Dinesh Karthik : டி-20 உலகக்கோப்பை இந்திய அணியில் இடம் பெறுவாரா தினேஷ் கார்த்திக்?
இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் தொடங்கவுள்ள டி-20 உலககோப்பை போட்டியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக தினேஷ் கார்த்திக் இடம் பெறுவாரா என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.
இந்திய கிரிகெட் அணி பலமான அணியாக இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.பலம் வாய்ந்த அணியாக இருந்தாலும், இந்திய அணியிலிருந்து தோனி மற்றும் யுவராஜ்க்குப் பிறகு மிடில் ஆர்டரில் ஃபினிஷர் பேட்ஸ்மேன் என யாரும் குறிப்பிடும் படி இல்லை. அவர்களுக்குப் பிறகு அந்த இடத்திற்கு வந்த ஜடேஜா மற்றும் ஹர்திக் சிறப்பாக விளையாடினாலும், ஃபினிஷர் எனும் நம்பிக்கை அளிக்கவில்லை.
டி-20 தொடரோ, ஒருநாள் தொடரோ மிடில் ஆர்டரில் சேசிங் செய்து வெற்றி பெற்றுத்தரும் ஃபினிஷர் என யாரும் இல்லை. அதனாலே பல தொடர்களை இந்திய அணி இழந்துள்ளது. ஆனால் தோனி இருந்தபோதே இருந்த தினேஷ் கார்த்திக், அணியில் இடம் பெறும் வாய்ப்பினை பெற முடியாமல் போனது. ஆனால் தற்போது தனது சிறப்பான ஆட்டத்தால் தனது இடத்தினை உலககோப்பை அணியில் உறுதி செய்து வருகிறார் தினேஷ் கார்த்திக்.
இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணிக்காக மிடில் ஆர்டரில் விளையாடிய தினேஷ் கார்த்திக் முக்கிய போட்டிகளில் மிகச்சிறப்பான அதிரடி ஆட்டத்தால் அணிக்கு வெற்றி சேர்த்துள்ளார். இதனால் பெங்களூரு அணியின் கேப்டன் டூபிளிசிஸ் ‘ தினேஷ் கார்த்திக் உலகத்தரமான வீரர். இவரிடம் தோனியைப் போன்ற நிதானமான ஆட்டத்தினைப் பார்க்கிறேன். தோனியைப் போல் மிகச் சிறந்த ஃபினிஷர்’ என கூறியிருந்தார். மிடில் ஆர்டரில் ஆடிய தினேஷ் கார்த்திக் மொத்தம் 330 ரன்கள் விளாசியுள்ளார்.
87வது இடம்
இதனை தொடர்ந்து, இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுடனான டி-20 தொடரில் விளையாடியது. இந்திய அணியில் இடம் பெற்றிருந்த தினேஷ் கார்த்திக் தனது நிலையான அதிரடி ஆட்டத்தால் அணியை நான்காவது போட்டியில் வெற்றி பெற 27 பந்துகளில் அவர் விளாசிய 55 ரன்கள் மிக முக்கியம். இந்த வெற்றி இல்லை என்றால், இந்திய அணி தன் சொந்த மண்ணில் தொடரினை இழந்து மண்ணைக் கவ்வியிருக்கும். தென்னாப்பிரிக்கா தொடருக்கு பிறகு ஐசிசி வெளியிட்டுள்ள தரவரிசை பட்டியலில் தினேஷ் கார்த்திக், 108 இடங்கள் முன்னேறி 87வது இடத்தினை பெற்றுள்ளார். அயர்லாந்துடனான தொடருக்குப் பிறகு அவரது இடம் இன்னும் உயர வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
துருப்புச் சீட்டு
இந்நிலையில் அயர்லாந்து தொடருக்குப் பிறகு, உலககோப்பைக்கான இந்திய அணியினை தேர்ந்தெடுக்கவுள்ள பிசிசிஐக்கு தினேஷ் கார்த்திக்கின் ஆட்டம் பெறும் நம்பிக்கையினை ஏற்படுத்தும். இந்த முறை உலககோப்பை அணியில் தினேஷ் கார்த்திக்குக்கான இடம் பிரகாசமாக இருக்கிறது. மிகவும் பலமான அணியாக உள்ள இந்திய அணி இந்த முறை உலககோப்பையை வெல்ல தினேஷ் துருப்புச் சீட்டாக இருப்பார்.