இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் உலக கோப்பை தகுதிச்சுற்றில் ஆடுவது அந்த நாட்டு ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய திருவிழாவாக இருப்பது 50 ஓவர் உலககோப்பை தொடரே ஆகும். புதிய சாம்பியனை தீர்மானிக்கும் நடப்பு உலககோப்பை தொடர் இந்தியாவில் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது.
உலககோப்பை தகுதிச்சுற்று:
நடப்பு உலககோப்பை தொடரில் 10 அணிகள் பங்கேற்க உள்ளது. அதில் 8 அணிகள் ஏற்கனவே தகுதி பெற்றுள்ள நிலையில், கடைசி 2 இடத்தை பிடிக்கப்போவது யார்? என்பதையும், உலககோப்பையில் ஆடப்போவது யார்? என்பதையும் தீர்மானிக்கும் உலககோப்பை தகுதிச்சுற்று இனறு தொடங்க உள்ளது.
இன்று நடைபெறும் உலககோப்பை தகுதிச்சுற்றின் முதல் போட்டியில் ஜிம்பாப்வே – நேபாள அணிகள் மோதுகின்றன. இந்த தகுதிச்சுற்று போட்டிக்கான தொடரில் அமெரிக்கா, நேபாளம், நெதர்லாந்து, ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், அயர்லாந்து மற்றும் ஓமன் ஆகிய அணிகளுடன் முன்னாள் சாம்பியன்களாக வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கை அணிகளும் களமிறங்குகின்றன.
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கை ஆகிய அணிகள் ஒரு காலத்தில் மற்ற அணிகளுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்த அணிகள். ஆனால், அவர்கள் கடந்த சில ஆண்டுகளாக ஆடும் விதம் அவர்கள் போராடியே எந்த ஒரு தொடருக்கும் முன்னேறும் சூழலில் உள்ளது.
வெஸ்ட் இண்டீஸ்:
இன்று வேகப்பந்து வீச்சு என்றால் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா என்று கிரிக்கெட் ரசிகர்கள் சொல்வார்கள். ஆனால், 1970, 80 காலகட்டங்களில் வேகப்பந்துவீச்சு மட்டுமின்றி ஒரு அணியை கண்டு அனைத்து அணிகளும் பயப்படுகிறார்கள் என்றால், அது வெஸ்ட் இண்டீஸ் அணி மட்டுமே ஆகும்.
ராபர்ட்ஸ், ஹோல்டிங், கார்னர், கிராஃப்ட் என்று பெரும் நட்சத்திர பவுலிங் பட்டாளத்துடன் கிரினீட்ஜ், ஹெய்ன்ஸ், ஜாம்பவான் ரிச்சர்ட்ஸ், கிளைவ் லாயிட்ஸ், காலீஸ் கிங் என்று நட்சத்திர பேட்டிங் பட்டாளத்துடனும் பந்தாவாக வலம் வந்த அணி. 1975ம் ஆண்டு முதன் முதலில் அறிமுகமான 50 ஓவர் உலககோப்பையையும், 1979ம் ஆண்டு நடந்த 2வது உலககோப்பையையும் மிகவும் அலட்சியமாக வென்ற அணி. இவர்களது ஆதிக்கத்திற்கு 1983ம் ஆண்டு இறுதிப்போட்டியில் இந்தியாதான் முற்றுப்புள்ளி வைத்தது. அதற்கு பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இறங்கு முகம் மட்டுமே இருந்தது.
ஜாம்பவான் லாரா, சந்தர்பால், சர்வான் போன்ற வீரர்கள் பிற்காலத்தில் ஆடினாலும், வெஸ்ட் இண்டீஸ் அணி அதற்கு பிறகு எந்தவொரு 50 ஓவர் உலககோப்பையையும் கைப்பற்றவில்லை. கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக வெஸ்ட் இண்டீஸ் நிலை தற்போது உள்ளது.
இலங்கை:
இலங்கை அணியின் நிலையும் வெஸ்ட் இண்டீஸ் நிலையை போன்றே உள்ளது. 1983ம் ஆண்டு 50 ஓவர் உலககோப்பையை இந்திய அணி கைப்பற்றிய பிறகு ஆசிய அணிகளாலும் உலககோப்பையை கைப்பற்ற முடியும் என்ற தன்னம்பிக்கை பிறந்தது. இதையடுத்து, 1996ம் ஆண்டு இந்தியாவும், பாகிஸ்தானும் இணைந்து நடத்திய இந்த போட்டியில் இலங்கை அணி கைப்பற்றியது.
1996ம் ஆண்டு உலககோப்பை களமிறங்கிய இலங்கை அணியில் ஜெயசூர்யா, கலுவிதரனா, குருசிங்கா, அரவிந்த் டி சில்வா, ரணதுங்கா, விக்ரசிங்கே, சமிந்தா வாஸ், முரளிதரன், தரமசேனா ஆகியோர் இருந்தனர், பந்துவீச்சு, பேட்டிங், ஃபீல்டிங் ஆகிய துறைகளில் மிரட்டிய இலங்கை அணி 2015ம் ஆண்டு காலகட்டம் வரை வலுவான அணியாகவே இருந்தது.
சங்ககரா, ஜெயசூர்யா, ஜெயவர்த்தனே, மலிங்கா, முரளிதரன், அட்டப்பட்டு, தில்ஷன், ஹெராத் ஆகிய வீரர்கள் ஓய்வு பெற்ற பிறகு இலங்கை அணியின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. எந்த ஒரு முக்கிய தொடருக்கு பங்கேற்பதற்கும் தகுதிச்சுற்று போட்டியில் ஆடிய பிறகே செல்லும் நிலைமையில் இலங்கை அணியின் நிலைமை உள்ளது.
முன்னாள் சாம்பியன்களான வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கை அணிகள் உலக கோப்பையை வெல்லும் தகுதியுள்ள அணியாக இருந்தாலும் உலககோப்பை தகுதிச்சுற்று போட்டியில் ஆடியபிறகே உலககோப்பை தொடருக்கு செல்லும் நிலை ஏற்பட்டிருப்பது அந்த நாட்டு ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையும், சோகத்தையுமே ஏற்படுத்தியுள்ளது.