Watch Video: சண்டைக்கு வந்த வங்கதேச வீரர்… வரிந்து கட்டிக்கொண்டு சென்ற இந்திய இளம் படை! வைரலாகும் வீடியோ!
பேடில் படும் முன் லேசாக பேட்டில் உரசியதால் அதற்கு அவுட் கொடுக்கப்பட்டது. ஆனால் இன்சைட் எட்ஜ் உறுதி ஆகும் முன்பே நிகின் ஆக்ரோஷமாக கொண்டாடியதால் வெறுப்படைந்த சௌமியா சர்கார் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஆண்கள் வளர்ந்து வரும் ஆசியக் கோப்பை 2023 அரையிறுதிப் போட்டியில், இந்தியா ஏ அணி வங்காளதேசம் ஏ அணிக்கு எதிராக 51 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இரு தரப்பினரும் வார்த்தைகளாலும் சண்டையிட்டுக் கொண்டது ஆட்டத்தில் மேலும் பரபரப்பை கூட்டியது. ஆட்டத்தின் இடையே இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா மற்றும் பங்களாதேஷின் அனுபவமிக்க பேட்டர் சௌமியா சர்க்கார் இடையே கடுமையான வாக்குவாதம் நடந்தது.
பரபரப்பான போட்டி
இந்தியா ஏ அணி 49.1 ஓவரில் 211 ரன்களுக்கு ஆட்டமிழந்த பிறகு, சுமாரான ஸ்கோரை வைத்து வெல்ல வேண்டிய அழுத்தம் இந்திய அணி பந்துவீச்சாளர்களுக்கு ஏற்பட்டது. சவாலை ஏற்று, இந்திய பந்துவீச்சு பிரிவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, ஒட்டுமொத்த வங்கதேச பேட்டிங் வரிசையையும் வெறும் 160 ரன்களுக்கு சிதைத்தது. போட்டி தீவிரமடைந்ததால், ஒவ்வொரு ரன்னும், விக்கெட்டும் முக்கியம் என்றான நிலையில், மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பங்களாதேஷின் பந்துவீச்சாளர்கள் ஒவ்வொருவரும் ஆட்டமிழந்தபோதெல்லாம் களத்தில் சூடான வார்த்தைகள் பறப்பதை காண முடிந்தது, இது பதற்றத்தையும், பரபரப்பையும் மேலும் தூண்டியது.
சௌமியா சர்கார் விக்கெட்
ஒரு குறிப்பிடத்தக்க திருப்புமுனையாக, ஆஃப்-ஸ்பின்னர் யுவராஜ்சிங் டோடியா, சௌமியா சர்க்காரை ஆட்டமிழக்கச் செய்து, இந்திய அணியை வெற்றியின் அருகில் கொண்டு சென்றார். பந்தை தடுத்தாட அவரது பேடில் பட்டு பந்து மேலே சென்றது. அதனை அற்புதமாக கெட்ச் செய்தார் நிகின் ஜோஷ். பேடில் படும் முன் லேசாக பேட்டில் உரசியதால் அதற்கு அவுட் கொடுக்கப்பட்டது. ஆனால் இன்சைட் எட்ஜ் உறுதி ஆகும் முன்பே நிகின் ஆக்ரோஷமாக கொண்டாடியதால் வெறுப்படைந்த சௌமியா சர்கார் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
கொண்டாட்டதால் எரிச்சல் அடைந்த சௌமியா
முக்கியமான திருப்புமுனை என்பதால் ஹர்ஷித்தும் உற்சாகத்துடன் கொண்டாட்டங்களில் சேர்ந்தார், இது சர்க்காரை எரிச்சலடையச் செய்தது. சர்க்கார் ஹர்ஷித்தை பார்த்து ஏதோ சொல்ல, நிலைமை மேலும் பரபரப்பானது. இரு வீரர்களுக்கும் இடையே வாக்குவாதம் வலுத்த நிலையில், நடுவருடன், இந்திய தொடக்க ஆட்டக்காரர் சாய் சுதர்சன் சேர்ந்து இருவரையும் தடுத்து சமாதானம் செய்தனர்.
Harshit Rana's aggression on Soumya Sarkar.
— Mufaddal Vohra (@mufaddal_vohra) July 21, 2023
Earlier Sarkar showed aggression when Yash Dhull got out, Rana gave it back! pic.twitter.com/zm634bl2ba
விலக்கி விடப்பட்ட சண்டை
நிலைமை மேலும் பரபரப்பாக மாறும் முன்னர் சர்கார் மற்றும் ஹர்ஷித் இருவரும் விலக்கி வைக்கப்பட்டனர். சர்க்கார் மைதானத்தை விட்டு வெளியேறியதும், அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி, கொண்டாடும் இந்திய அணியை நோக்கி மேலும் சில வார்த்தைகளைக் கூறினார். ஏற்கனவே பரபரப்பாக இருந்த போட்டிக்கு இந்த சம்பவம் கூடுதல் ட்ராமவை சேர்த்தது. இந்த போட்டியை வென்று இந்தியா ஏ இறுதிப் போட்டியில் இடம்பிடித்துள்ள நிலையில், அவர்கள் இப்போது பாகிஸ்தான் ஏ அணியை எதிர்கொள்ளத் தயாராகிவிட்டனர்.