Women’s T20 World Cup: சவாலுக்கு தயார்... களத்தில் சிங்கப்பெண்கள்.. மகளிர் டி20 உலகக்கோப்பை இன்று தொடக்கம்..!
5 முறை சாம்பியனான ஆஸ்திரேலொய அணிக்கே இந்த முறையும் கோப்பையை வெல்ல வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் 8வது மகளிர் டி20 உலகக்கோப்பை போட்டித் தொடர் இன்று தொடங்குகிறது. இதில் 10 அணிகள் பங்கேற்க உள்ளது.
கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் மகளிருக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. அதன்படி 8வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் தென்னாப்பிரிக்காவில் இன்று முதல் பிப்ரவரி 26 ஆம் தேதி வரை நடக்கிறது. இந்த தொடர் 2022 ஆம் ஆண்டு இறுதியில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் உலகக்கோப்பை கால்பந்து போட்டி காரணமாக இந்த தொடர் தள்ளிவைக்கப்பட்டிருந்தது.
இந்த தொடரில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் ஏ பிரிவிலும், இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், அயர்லாந்து ஆகிய அணிகள் பி பிரிவிலும் இடம் பெற்றுள்ளது. மொத்தம் 23 ஆட்டங்கள் கேப்டவுன், பார்ல், கெபேஹா ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளது.
விதிகளின்படி, லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெறும்.
Women's T20 World Cup starts from February 10th, All the best India. pic.twitter.com/fwSWo1NcJa
— Johns. (@CricCrazyJohns) February 4, 2023
இதனிடையே இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் சன் லூஸ் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி, சமாரி அட்டப்பட்டு தலைமையிலான இலங்கை அணியுடன் மோதுகிறது. இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு நடைபெறுகிறது. பிப்ரவரி 12 ஆம் தேதி நடக்கும் ஆட்டத்தில் இந்திய அணி தனது சந்திக்கிறது.
5 முறை சாம்பியனான ஆஸ்திரேலொய அணிக்கே இந்த முறையும் கோப்பையை வெல்ல வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் சமீபத்தில் முதலாவது ஜூனியர் பெண்கள் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி கைப்பற்றி வரலாறு படைத்தது. அதனால் இந்த உலகக்கோப்பையை கைப்பற்ற ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. மேலும் ஆஸ்திரேலிய அணிக்கு இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் சவால் அளிக்கலாம் என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.உலகக்கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.8.25 கோடியும், 2வது இடம் பெறும் அணிக்கு ரூ.4.25 கோடியும் பரிசு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.