வேற மாதிரி வேற மாதிரி.. கோலியும், ரோஹித்தும் மீண்டும் மிரட்டல்! இளம் வீரர்களுக்கு சவால் விடும் ஃபார்ம்
விஜய் ஹசாரே டிராபியில் சதம் அடித்த கோலி, ரோகித் நாங்கள்தான் இன்றளவும் ஒருநாள் கிரிக்கெட்டில் ஜாம்பவான் என்று நிரூபித்துள்ளனர்

விஜய் ஹசாரே டிராபியில் மீண்டும் களமிறங்கிய விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் டெல்லி மற்றும் மும்பை அணிக்காக அதிக ரன்கள் குவித்து ஆதிக்கம் செலுத்தினர்.
கடந்த பத்தாண்டுகளில் இந்திய கிரிக்கெட்டில் இருந்து வெளிவந்த இரண்டு பெரிய பெயர்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா. இவர்கள், அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
இந்திய கிரிக்கெட்டில் இளம் வீரர்களுக்கு வழிவிட வேண்டி இருவரும் ஓய்வு பெற வேண்டும் என்று சிலர் எதிர்பார்த்துள்ளனர். இவர்களும் ஒருநாள் கிரிக்கெட்டில் சில மாதங்களாக செம பார்மில் இருக்கின்றனர்.
இந்த வீரர்கள் தங்கள் ஆட்டத்தின் மூலம், இன்னும் நிறைய திறமைகள் மீதமுள்ளன என்பதை கடந்த ஒருநாள் தொடரில் தெளிவுபடுத்தியுள்ளனர்.
விஜய் ஹசாரே டிராபியில் இளம் வீரர்களுடன் போட்டியிடும் இந்த இரண்டு மூத்த வீரர்களும், உள்நாட்டு கிரிக்கெட்டுக்கு மீண்டும் வந்து தாங்கள் யார் என நிரூபித்துள்ளனர்.
ரோஹித் சர்மா 61 பந்துகளில் சதம் விளாசினார்
விஜய் ஹசாரே டிராபியில் சிக்கிமுக்கு எதிரான போட்டியில் மும்பை அணிக்காக தொடக்க வீரராக களமிறங்கிய ரோஹித் சர்மா 61 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். ஹிட்மேன் 94 பந்துகளில் 155 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெற செய்தார். ஒரு இன்னிங்ஸில் 18 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்கள் அடங்கும். ஆட்டநாயகன் விருதும் பெற்றார். ஐபிஎல்லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய இளம் வீரர் அங்கிரிஷ் ரகுவன்ஷி, அவருடன் 58 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
விஜய் ஹசாரே கோப்பையில் விராட் கோலி 16,000 ரன்களைக் கடந்தார்
விஜய் ஹசாரே டிராபியில் ஆந்திராவுக்கு எதிராக டெல்லி அணிக்காக விளையாடிய விராட் கோலி , 299 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடினார். பேட்டிங் வரிசையில் 3வது இடத்தில் களமிறங்கிய அவர், 16,000 ரன்களை எட்டினார். பின்னர் அவர் சதம் அடித்து 101 பந்துகளில் 131 ரன்கள் எடுத்து அணி வெற்றிக்கு வித்திட்டார். அவர் 14 பவுண்டரிகளையும், 3 சிக்ஸரையும் அடித்தார்.
ரோஹித் சர்மா, விராட் கோலி இருவரும் சதம் அடித்ததன் மூலம் நாங்கள் ஜாம்பவான் என மீண்டும் நிரூபித்துள்ளனர். இவர்களின் இந்த ஃபார்ம் வரும் ஒருநாள் கோப்பை வரை தொடர வேண்டும் என்று இருவரின் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.




















