Mohammad Shami: ”இன்னும் என்னிடம் என்ன எதிர்பார்க்குறீங்க; வாய்ப்பு கிடைக்காதது ஏன்?” - முகமது ஷமி
MohAMMAD Shami: கிரிக்கெட் வீரர் முகமது ஷமி இந்திய அணியில் தனக்கு நிலையான இடம் கிடைக்காதது குறித்து பேசிய வீடியோ, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
MohAMMAD Shami: திறமைய நிரூபித்து கொண்டே இருந்தாலும் வாய்ப்பு கிடைக்கவில்லை என, கிரிக்கெட் வீரர் முகமது ஷமி ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
முகமது ஷமி பேட்டி:
இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்தார். அதில் பல்வேறு சுவாரஸ்யமான கேள்விகளுக்கு பதிலளித்தார். குறிப்பாக 2019 மற்றும் 2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடர்பாக, அவரது அனுபவங்கள் தொடர்பான கேள்விகளுக்கு ஷமி அளித்த பதில்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
திறமையை நிரூபித்து கொண்டே இருக்கிறேன் - ஷமி
நிகழ்ச்சியில் பேசிய ஷமி, “2019ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் நான் முதல் 4-5 ஆட்டங்களில் விளையாடவில்லை. அடுத்த ஆட்டத்தில், நான் ஹாட்ரிக் எடுத்தேன், பிறகு ஐந்து விக்கெட்டுகளையும், அடுத்த ஆட்டத்தில் நான்கு விக்கெட்டுகளையும் எடுத்தேன். 2023 உலகக் கோப்பை போட்டியிலும் இதேபோன்று நடந்தது. நான் முதல் சில ஆட்டங்களில் விளையாடவில்லை, பின்னர் ஒரு ஆட்டத்தில் 5 விக்கெட்டுகளையும், அடுத்த ஆட்டத்தில் நான்கு விக்கெட்டுகளையும், பிறகு மீண்டும் மற்றொரு ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினேன்.
இன்னும் என்னிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்? - ஷமி
நான் ஆச்சரியப்படும் ஒரு விஷயம் என்னவென்றால், ஒவ்வொரு அணிக்கும் சிறப்பாக செயல்படக்கூடிய வீரர்கள் தேவை. மூன்று போட்டிகளில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தினேன். என்னிடம் இருந்து இன்னும் என்ன எதிர்பார்க்கிறீர்கள்? என்னிடம் கேள்விகளும் இல்லை பதில்களும் இல்லை. வாய்ப்பு கிடைக்கும்போதுதான் என்னை நிரூபிக்க முடியும். நீங்கள் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தீர்கள், நான் மூன்று போட்டிகளில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தினேன். பின்னர் நியூசிலாந்திடம் தோற்றோம். மொத்தம் நான்கு போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2023-ல் நான் ஏழு போட்டிகளில் 24 விக்கெட்டுகளை வீழ்த்தினேன். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நான் என்னை நிரூபித்து கொண்டே இருந்தாலும், அணியில் எனக்கான நிலையான இடம் கிடைக்காதது ஏமாற்றம் அளிக்கிறது” என முகமது ஷமி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
உலகக் கோப்பையில் ஷமியின் சாதனைகள்:
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் முகமது ஷமி. இதுவரை 55 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள ஷமி, ஒருநாள் உலகக் கோப்பைகளில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்களில் பட்டியலில் உலக அளவில் ஐந்தாவது இடத்திலும், ஆசிய அளவில் மூன்றாவது இடத்திலும் உள்ளார். உலகக் கோப்பைகளில் 4 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே வீரரும் ஷமி தான். ஆனாலும், ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகளில் ஷமிக்கு நிலையான இடம் இருந்ததில்லை என்பதே வேதனையான விஷயம். கடந்த மூன்று ஒருநாள் உலகக் கோப்பைகளில், இந்திய அணி 28 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் ஷமிக்கு 18 போட்டிகளில் மட்டுமே வாய்ப்பு கிடைக்க, 15 போட்டிகளில் வாய்ப்பு கிடைத்துள்ளது.
உலகக் கோப்பையில் ஷமிக்கு கிடைத்த ஏமாற்றங்கள்:
2019ம் ஆண்டு உலகக் கோப்பையில் கோலி தலைமையிலான இந்திய அணியில், முதல் 4 போட்டிகளில் ஷமிக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கியதும், ஹாட்ரிக் எடுத்து அசத்தினார். இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 4 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகும், கடைசி லீக் போட்டியில் ஷமிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதியிலும் ஷமிக்கு வாய்ப்பு மறுக்கப்பட, இந்திய அணி தோல்வியுற்று கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது.
அதேபோன்று, 2023ம் ஆண்டு உலகக் கோப்பையிலும் ஹர்திக் பாண்ட்யா காயமடைந்து தொடரிலிருந்து வெளியேறும் வரை, முகமது ஷமிக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு, களமிறங்கி அந்த தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற பெருமைய ஷமி பெற்றது குறிப்பிடத்தக்கது.